Advertisment

11-ம் ஆண்டில் சிவகார்த்திகேயன்: நம்மில் இருந்து உருவான ஹீரோ

"சிவகார்த்திகேயன்". விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும்போதே அவரது நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

author-image
WebDesk
New Update
11-ம் ஆண்டில் சிவகார்த்திகேயன்: நம்மில் இருந்து உருவான ஹீரோ

பொதுவாகவே நட்சத்திரங்கள் அனைவரும் சினிமாவிற்கு வந்த பிறகுதான் பிரபலம் ஆவார்கள்.ஆனால் இவரோ பிரபலமாகிய பிறகுதான் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

Advertisment

தொகுப்பாளர்களின் ஹீரோ:

இன்று தமிழ் சினிமாவின் "பொக்கிஷமாக" பார்க்கப்படும் "சிவகார்த்திகேயன்". விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும்போதே அவரது நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. கலகலப்பான உரையாடல்கள்,காமெடி பஞ்சஸ்,மற்றவர்களை பாதிக்காத வகையில் கலாய்க்கும் திறன் என தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்தனர். "ஒரு தனி மனிதனுக்காக ஒரு நிகழ்ச்சியையே மக்கள் பார்ப்பார்கள்" என்ற நிலையை உருவாக்கி இன்றிருக்கும் பல தொகுப்பாளர்களுடைய ஹீரோவாக மாறி இருப்பவர் தான் நம்ம வீட்டு பிள்ளை "சிவகார்த்திகேயன்".

மெரினாவில் தொடங்கிய எழுச்சி:

பிப்ரவரி 3(2012) இந்த நாளை சிவகார்த்திகேயன் ரசிகர்களால் கண்டிப்பாக மறக்க முடியாது. ஏனென்றால் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக இருக்கும் சிவகார்த்திகேயன், இதே நாளில் தான் பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் "மெரினா"படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அப்பாவியான முகம், எதார்த்தமான நடிப்பு, பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கும் தோற்றம், கலகலப்பான வசனங்கள் என படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி ரசிகர்களின் மனதில் கோட்டை கட்டுவதற்கான முதல் செங்கல்லை மெரினா படத்தின் மூலம் எடுத்து வைத்தார்.அதன் பிறகு தனுஷுடன் "3" படத்தில் நடித்து அவருடைய காமெடி திறமையையும் வெளிப்படுத்தியிருந்தார் பின் "மனம் கொத்தி பறவை,கேடி பில்லா கில்லாடி ரங்கா"போன்ற படங்களில் நடித்து மக்களிடையே கதாநாயகன் அந்தஸ்தையும் பெற்றார்.

பாக்ஸ்-ஆபீஸ் கிங்:

2013ஆம் ஆண்டு அவர் நடிப்பில் "எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம்" ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்து வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்து தமிழ் சினிமாவில் அவருக்கான புதிய மார்க்கெட்டை உருவாக்கியது. இவ்விரு படங்களின் பாடல்களும் வெளியாகி ஹிட் அடித்ததால் படத்திற்கு இவை மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது. இப்படத்திலிருந்து தான், சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே பாடல்கள் ரசிக்கும்படி இருக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உதித்தது. இவரால் காமெடி மட்டுமே செய்ய முடியும் என்பது போல விமர்சனங்கள் எழுந்த நிலையில்,அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் "காக்கி சட்டை" படத்தில் ஆக்சன்,காமெடி, காதல், சென்டிமென்ட் என தன் கமர்சியல் பாக்ஸ்ஆபீஸ் வேட்டையை தொடங்க ஆரம்பித்தார். பிறகு வெளிவந்த "ரஜினி முருகன்"படம் கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்து இவருக்கென்று தனி குடும்ப ரசிகர்களும், குழந்தை ரசிகர்களும் உருவாக மிகப்பெரிய காரணமாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் கிராமங்களில் பெருமளவு வரவேற்கப்பட்டிருந்தது.

