வசூலுக்கு ஏற்ப சம்பளம்... நடிகர் சங்க கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டவை ஒரு பார்வை

பல வருடங்களாக திரைத்துறையில் இருந்துவரும் பிரச்சனைகள் குறித்து பேசவும், தீர்வை நோக்கி நகரவும் நடிகர் சங்கம் முயற்சி எடுத்துள்ளது.

பாபு

நடிகர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள பார்க் நட்சத்திர விடுதியில் நடந்தது. நிறைய நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என பெரிய ஹாலாக முன்பதிவு செய்திருந்தனர். தயாரிப்பாளர்களின் சுமையை குறைக்கும்வகையில் என்னென்ன செலவுகளை நடிகர்கள் கட்டுப்படுத்தலாம், படங்களின் வசூலுக்கு ஏற்ப சம்பளத்தை எப்படி நிர்ணயிக்கலாம் என பல விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

நடிகர்களுடன் வரும் உதவியாளர்களுக்கு – குடை பிடிப்பவர், டச்சப் செய்கிறவர், மேக்கப்மேன், ஹேர்ட்ரெஸ்ஸர் – தயாரிப்பாளர்களே சம்பளம் தருகிறார்கள். அதுவும், குடை பிடிப்பவருக்கு தினம் ஒன்பதாயிரம் என்ற அளவில். சூர்யா, கார்த்தி, விஷால் போன்ற சில நடிகர்கள், தங்கள் உதவியாளர்களின் சம்பளத்தை தாங்களே தருவது என்று ஏற்கனவே முடிவெடுத்து அறிவித்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் முக்கியமாக பேசப்பட்ட பெயர், நயன்தாரா. அவர் படப்பிடிப்புக்கு வந்தால் அவரது உதவியாளர்களுக்கு சம்பளமாக அறுபதாயிரம் ரூபாய் தினம் தயாரிப்பாளர் தர வேண்டியிருக்கிறது. இனி பெப்சி நிர்ணயித்த சம்பளத்தை மட்டுமே தருவது என தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர். அது நடைமுறைக்கு வந்தால் அறுபதாயிரம் என்பது பதினைந்தாயிரத்தில் முடிந்துவிடும். இதற்கு அனைத்து நடிகர்களும் கூட்டத்தில் சம்மதம் தெரிவித்தனர்.

படத்தின் வசூலை பொறுத்து சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்கும் நடிகர்கள் ஒப்புதல் அளித்தனர். ஆனால், இந்த கூட்டத்தில் பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதாவது ரஜினி, விஜய், அஜித், விக்ரம் போன்றவர்கள். இவர்களின் சம்பளம் மொத்த பட்ஜெட்டில் பாதியை தாண்டிவிடுகிறது. வசூலைப் பொறுத்து சம்பளம் என்பதை இவர்கள் ஏற்பார்களா? கூட்டத்தில் கலந்து கொண்டால் எந்தப்பக்கமாவது தலையை சாய்த்துதான் ஆக வேண்டும். அதன் காரணமாகவே இவர்கள் கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

மேலும், திரையரங்குகளிலிருந்து வரும் வசூலை மட்டுமே இவர்கள் கணக்கில் கொள்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களின் பிறமொழி உரிமைகள், டிஜிட்டல் உரிமை, சேட்டிலைட் உரிமை, இந்தி டப்பிங் மற்றும் டிஜிட்டல் உரிமை ஆகியவற்றை மனதில் வைத்தே பெரும் தொகையை சம்பளமாக கேட்கிறார்கள். உதாரணமாக, தோல்விப்படமான பைரவாவின் இந்தி டப்பிங் மற்றும் டிஜிட்டல் உரிமை மட்டும் 11 கோடிகளுக்கு விலைபோனது. விஜய் நடித்த படம் என்பதாலேயே இவ்வளவு பெரிய தொகை. இதையெல்லாம் கணக்கில் வைத்தே விஜய் 25 முதல் 30 கோடிகள் சம்பளம் கேட்கிறார். இதனை எப்படி தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் கட்டுப்படுத்தப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்வி.

ஒரு படம் நன்றாக ஓடுகிறது. அதை வைத்து அடுத்தப் படத்துக்கு சம்பளம் நிர்ணயிக்கிறார்கள். ஆனால், அடுத்தப் படம் தோல்வியடைகிறது. இப்போது நஷ்டத்தை யாரிடம் வசூலிப்பார்கள்?

