நடிகரும் அரசியல் ஆலோசகருமான சோ.ராமசாமியை கடந்த சில வருங்களுக்கு முன்பு டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனது பள்ளிப்பருவ நிகழ்வுகளை பகிர்ந்துகொண்ட வீடியோ பதிவு தற்போது வைரைலாகி வருகிறது.
சென்னை மைலாப்பூரில் 1934-ம் ஆண்டு பிறந்தவர் சோ.ராமசாமி. நடிகர் உடகவியலாளர், வழக்கறிஞர், பத்திரிக்கை எழுத்தாளர் இயக்குனர் எழுத்தாளர் என பன்முக திறமைக கொண்ட இவர், 1963-ம் ஆண்டு வெளியான பார் மகளே பார் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட அப்போதைய முன்னணி நடிகர்களில் இருந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேடை நாடகங்களில் வல்லவராக இருந்த சோ.ராமசாமி பல நாடகங்களை இயக்கியுள்ளார். முகமது பின் துக்ளக், உண்மையே உன் விலை என்ன? யாருக்கும் வெட்கம் இல்லை உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.

அரசியல் தொடர்பான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை தைரியமாக முன்வைக்கும் சோ.ராமசாமி கடந்த 1970-ம் ஆண்டு முதல் துக்ளக் என்ற பத்திரிக்கைய நடத்தி வந்தார். மேலும் 1976-ம் ஆண்டில் இருந்து பிக்விக் என்ற ஆங்கில இதழை நடத்தி வந்த இவர், சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேடை நாடகங்கள், அரசியல் கலை என பன்முக திறமையாளராக இருந்த சோ 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.
வாலிப பருவத்தில் தலையில் முடியுடன் இருந்த சோ.ராமசாமி அதன்பிறகு முழுவதும் மொட்டை தலையுடன் தான் இருந்தார். இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜெயா டிவியின் ஆட்டோகிராஃப் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சோ.ராமசாமி தனது தலையில் முடி கொட்டியதற்காக காரணம் என்ன என்பது குறித்து பேசியுள்ளார்.
ஆட்டோகிராஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை சுஹாசினி, சோவிடம் பள்ளி பருவ வாழக்கை குறித்து கேட்டுள்ளார். அப்போது பள்ளியில் மேசைமீது எப்போதும் சாய்ந்தே இருக்கும் ஒரு வாத்தியாரை அவர் மேசை மீது சாயாமல் இருக்க மேசையில் இன்க் தடவி வைத்துவிட்டேன். ஆனால் அப்போது என் கிளாஸ் மாணிட்டர் சீதாராமன் வந்து இன்க்கை ஒட்டிக்கொண்டு சென்றுவிட்டார்
அதன்பிறகு அவர் ஹெட்மாஸ்டரிடம் போய் சொல்லி பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. அதேபோல் கிளாஸில் எப்போது நான் என்ன பண்ணாலும் சீதாராமன் என்னை கொட்டிவிடுவான். அதனால்தான் என் தலையில் முடி சீக்கிரம் கொட்டிவிட்டது எனறு கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்ற சீதாராமனும் அதை ஒப்புக்கொண்டார். இந்த நிகழ்ச்சி தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil