இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் போரைப்பற்றி பேசினால் அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனைப்பற்றி பேசாமல் இருக்க முடியாது. ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் தலைவராக இருந்த பிரபாகரன் தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து உயிரை விட்டவர்.
அவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தமிழில் வெளியான முதல் படம் மேதகு. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட இந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக தடம் பதித்தவர் தி.கிட்டு
அதேபோல் மேதகு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எடிட்டராக அறிமுகமானவர் சி.மு.இளங்கோவன். திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், தெற்குபொய்கைப்பட்டியைச் சேர்ந்த இவர், தமிழ் சினிமாவில் பிரபல படத்தொகுப்பாளர் ரூபனிடம் பல படங்களில் துணை எடிட்டராக பணியாற்றி உள்ளார்.

தற்போது மேதகு இயக்குனர் தி.கிட்டு மற்றும் ஐசிடபிள்யூ (ICW) கம்பெனியின் நிறுவனர் கருணாஸ் கூட்டணியில் சல்லியர்கள் படம் தயாராகியுள்ளது. இலங்கை போரில் மருத்துவர்களின் செயல்பாடு தொடர்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேதகு, சல்லியர்கள் படம் குறித்து எடிட்டர் சி.மு. இளங்கோவனை தொடர்பு கொண்டோம்.
மேதகு – சல்லியர்கள் இந்த படங்களில் நீங்கள் இணைந்த தருணம்
பலூன் படத்தில் அசோசியோட் எடிட்டராக வொர்க் பண்ணும்போது நண்பர் ராமின் மூலம் ஈஸ்வர் என்பவரின் தொடர்பில் இயக்குனர் கிட்டுவின் அறிமுகம் கிடைத்தது. அவர் என்னிடம் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை குறித்து படம் எடுக்க போவதாகவும், அதை எடிட் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினார். மேதகு பிரபாகரன் படம் என்றதுமே அடுத்த வார்த்தை பேசாமல் ஓகே சொல்லிவிட்டேன். அடுத்து ஓரிரு நாட்களில் மேதகு படம் தொடங்கப்பட்டது.
இயக்குனர் கிட்டுவுடன் 2-வது படம் இணைந்தது எப்படி?
மேதகு படத்தின் வொர்க் பிடித்திருந்ததால் சல்லியர்கள் படத்திற்கும் நாங்கள் இணைந்துள்ளோம்.இந்த இரண்டு படங்களுமே ஈழம் தொடர்பான கதை தான். ஆனால் மேதகு படம் ஷூட்டிங்கின்போது பெரிய பிரச்சினை இருந்தது. மேதகு பிரபாகரன் வாழ்க்கை வரலாறு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட கண்டன்ட் தமிழக அரசாலும் தடை செய்யப்பட்டது என்பதால் எங்களுக்கு எங்கு சென்றாலும் பிரச்சனை இருந்தது.

படத்தின் ஷூட்டிங்கிற்காக எங்க போய் கேமரா வச்சாலும் உடனடியாக போலீஸ் வந்துடுவாங்க. ஷூட்டிங்கிற்கு மட்டும் அல்ல ஒரு பிரஸ் மீட் வைத்தாலும் கூட அதற்கும் பிரச்சனைதான். பாடல் வெளியீட்டுக்கு கூட பிரச்சினை வந்தது. இதனால் மேதகு படத்தின் எந்த ஒரு நிகழ்ச்சியும் சென்னையில் நடத்தாமல் தஞ்சையில் நடத்தினோம். அங்கேயும் போலீஸ் பிரச்சினை இருந்ததது. அந்த பிரச்சினைகள் எல்லாம் சரி செய்து மேதகு படம் ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால் சல்லியர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் எதுவும் இல்லை. இந்த படம் தொடர்பான அனைத்திற்கும் சரியான அனுமதி பெறப்பட்டு ஷூட் செய்யப்பட்டது. தயாரிப்பாளர் கருணாஸ் அனைத்தையும் சரியாக அனுமதி வாங்கி செய்தார். மேதகு படம் போன்று சல்லியர்கள் படத்தில் வொர்க் பண்ணுவதும் கம்படபுளாக இருந்ததது. அதேபோல் படத்தின் இயக்குனர் கிட்டு எந்த கண்டென்ட் எடுத்தாலும் அது தொடர்பாக நிறைய ரிசர்ச் செய்வார். ஆனால் இலங்கை போர் குறித்து எவ்வித தகவலும் நெட்டில் இருக்காது. ஒரு சில புகைப்படங்கள் இருந்தாலும் அரிதுதான். புத்தகங்களில் படித்ததை வைத்து விஷூவலைஸ் செய்துதான் இந்த படத்தை எடுத்தார்.
