“சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம்” - இயக்குநர் பா.இரஞ்சித்

‘அயோத்தி தாச பண்டிதர் கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம்’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

‘அயோத்தி தாச பண்டிதர் கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம்’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பா.இரஞ்சித்தின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ மற்றும் ‘மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ்’ இணைந்து நடத்தும் ‘த கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ நிகழ்ச்சி, நாளை மாலை 6 மணிக்கு சென்னையில் நடைபெற இருக்கிறது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ. பெய்ன் பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை, கட்டணமின்றி யார் வேண்டுமானாலும் கண்டு களிக்கலாம்.

“நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்திருக்கிற அடுத்த முயற்சிதான் இந்த இசை நிகழ்ச்சி. இதில் பங்கு பெற்றிருக்கும் கலைஞர்கள் எல்லோருமே அவரவர் பகுதிகளில் மிகவும் பிரபலமானவர்கள். இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, மக்களின் இசையாகிய கானாவை உலகம் முழுவதும் பரப்புகிற முயற்சியில் இறங்கியுள்ளோம்.

மக்களுக்கான அரசியலைப் பேசவும், மக்களின் பிரச்னைகளைப் பேசவும் கலையைப் பயன்படுத்த வேண்டும். சாதி, மதமற்ற இணக்கத்தை, கலையின் எல்லா வடிவத்திலும் கொண்டுவர வேண்டும். இந்த சமூகம் சாதியால் பிரிந்து கிடப்பது போலவே, கலையும் இங்கு பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அப்படி தமிழகத்தின் எல்லா கலைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான தேவை இங்கு இருக்கிறது. அயோத்தி தாச பண்டிதர் கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம். அதற்கு, இந்த இசை வடிவம் தொடக்கமாக இருக்கும்.

கானா என்பது மக்களின் இசை. மூடப்பழக்க வழக்கங்களை எதிர்க்கிற இசை. அதுபோலத்தான் ராப் இசையும். கறுப்பர்களின் வாழ்வியலையும், அவர்களின் போராட்டங்களையும் உலகிற்கு எடுத்துச் சொன்னது. அதனடிப்படையில் பார்த்தால் கானாவுன், ராப்பும் வேறு வேறில்லை. இரண்டுமே மக்களின் வலியை, துயரத்தைப் பேசக் கூடியவை. இந்த இரண்டையும் இணைத்து இசை நிகழ்ச்சி அரங்கேற இருக்கிறது.

மொத்தம் 20 பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் பாடப்பட இருக்கின்றன. எல்லாவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய பாடல்களாக அவை இருக்கும். தொல்குடி மக்களின் இசையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமையும்.  தமிழகத்தின் மூலைகளில் பரவிக் கிடக்கிற அத்தனை இசை வடிவங்களையும் ஒருங்கிணைக்கும் யோசனையும் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close