Lokesh's update on Thalapathy 67 : வாரிசு படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.
வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2023-ம் ஆண்டு ஜனவரியில் இநத படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் அவரின் 67-வது படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லையே என்று ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.
தற்போது அவர்களை குஷிப்படுத்தும் விதமாக தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும், அதன்பிறகு படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகும் என்று கூறியுள்ளார். கைதி படம் வெளியாகி நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கைதி 2 எப்போது வரும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கும் சேர்த்து பதில் அளித்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் உடனடியாக கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளார். இதனால் விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.
இதனிடையே விக்ரம் படத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின் கவுதம் மேனன் என 4 வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும், த்ரிஷா சமந்தா என நாயகிகள் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதனால் விக்ரம் படத்தை விட தளபதி 67 பிரம்மாண்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil