சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம்
ஆர்யா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாக பெரிய வரவேற்பை பெற்ற படம் சார்ப்பட்டா பரம்பரை. ஆர்யா, பசுபதி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் ஆங்கில குத்துச்சண்டையை மையமாக வைத்து திரைக்கதை அமைச்சப்பட்டிருந்தது. இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். இந்நிலையில், தற்போது சார்ப்பட்டா பரம்பரை படத்தின் 2-ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதிலும் ஆர்யாவே ஹீரோவாக நடிக்கும் நிலையில், இந்த படத்தை தியேட்டரில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சார்ப்பட்டா பரம்பரை படம் ஒடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மகனுக்கு விஜய் படத்தை காட்டும் பிரபல நடிகை
பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதன்பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்த காஜல்அகர்வால் கடந்த 2021-ம் ஆண்டு கவுதம் என்பரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு தற்போது ஆண் குழந்தை உள்ள நிலையில், கமலுடன் இந்தியன் 2 படத்தில் காஜல் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 8 வயதாகும் வரை தனது மகனுக்கு எந்த படத்தையும் காட்டுவதில்லை என்றும், அதன்பிறகு விஜயுடன் நான் நடித்த துப்பாக்கி படத்தை காட்டுவேன் என்றும் கூறியுள்ளார்.
வெப் சீரிஸில் நடிகை ஜோதிகா
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் வெப் சீரிஸில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். தி பேமிலி மேன் சமந்தா, ஃபர்சி விஜய்சேதுபதி, நவம்பர் ஸ்டோரி தமன்னா உள்ளிட்டோர் ஏற்கனவே வெப் சீரிஸில் நடித்துள்ள நிலையில், இந்த பட்டியலில் தற்போது ஜோதிகா இணைந்துள்ளார். இந்தியில் வெளியாகும் இந்த வெப் சீரிஸை சோனாலி போஸ் இயக்க உள்ளதாகவும், தாபா காட்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக தமிழில் உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்த ஜோதிகா தற்போது மலையாளத்தில் காதல் தி கோர் என்ற படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார்
ஏ.கே. 62 படத்தில் வில்லனாகும் ஆர்யா?
துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் வில்லன் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் அருள்நிதி, அருண்விஜய் ஆகியோர் வில்லன்களாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இதனிடையே தற்போது இந்த படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்த ஆர்யா ஆரம்பம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித் நடித்த படத்தை தவறவிட்டாரா பிரஷாந்த்?
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான தீனா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். லைலா, சுரேஷ்கோபி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் பிரஷாந்த் தான் என்றும், அப்போது அவர் பல படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil