இன்றைய சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய் தான் அவரை மிஞ்சுவதற்கு இந்தியாவில் யாரும் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தயாராகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11-ந் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படத்துடன், மற்றொரு முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் தயாராகியுள்ள துணிவு படம் வெளியாக உள்ளது.
இந்த இரு படங்களும் ஜனவரி 11-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு தமிழகத்தில் அதிக தியேட்டர்கள் ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தமிழகத்தில் அஜித்துடன் ஒப்பிடுகையில் விஜய் தான் நம்பர் ஒன். அதனால் வாரிசு திரைப்படத்திற்கு அதிக திரையரங்கு ஒதுக்க வேண்டும் என்று வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார், தான் சூர்யவம்சம் படத்தின் வெற்றி விழாவின் போது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னேன். நான் அப்போ சொன்னது இப்போது உண்மையாகிவிட்டது. விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார். அதேபோல் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார்.
இந்த சூப்பர் ஸ்டார் படம் சமீப காலமாக தமிழ் சினிமாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் அவரை மிஞ்சுவதற்கு இந்தியாவில் யாரும் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இரும்பன் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் கூறுகையில்,
எனது தம்பி விஜய் சினிமாவுக்கு வருவதற்கு எனது அப்பா எஸ்ஏசி-தான் காரணம். ஆனால் இன்றைக்கு தமிழ் சினிமாவின் உயர்ந்த நட்சத்திரமாக சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால் அதற்கு அவரது உழைப்புதான் காரணம். காலையில் நானும் இயக்குனர் பாரதிராஜாவும் நடைபயணம் போகும்போது தம்பி விஜய் வீட்டை தாண்டி தான் செல்வோம். அப்போது பாரதிராஜா சொல்வார் என்னாமாடா ஆடுரான் அந்த பையன் என்று சொல்வார். விஜய் அளவுக்கு நடன அசைவுகளை வெளிக்கொண்டுவந்து ஈர்க்கும் அளவுக்கு ஆடுவதற்கு இந்தியாவில் யாரும் இல்லை. காரணம் அவரின் உழைப்பு.
எளிதில் புகழ் வராது. ஒருவன் வெற்றியடைந்து புகழ் பெறுகிறான் என்றால் அவனை பார்த்து பொறாமைபடாதே. அதற்காக அவன் கொடுத்த விலை, வலி, அவமானம் ஆகியவற்றை நினைத்து பாருங்கள். அப்போது யார் மேலும் உங்களுக்கு பொறாமை வராது. அவ்வளவு உழைப்பு இருக்கு. அதுபோலத்தான் தம்பி விஜய். அவர் நடிகராவதற்கு அவரது அப்பா இருக்கலாம். ஆனால் இந்த இடத்திற்கு அவர் வருவதற்கு கடினமாக உழைப்புதான் காரணம்.
எப்படி பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதுதான் கடின உழைப்பு. அதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது யூடியூப் தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“