பெண்களை பாலியல் தொல்லையில் இருந்து காக்க தென்னிந்திய திரையுலகில் புதிய அமைப்பு

நடிகைகள் மற்றும் சினிமாவில் பணியாற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்காகத் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லைகள் இருப்பதாகச் சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட சர்ச்சை, இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த விவகாரத்தில் பாலிவுட், டாலிவுட் மற்றும் கோலிவுட் என அனைத்துத் திரையுலகிலும் அடுக்கடுக்காக சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இது போன்ற குற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, நடிகைகள் மற்றும் சினிமாவில் பணியாற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்காகத் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நடிகைகள் பலரும் தொடர்ந்து புகார் கூறி வரும் நிலையில் திரைத்துறையில் பணியாற்றும் பெண்களுக்கான தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் கவுரவ ஆலோசகராக நடிகை ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார். வைஷாலி சுப்பிரமணியம் தலைவராகவும், ஏஞ்சல் சாம்ராஜ் துணைத்தலைவராகவும் , வி.வி.ஈஸ்வரி பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திரைத்துறையில் பெண்களுக்கான தனி அமைப்பு உருவாக்கப்பட்டது குறித்து கூறிய இந்த அமைப்பின் நிர்வாகிகள், “சினிமாவில் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. ஆனால் தனக்கு நடக்கும் கொடுமைகளை அமலாபால், சனுஷா, ஸ்ரீரெட்டி போன்ற ஒரு சில நடிகைகளே துணிச்சலாக வெளியில் சொல்ல முன் வருகின்றனர். பாலியல் கொடுமைகளை வெளியில் சொல்லாதவர்கள் திரைத்துறையில் நிறைய பேர் இருக்கின்றனர். இது தவிர சினிமாவில் பல துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம் இல்லை. பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.” எனத் தெரிவித்தனர்.

×Close
×Close