மீண்டும் ரிலீசாகிறது 'அஞ்சான்'!

தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு ஏற்படும் பீதியை இங்கிருந்தே எங்களால் உணர முடிகிறது. அதே பீதியோடு தான் நாங்களும் இருக்கிறோம். சூர்யாவின் 42-வது பிறந்தநாள் வரும் ஜுலை 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விஜய்- அஜித்திற்கு சமமான ரசிகர் கூட்டம் சூர்யாவிற்கு கிடையாது என்றாலும், அவர்களுக்கு அடுத்த இடத்தில் தான் சூர்யா உள்ளார். வருடாவருடம் அவரது பிறந்தநாளும் மிகச் சிறப்பாக ரசிகர்களால் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோன்று இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாட்டமாக, சூர்யாவின் ‘அஞ்சான்’ திரைப்படத்தை அவரது ரசிகர்கள் மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர். தமிழக ரசிகர்கள் அல்ல…. கேரள ரசிகர்கள். இதற்கான என்ட்ரி பாஸ் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘அஞ்சான்’ வெளியானது. அந்த எதிர்பார்ப்பிற்கு காரணம், அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி தான். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த லிங்கு, “நான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் படத்துல இறக்கியிருக்கேன்” என்று தெரிவித்தார். இதைக் கூட, இயக்குனரின் நம்பிக்கை என்று கூறலாம். ஆனால், படம் ரிலீசாவதற்கு முன்பே வெற்றிவிழா கொண்டாடி ரசிகர்களிடம் மாட்டிக் கொண்டனர்.

படக்குழு ஏற்படுத்திய பில்டப்பில் 10 சதவிகிதம் கூட படத்தில் இல்லை. இதனால், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சரமாரியாக இயக்குனர் லிங்குசாமியை கலாய்க்க தொடங்கிவிட்டனர். அவரே வேதனைப்பட்டு பேசும் அளவிற்கு கலாய்த்துவிட்டனர். இந்நிலையில், மூன்று வருடங்கள் கழித்து கேரள ரசிகர்கள், தற்போது மீண்டும் அஞ்சான் படத்தை ரீ-ரிலீஸ் செய்கின்றனர்.

இதிலிருந்து என்ன தெரியுது? தமிழை விட, மலையாளத்தில் தான் ‘கொலைவெறி’ ரசிகர்கள் சூர்யாவிற்கு உள்ளனர் என்பது கண்கூடாக தெரிகிறது. இந்தமுறையாவது, படம் வெற்றி அடைய நாம் வாழ்த்துவோம்.

×Close
×Close