வசூலை பொறுத்து சம்பளம் என்பதில் மேலே உள்ள குழப்பங்கள் உள்ளன. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகே இந்த குழப்பங்கள் தெளிவடையும்.

நடிகர்களுக்கு பேசிய சம்பளத்தை மொத்தமாக அளிக்காமல் பல தவணைகளில் அளிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனை பரவலாக அனைத்து நடிகர்களும் வரவேற்றனர். இது நடைமுறைக்கு வந்தால் தயாரிப்பாளர்களின் சுமை குறையும்.

நடிகர்கள் இனி மீடியாவுக்கு பேட்டி தந்தால் பணம் வசூலிப்பது என்ற திட்டமும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இப்போது விஜய் அவார்ட்ஸ் போன்ற தனியார்கள் நடத்தும் திரைத்துறை சார்ந்த விழாக்களில் நட்சத்திரங்கள் கலந்துகொள்ள அவர்களின் பிரபலத்தை பொறுத்து பணம் தரப்படுகிறது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் பணம் தருகிறார்கள். ஆனால், நட்சத்திரங்கள் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு அளிக்கும் பேட்டிகளுக்கு அந்த மீடியாக்கள் காசு தருவதில்லை. இனி காசு வாங்க வேண்டும் என்கிறது நடிகர் சங்கம். பேட்டி தரும் நட்சத்திரம் அந்த பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு தேவையில்லை என்றால் அந்தப் பணத்தை நடிகர் சங்கம் பெற்றுக் கொள்ளும்.

இது விஜயகாந்த் சங்கத்தலைவராக இருக்கையில் கொண்டுவரப்பட்டு தோல்வியடைந்த திட்டம். தொலைக்காட்சியில் நடிகர்கள் அதிகம் தலைக்காட்டுவதால் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவதில்லை என்ற விஜயகாந்தின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்று அவர் நடிகர்களுக்கு தடை விதித்தார். அறிவியல் தொழில்நுட்பத்தை புறக்கணிக்கக் கூடாது, அது தவறு, தொழில்நுட்பத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்று கமல் தடையை மீறி தொலைக்காட்சிக்கு பேட்டி தந்தார். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது ஆளவந்தான் படம் தொடங்கியது. பிரச்சனை வராமலிருக்க தாணு அபராதத் தொகையை கட்டினார். கொஞ்ச நாளிலேயே விஜயகாந்தின் தடை பிசுபிசுத்தது. பேட்டி கேட்டால் காசு கேளுங்கள் என்று அவர் சொன்னதும் நடைமுறைக்கு வரவில்லை.

தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் பேட்டி வருவது அந்த ஊடகங்களுக்கு மட்டுமில்லை, நடிகர்களுக்கும் விளம்பரமே. வளர்ந்துவரும் ஒரு நடிகர் பேட்டிக்கு காசு என்று விலைபேசுவாரா என்பது கேள்விக்குறி. நமது பேட்டி வராதா என்று காத்திருப்பவர்களே இங்கு அதிகம். அதனால் பேட்டிக்கு காசு என்பது எவ்வளவு தூரம் நடைமுறை சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். (நடிகர் சங்கம் மற்றும் நடிகர்கள் தங்களின் கருத்துகளை சொல்ல ஊடகங்களை அழைக்கிறார்கள். அவர்கள் அறிக்கைகளை, கருத்துகளை ஊடகங்களில் வெளியிட ஊடகங்களுக்கு அவர்கள் காசு தருவார்களா?).

நடிகர் சங்கக்கூட்டத்தில் மேலே உள்ள விஷயங்கள் விவாதிக்கப்பட்டனவே தவிர கறாரான ஒரு முடிவு எட்டப்படவில்லை. தங்களது கருத்துகளை நடிகர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பி, அவர்களுடன் கலந்துரையாடியே ஒரு தீர்மானத்துக்கு வரவிருக்கிறார்கள்.

பல வருடங்களாக திரைத்துறையில் இருந்துவரும் பிரச்சனைகள் குறித்து பேசவும், தீர்வை நோக்கி நகரவும் நடிகர் சங்கம் முயற்சி எடுத்துள்ளது. அதுவே ஆரோக்கியமான வரவேற்க வேண்டிய அம்சமாகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close