தமிழ் சினிமாவில் மக்கள் கலைஞர் என்று போற்றப்படும் நடிகர் ஜெய்சங்கர், சிவாஜிக்கு கொடுத்த வாக்குறுதியை கடைசிவரை காப்பாற்ற முடியாமல் போனது பலரும் அறியான ஒரு தகவல்.
தமிழ் க்ளாசிக் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி போல் நடிப்பில் உச்சம் தொட்ட நடிகர் ஜெய்சங்கர். 1965-ம் ஆண்டு வெளியான இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் அதே ஆண்டு 5 படங்களில் தொடர்ந்து நாயகனாக நடித்தார். இதில் ஜெய் சங்கர் நடிப்பில் வெளியான 3-வது படமான பஞ்சவர்ணக்கிளி படத்தில் பாலு சேகர் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
நடிக்க தொடங்கிய 3-வது படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்த ஜெய்சங்கரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது. குறிப்பாக ஜெய்சங்கர் இந்த படத்தின் ஒரு கேரக்டர் வில்லனாக நடித்ததற்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சினிமாவில் உள்ள பிரபலங்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்த நடிப்பை பார்த்த சின்னப்ப தேவர், ஜெய்சங்கரை பாராட்டியுள்ளார்.
மேலும், இரவும் பகலும் படத்தின் தான அறிமுகமான அதே காலக்கட்டத்தில் திரைத்துறையில் அறிமுகமான சிவக்குமார் ஜெய்சங்கருடன் மிகுந்த நட்புடன் இருந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் ஜெய்சங்கரின் நெருங்கி பழக்கும் தன்மை தான் என்றும் கூறியுள்ளார். அதேபோல் சிவக்குமார் நடித்த முதல் படத்தில் அவருக்கும் அவரது ஜோடியாக நடித்த நடிகைக்கும் பொருத்தம் இல்லாததால் பல காட்சிகள் வெட்டப்பட்டுள்ளது.
முதல் படத்திலேயே காட்சிகள் அதிகம் வெட்டப்பட்டதால், சோகத்தில் இருந்த சிவக்குமாருக்கு ஜெய்சங்கர் ஆறுதல் கூறி தேற்றியுள்ளார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, நம்பியார் என பலருடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜெய்சங்கருக்கு, எம.ஜி.ஆருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அது நடக்காத நிலையில், சிவாஜியுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். ஜெய்சங்கரின் பழக்கும் தன்மை சிவாஜிக்கு மிகவும் பிடித்துள்ளது.
ஜெய்சங்கரின் சமூக சேவைகளை வெகுவாக பாராட்டியுள்ள சிவாஜி, ஒரு முறை அவரிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் சங்க தலைவராக இருந்த சிவாஜி அந்த பொறுப்பில் இருந்து விலகி இருந்த காலக்கட்டத்தில், நடிகர் சங்கத்திற்கு நீ தலைமையேற்று நடத்த கூடாதா என்று சிவாஜி கேட்டுள்ளார். இதை கேட்ட ஜெய்சங்கர் இப்போது எனக்கு சில கடமைகள் இருக்கிறது. இதை முடித்துவிட்டு நிச்சயமாக உங்கள் விருப்பதை நிறைவேற்றுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்.
ஆனால் தன் வாழ்நாளின் இறுதிவரை ஜெய்சங்கர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவே இல்லை என்பது தான் சோகம். 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெய்சங்கர் இறந்துவிட்ட நிலையில், சரியாக ஒரு வருடம் கழித்து 2001 ஜூலை மாதம் சிவாஜி கணேசன் இழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“