1994-ம ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவின் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நாட்டாமை படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் பார்த்திபன் தான். அவர் மறுத்துவிடவே அந்த வாய்ப்பு சரத்குமாருக்கு சென்றுள்ளது. பார்த்திபன் இந்த படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
1990-ம் ஆண்டு வெளியான புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ்.ரவிக்குமார். தொடர்ந்து சேரன் பாண்டியன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய இவர், 1994-ம் ஆண்டு நாட்டாமை என்ற படத்தை இயக்கியிருந்தார். சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், நடிகர் விஜயகுமார் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
விஜயகுமார் கேரக்டரை பார்த்து ஆச்சரியப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக்கான நாட்டாமை படத்தில் விஜயகுமார் கேரக்டரில் நடித்திருந்தார். குஷ்பு மீனா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படம் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றியை பெற்றிருந்தது. மேலும் தமிழக அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான மாநில விருதினை பெற்றிருந்தது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வெற்றிப்படமாக அமைந்த நாட்டாமை படத்திற்கு, ஈரோ சௌந்தர் கதை எழுதியிருந்த நிலையில், இந்த படத்தில் நாயகனாக நடிக்க, முதலில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பார்த்திபனிடம் கேட்டுள்ளார். இந்த கதையை கேட்ட பார்த்திபன், சொம்பு வைத்து பஞ்சாயத்து செய்வது, மார்பில் சந்தனம் பூசிக்கொள்வது காமெடியாக இருக்கும் சார் எனக்கு ஒத்துவராது என்று கூறியுள்ளர்.
அதே சமயம் நாட்டாமை படத்தில் பார்த்திபனை நடிக்க வைக்க, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பல முயற்சிகளை செய்துள்ளார். ஆனாலும் பார்த்திபன் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அடுத்து இந்த கதை சரத்குமாரிடம் சென்றுள்ளது. சரத்குமார் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் பார்த்திபன் என்பது சரத்குமாருக்கு தெரியாது என பார்த்திபன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“