மேதகு படம், பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு : சல்லியர்கள் படம் என்ன கதை?
ராணுவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு பிரிவுக்கு பெயர்தான் சல்லியர்கள். 800 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் காலத்தில் இருந்தே இந்த சல்லியர்கள் என்ற பெயர் நடைமுறையில் உள்ளது. போரில் காயமடைந்தவர்களுக்கு போர்க்களத்தில் பூமிக்கு அடியில் ஒரு பங்கர் (சுரங்கம்) வைத்து அங்குதான் சிகிச்சை செய்வார்கள். நாம் செவிலியர்கள் என்று சொல்வது போன்றுதான் சல்லியர்கள். ராணுவத்தில் மருத்துவம் செய்யும் பிரிவினர்கள் தான் சல்லியர்கள் அவர்ளை பற்றிய கதைதான் இந்த படம். அவர்கள் எப்படி மருத்துவம் பார்க்கிறார்கள், அங்குபோர் நடந்தது எப்படி என்பதை சல்லியர்கள் படம் விவரிக்கும்.
போர் குறித்த கதையில் காதல் காட்சிகள் அதில் இருந்து அவர்கள் எப்படி போரில் பங்கேற்கிறார்கள். மண்ணுக்காக என்னென்ன தியாகம் செய்கிறார்கள். இவை அனைத்தும் ஒரிஜினலாக இருப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது. இலங்கை போரில் தமிழர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை எவ்வித சமரசமும் இன்றி படமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இங்கு மரணமடைந்த மக்கள் தங்களது மண்னை எவ்வளவுஆழமாக நேசித்தார்கள் என்பதையும், ஒரிஜினலாக படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒரு காட்சியில், இரண்டு பேரை கண்ணை கட்டி நிர்வாணப்படுத்தி சுடுவார்கள். அதில் ஒருவரை சுடும் சத்தம் கேட்டு மற்றொருவர் ஒரு கைப்பிடி மண்ணை கையில் அள்ளி இறுக்கமாக பிடித்துக்கொள்வார். சாகும்போது கூட மண்ணுக்காகத்தான் சாவேன் என்பதை உணர்த்தும் இந்த காட்சி உண்மையாக நடந்த சம்பவம்.
அதன்பிறகு பெண்கள் எப்படி போருக்கு செல்கிறார்கள், அவர்கள் ராணுவ மருத்துவத்திற்கு எப்படி படிக்கிறார்கள், அவர்கள் சல்லியர்களாக மாறுவதற்கு அவர்களின் குடும்பத்தினர் எந்த அளவுக்கு சப்போர்ட் செய்கிறார்கள், அதனால் அவர்கள் குடும்பத்தினர் சந்திக்கும் பிரச்சினை என்ன? இதை எல்லாம் கடந்து களத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினை என்ன? என்பதை சல்லியர்கள் படம் விவரிக்கும்.
அதேபோல் போரில் காயமடைந்த போராளிகளுக்கு மட்டுமல்லாமல், எதிர்தரப்பினருக்கும் சல்லியர்கள் சிகிச்சை அளிப்பார்கள். ஆனால் சிகிச்சைக்காக வரும் அவர்கள் எவ்வித ஆயுதங்களையும் கையில் வைத்திருக்க கூடாது. மருத்துவம் அனைவருக்கும் பொதுவானது என்பதால் இவ்வாறு செய்கிறார்கள். இது போரில் நடந்த உண்மை சம்பவம்.

மேதகு – சல்லியர்கள் இந்த இரண்டு படங்களிலும் எடிட்டிங்கில் நீங்கள் சந்தித்த சவால்கள்
மேதகு படம் ஒரு நான்-லீனியர் பேட்டனில் கதை இருக்கும். தெருக்கூத்தில் படம் தொடங்கி அதில் சொல்லப்படும் ஒரு கதையில் இருந்து படம் தொடங்கும். நான் லீனியரில் இயக்குனர் ஸ்கிரீன்ப்ளே சிறப்பாக செய்திருந்தார். அதை எடிட்டிங்கில் சரியாக அமைப்பது சவாலாக இருந்தது. ஆனால் சல்லியர்கள் திரைப்படம் மேதகுவை போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஸ்கிரீன்ப்ளே. ஒரு போராளி அடிப்பட்டார் என்றால் அவருக்கு அடிபட்ட இடங்களை ரொம்பவும் க்ளோஸ்அப்பாக எடுத்திருப்பார்கள். ரத்தம் வருவது காயங்கள் என அனைத்துமே ரியலிஸ்டிக்காக இருந்ததால் அதை பார்த்து எடிட் செய்வது சவாலாக இருந்தது.
