Advertisment

சூர்யா பற்றிய விமர்சனத்தை மன்னிக்கவே முடியாது: சன் டிவிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்!

சன் மியூசிக் தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரம் குறித்து கேலியாக பேசியதையடுத்து, சன் டிவிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சூர்யா பற்றிய விமர்சனத்தை மன்னிக்கவே முடியாது: சன் டிவிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்!

சன் மியூசிக் தொகுப்பாளினிகள் இருவர், நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து கேலியாக பேசியதையடுத்து, சன் டிவிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisment

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக் தொகுப்பாளினிகள் இருவர், நேரலை நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து கேலியாக பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, தொகுப்பாளினிகளின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சூர்யாவின் ரசிகர்கள் சிலர் சன் தொலைக்காட்சி நிறுவனம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதை கேள்விப்பட்ட சூர்யா, "தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற” என தனது ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார்.

இந்த நிலையில், மேற்படி விமர்சனத்தை வெளியிட்ட தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

publive-image

நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது,"சமீபத்தில் உங்களது சேனலில் வெளியான சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் எங்கள் நடிகர் சங்கத்தின் மதிப்பிற்குரிய மூத்த உறுப்பினர் திரு.சூர்யாவின் உருவ அமைப்பைப் பற்றி கேலி செய்யும் விதமாக இரு இளம் பெண்கள் பேசிய தொகுப்பு வெளியானது. தனிப்பட்ட ஒருவரை பற்றி இதைப் போன்ற அநாகரிகமான தேவையற்ற விமர்சனங்கள் வெளியாவது உங்களைப் போன்ற சேனல்களுக்கு பொருத்தமானது அல்ல.

சட்டத்தின்படி, இதுர சராசரி குடிமக்களை போல் ஒரு நடிகருக்கும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, நாகரிகம், அடிப்படை மரியாதையுடன் கூடிய சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எனவே மேற்கண்ட காட்சியை வெளியிட தங்களது நிறுவனம் அனுமதித்திருக்க கூடாது என கருதுகிறோம்.

ஊடகத்துறையில் எங்களது நீண்டகால கூட்டாளி என்னும் வகையில் உங்களது சன் குழும நிகழ்ச்சிகளில் எங்களது பணிகளைப் பற்றிய ஆக்கப்பூர்வமான - அநாகரிகமான எவ்வித விமர்சனங்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களது மூத்த உறுப்பினரும், மரியாதைக்குரிய நடிகருமான ஒருவரை காயப்படுத்தும் வகையில், அர்த்தமில்லாத இதைப்போன்ற நிகழ்ச்சிகளை நாங்கள் சகித்துக் கொள்ளவோ, மன்னிக்கவோ முடியாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

மேற்கண்ட நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற கசப்பான காட்சிகள் உங்களது குழுமத்திற்கு சொந்தமான சேனல்களில் இனி ஒளிபரப்பாகாது என்ற உத்தரவாதத்தை நீங்கள் அளிப்பீர்கள் என வலியுறுத்துகிறோம்.

நமக்கிடையேயான உறவில் கறைபடியாத வகையில் உடனடியாக, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்" என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் இளைய சகோதரரும், நடிகருமான கார்த்தி, நடிகர் சங்கத்தில் பொருளாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Surya Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment