கோவையில் நடந்த மெய்யழகன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா இதை அறிவித்தார். 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்றது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
விழாவில் பேசிய நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா, "கங்குவா படம், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக, 1000-க்கும் மேற்பட்டோரின் கடின உழைப்பில் உருவாகியுள்ளது. படம் அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.
ஆனால் அன்றைய தினத்தில் மூத்தவர், நான் பிறக்கும்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது. அதனால் சூப்பர் ஸ்டார் படம் வர்றதுதான் சரியாக இருக்கும்.
கங்குவா ஒரு குழந்தை. அது எப்போது ரிலீஸ் ஆகின்றதோ, அப்போதுதான் அதன் பிறந்த நாள். அன்றைய தினத்தை பண்டிகையாக நீங்கள் கொண்டாடுவீங்கனு நம்புறேன்" என்று பேசினார்.
தொடர்ந்து கங்குவா திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக வில்லை எனவும், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்தார்.
ரஜினி நடிக்கும் வேட்டையன், சூர்யாவின் கங்குவா ஆகிய 2 படங்களும் அக்.10 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கங்குவா ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“