அதேபோல் ஒரு சில சீன்கள் குளத்தில் வைத்து ஷூட் செய்திருந்தார்கள். அப்படி செய்யும்போது சவுண்ட் ரெக்கார்டு செய்ய முடியாது. இதனால் சில சீக்குவன்சில் சவுண்ட் இருக்காது. அந்த சீன்களில் எல்லாம் நடிகர்களின் உதடு அசைவை வைத்துதான் எடிட் செய்தோம். இந்த மாதிரி சில சீன்கள் உள்ளது, இது ஒரு புது அனுபவமாக இருந்தது.
இந்த படத்தில் போர், காதல், உணர்வுமிக்க வசன உச்சரிப்பு, சோக பாடல், மகழிழ்ச்சியான பாடல், காதல் பாடல், என பலதரப்பட்ட காட்சிகள் இருப்பதால், ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு எடிட்டிங் யுக்தி தேவைப்பட்டது. ஒட்டுமொத்த படத்தையும் பார்க்கும்போது முழுமையான படைப்பாக உணரும் வகையில் ஒரு சவாலான எடிட்டிங் யுக்தியை இந்த படத்தில் கையாண்டுள்ளேன்.

படத்தின் இயக்குனர் தி.கிட்டுவைப்பற்றி உங்கள் கருத்து
குறைந்த நாட்கள் மட்டுமே படப்பிடிப்பிற்காக எடுத்தக்கொள்வார் இயக்குனர் கிட்டு. இதற்கு காரணம் மிக சரியான திட்டமிடல்கள்தான். ஒரு கட்டிடத்திற்கு பேஸ் மட்டம் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று பேப்பர் வேலைகள் மிகவும் துள்ளியமாக செய்துவிட்டு பின்னரே படப்பிடிப்புக்கு செல்வார். ஒரு என்ஜினியரின் திட்டமிடல் மற்றும் வரைபடங்களின் மூலம் ஒரு பெரிய பில்டிங் மிக உறுதியாக குறைந்த நாட்களில் கட்டி முடிக்கின்றனர். அதேபோல் இவருடைய படத்தில் கதை, திரைக்கதை, படப்பிடிப்பு தளங்கள், ஆர்ட் வேலைகள், சார்ட் டிவிசன்ஸ், ஒளிப்பதிவு கோணங்கள் ஆகியவை திட்டமிட்டு அவற்றை சரியாக ஆராய்ந்து செயலாற்றுகிறார்.
பன்முக கலைஞர், நடிகர், பாடலாசிரியர், பாடகர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் திரைக்கதையாளர் என அனைத்து வித்தைகளையும் தன்னகத்தை கொண்டுள்ள எளிமையான இயக்குனர் கிட்டு அவர்கள் கதாப்பாத்திரம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கென தனி பயிற்சி பட்டறை என்று இவை அனைத்தையும் சிறப்பாக செய்வதால் படப்பிடிப்பில் தேவையான அளவு சார்ட்கள் மட்டுமே படமாக்கப்படுகின்றன. தேவையற்ற சீன்கள், சார்ட்கள் இருக்காது. அதனால் எடிட் செய்ய எளிமையாக இருக்கும் தயாரிப்பாளரின் பணமும் மிச்சமாகும்.
உங்களின் அடுத்த படங்கள்
அடுத்து, நடிகர் – இயக்குனர் – நடனகலைஞர் லாரன்ஸ் மாஸ்டர் படம் போய்க்கிட்டு இருக்கு, இயக்குனர் விஜய் மேனன் இயக்த்தில் நாஞான் இப்போ எந்தா செய்யான் (Njyaan Ippo entha cheyya) (மலையாளம்), இயக்குனர் ராம்சேவா இயக்கத்தில், எனை சுடும் பனி, நடிகர் – இயக்குனர் – ஆதர்ஷ்மதிகாந்தம், கிருஷ்ணா, லோகு இயக்கத்தில் 5 மொழிகளில் வெளியாகும் ஒரு பான் இந்தியா படமான நாயாடி மற்றும் விளம்பர படங்கள் மற்ற படங்களின் முன்னோட்டங்கள் என பிஸியாக இருப்பதாக கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“