சர்ச்சைக்குரிய 'சர்கார்' பட போஸ்டரை நீக்கியது சன் பிக்சர்ஸ்!

விஜய்யின் சர்கார் பட போஸ்டரை நீக்கிய சன் பிக்சர்ஸ்

துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு விஜய் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகும் படம் ‘சர்கார்’. விஜயின் 62வது படமான இதில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். வரலட்சுமி, ராதாரவி போன்றோரும் நடிக்கிறார்கள்.

விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி இப்படத்தின் தலைப்பு கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிடப்பட்டது. இதில் விஜய் புகைப் பிடிப்பது போன்ற ஒரு போஸ்டர் வெளியானது. அந்தப் போஸ்டர் குறித்து அன்புமணி ராமதாஸ் “இனிமேல் புகைப் பிடிப்பது போன்று நடிக்கமாட்டேன் எனக் கூறிவிட்டு, மறுபடி இப்படி நடந்து கொள்கிறீர்களே?” என விஜய்யைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், அந்த புகைப்படங்களை நீக்குமாறு தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் புகையிலைத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு, விஜய், முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகிய மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்துவதில் பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இதை திரையுலகினரும் ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. இதன் எதிரொலியாக அந்தப் போஸ்டர்களை தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களிலிருந்து நீக்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.

×Close
×Close