’கபாலி’ ரஜினியைப் பின்பற்றும் விக்ரம்... பிரேக் கொடுக்குமா?

வலுவான கதை, திரைக்கதை இல்லாததால் கூட்டணி பலமும், விக்ரமின் உழைப்பும் வீணானது.

தென்னிந்திய நடிகர்களில் உழைப்பு என்றால் அது விக்ரம் தான். இயக்குனர் என்ன சொன்னாலும் அப்படியே செய்வார். தன்னை வருத்திக்கொள்வதிலிருந்து ஆரம்பித்து கதைக்குத் தேவையான பயிற்சிகளைக் கற்றுக்கொள்வது வரை எதையும் செய்வார். ஆளே தலைகீழாக மாறி விடுவார், இவர்தான் விக்ரமா என்று சந்தேகப்படும் அளவுக்கு. இதனாலேயே தேசிய விருது முதல், கலைமாமணி விருதுவரை இவரைத் தேடி வந்திருக்கிறது.

ஆனால் என்னவோ அவருடைய உழைப்புகள் அனைத்தும் சமீப காலமாகவே வீணாகிக் கொண்டே இருக்கின்றன. கடைசியாக அவருக்கு வெற்றி கொடுத்த படம் என்றால் அது தெய்வத்திருமகள் தான். தெய்வத்திருமகள் படத்துக்குப் பிறகு விக்ரம் ராஜபாட்டை, தாண்டவம், ஐ, டேவிட், பத்து என்றதுக்குள்ள, இருமுகன் ஆகிய படங்களை நடித்திருக்கிறார். இந்த அனைத்து படங்களுமே விக்ரம் நடிக்கிறார் என்பதற்காகவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ஆனால் இதில் எந்தப் படமும் அவருடைய உழைப்புக்கு ஏற்ற பெயரை அவருக்கு வாங்கித் தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

முக்கியமாகச் சொன்னால் ‘ஐ’ படம். பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற இயக்குனர் சங்கர். அவர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’ஐ’ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் சங்கர்-விக்ரம் கூட்டணியில் அந்நியன் அடைந்த வெற்றியும், சங்கரின் பிரம்மாண்ட இயக்கமும் விக்ரமின் நடிப்பு குறித்து வெளியான செய்திகளும் தான் காரணம். அதோடு சேர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அர்னால்ட் ஸ்வாஸ்னேக்கரெல்லாம் வந்திருந்தார். படம் வெளியாகும் வரை கிளப்பப்பட்ட ஹைப்புக்கு அளவே இல்லை. கடைசியில் எல்லாம் சுக்குநூறாக போனது. வலுவான கதை, திரைக்கதை இல்லாததால் கூட்டணி பலமும், விக்ரமின் உழைப்பும் வீணானது.

1990களில் இருந்து சினிமாவில் நடித்து வரும் விக்ரமுக்கு இதுவரை பிரேக் கொடுத்த படங்கள் அனைத்துமே வித்தியாசமான சென்டிமென்ட் கலந்த கதையம்சம் கொண்ட அர்த்தமுள்ள படங்கள் தான். விதிவிலக்காக சாமி, தூள் போன்ற படங்களும் விறுவிறுப்பான திரைக்கதையினால் வெற்றியடைந்தது. கடந்த ஐந்து வருடங்களாக எந்த பிரேக்கும் இல்லாமல் இருக்கிறார். தற்போது அவருக்கு தேவையெல்லாம் ஒரு பிரேக்.

தற்போது கையில் இரண்டு படங்கள் இருக்கின்றன. ஒன்று துருவ நட்சத்திரம், மற்றொன்று ஸ்கெட்ச். இரண்டிலுமே குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று இருக்கிறது. நடிகைகள் வயதானதும் அம்மா கதாபாத்திரத்துக்கு தான் செட் ஆகிறார்கள். ஆனால் நடிகர்கள் எப்போது ஹீரோ மட்டும்தான். அதுவும் கறு கறு முடி, இளமையான தோற்றம் என்று தங்களை மேக்கப் போட்டு மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் இந்த ட்ரெண்டை முதலில் அஜித் மாற்றி ஆரம்பித்து வைத்தார். இயல்பான சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் நடிகர்கள் நடித்தாலும் மக்கள் வரவேற்கிறார்கள் என்பது தெரிந்ததும், ரஜினியும் கபாலி படத்தில் அப்படி நடித்தார். தற்போது விக்ரம் அஜித், ரஜினியைப் பின்பற்றி தற்போதைய இரண்டு படங்களிலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கிறார்.

துருவ நட்சத்திரம் படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார். இதில் கோட் சூட் எல்லாம் போட்டுக்கொண்டு சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் தாடியுடன் கபாலி ரஜினி போலவே இருக்கிறார். இது ஒரு ஆக்‌ஷன் படம். அதோடு ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான ஸ்பை த்ரில்லர் படம். விஜய் சந்தர் இயக்கும் ஸ்கெட்ச் என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதுவும் கிட்டதட்ட ஆக்‌ஷன் படம் தான். இது முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. கார் சேஸ் காட்சிகளெல்லாம் கூட இந்தப் படத்தில் உள்ளன.

பார்க்கலாம், கபாலி ரஜினியின் தாக்கம் விக்ரமுக்கு கைக்கொடுக்கிறதா என்று?

×Close
×Close