எதிர்ப்புகளால் எழுந்த நாயகன்:

ஒருவர் மிகப்பெரிய வெற்றி நோக்கி பயணப்படுகிறார், என்றாலே அப்பயணத்தில் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சந்திக்காமல் செல்ல முடியாது என்பதற்கேற்ப  தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளிலும், கேரக்டர்களிலும் நடிக்கிறார் என்பதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் வழக்கம் போல அந்த விமர்சனத்திற்கு தனது அடுத்தடுத்த படங்களில் பதிலடி கொடுத்தார்."ரெமோ" படத்தில் துணிச்சலாக பெண் வேடம் அணிந்து ரசிகர்களை மனதில் ரெஜினாவாக கொள்ளையடித்து,  "வேலைக்காரன்" படத்தில் சமூக அக்கறையுள்ள இளைஞனாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை மக்களுக்கு நிரூபித்தார் சிவகார்த்திகேயன்.

அதன் பிறகு மக்களிடையே இவருக்கான செல்வாக்கு பல மடங்கு உயரத் தொடங்கியது. இவருடைய படங்கள் வணிக ரீதியாக அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டேயிருந்தன. இவரின் அசுர வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத சிலரால் இவருடைய படங்களுக்கு பிரச்சனைகள் வரவும் ஆரம்பித்தது. "ரெமோ" படத்தின் விழாவில் "இன்னும் எவ்வளவு பிரச்சனை கொடுப்பீர்கள்" என்று மேடையிலேயே பகிரங்கமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதன் பிறகு,"தான் சரியான வழியில் சென்று கொண்டிருப்பதால் தான், தனக்கு பிரச்சனைகள் வருகிறது.ஆனால் மக்களும்,ரசிகர்களும் எப்போதும் என்னை ஆதரிப்பார்கள்" என்று உணர்ந்த சிவகார்த்திகேயன் அதன் பிறகு வந்த எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் மிகவும் சுலபமாக கையாண்டு வெற்றி படிக்கட்டில் ஏறிக்கொண்டே இருக்கிறார்.

நன்றி மறவா நாயகன்:

கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் திரையரங்கு உரிமையாளர்களும், பணியாளர்களும் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்நிலையில் தான் இவர் நடிப்பில் உருவாகியிருந்த "டாக்டர்"படம் வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. மிகப்பெரிய விலை கொடுத்து இப்படத்தை வாங்க பல ஓ.டி.டி நிறுவனங்கள் இவரை அணுகியபோதும் தன்னை இந்த அளவுக்கு உயர்த்திய மக்களுக்காகவும்,  திரையரங்கு உரிமையாளர்களுக்காகவும் இப்படம் வெளிவரும் என்ற முடிவெடுத்து தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்து சினிமாவிற்கான தன் நன்றியை வெளிப்படுத்தியிருந்தார்

சிவகார்த்திகேயன். கொரோனா துயரத்திலிருந்த மக்களுக்கு இப்படம் மிகப்பெரிய சிரிப்பு விருந்தையும்,மன அமைதியையும் கொடுத்ததாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து சிவகார்த்திகேயனுக்கு நன்றியையும் தெரிவித்திருந்தனர். படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் மைல்கல்லாகவும் இப்படம் அமைந்தது. மேலும் இப்படம் இவரை,"தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர அந்தஸ்தை" பெறவும் உதவியது. அதன் பிறகு சமீபத்தில் வெளிவந்த டான், பிரின்ஸ் படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.குறிப்பாக டான் படம் 100 கோடிக்கு மேல் கலெக்ட் செய்து அவருக்கு ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்திருந்தது.

தமிழ் சினிமாவின்  பிரின்ஸ்;

சினிமாவிற்கு வந்து வெறும் 11 ஆண்டுகளிலேயே இந்த இமாலய உச்சத்தை அடைந்திருக்கும் சிவகார்த்திகேயனின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருப்பது "ஒரு நடிகராக இந்த மக்களை தன்னால் என்டர்டைன் செய்ய முடியும் என அவர் மீது அவர் வைத்த நம்பிக்கை" மட்டும்தான். எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் தன் திறமைகளை மட்டுமே நம்பி தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமாகி பின் சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி பல விமர்சனங்களைக் கடந்து, தன்னுடைய தொழிலை உண்மையாக நேசித்து ரசிகர்களுக்காகவும், தன்னை பிடித்த மக்களுக்காகவும் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து இன்று தமிழ் சினிமாவின் பிரின்ஸாக இருக்கும் "சிவகார்த்திகேயன்" இன்னும் பல இமாலய வெற்றிகளை பெற மனமார்ந்த வாழ்த்துகள்.

நவீன் குமார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment