யூடியூபர் சூர்யாதேவி அளித்த புகாரின் பேரில் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு என்ற செக்மெண்டில் காமெடி நடிகராக அறிமுகமானவர் நாஞ்சில் விஜயன். தொடர்ந்து விஜய் டிவியின் பல காமெடி நிகழ்ச்சியில் நடித்து பிரபலமான இவர், பெண் கெட்டப்பில் பல ஷோக்களில் நடித்துள்ளார். ஒரு சில திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.
இதனிடையே நடிகை வனிதாவின் திருமணம் குறித்து பிரபல யூடியூபர் சூர்யாதேவி என்பவருடன் இணைந்து பல சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில், இது குறித்து வனிதா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டார். இதனிடையே சூர்யாதேவி தனது வீட்டுக்கு ரௌடிகளை அனுப்பி மிரட்டுவதாக நாஞ்சில் விஜயன் அளித்த புகாரின் பேரில் சூர்யாதேவி மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 6 ஆண்டுகளுக்கு மேலாக நானும் நாஞ்சில் விஜயனும் நண்பர்களாக இருக்கிறோம். வனிதா குறித்து பேசும்போது கடைசிவரை எனக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறிவிட்டு திடீரென வனிதாவுடன் சமானதானமாக சென்றுவிட்டார். இது பற்றி அவரிடம் கேட்டபோது என்னை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிவிட்டார். இதனால் எனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது என்று கூறி நாஞ்சில் விஜயன் மீது சூர்யாதேவி புகார் அளித்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு அளிக்கப்பட்ட இந்த புகாரின் பேரில் நாஞ்சில் விஜயன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பியும் நாஞ்சில் விஜயன் ஆஜராகவில்லை என்பதால் அவரை வளசரவாக்கம் போலீசார் இன்று கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil