நானி தவறு செய்ததற்கான ஆதாரம் உள்ளதா? - நடிகை ஸ்ரீ ரெட்டியிடம் விஷால் கேள்வி

ஸ்ரீ ரெட்டியிடம் விஷால் கேள்வி

தெலுங்கில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஸ்ரீ ரெட்டி, ‘நான் ஈ’ பட புகழ் நானி மீது சுமத்தியுள்ள பாலியல் புகாருக்கு ஆதாரம் உள்ளதா? என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி, பட வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, தெலுங்கு நடிகர்கள் சங்கம் முன்பாக ஆடைகளை கழற்றி அவர் செய்த அரைநிர்வாணப் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தெலுங்கு நடிகரான நானி மீதும் அவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். நானி, தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து, நடிகர் நானி அவருக்கு நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், ‘இரும்புத்திரை’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அபிமன்யுடு’ வெற்றி சந்திப்பில் கலந்துகொண்ட விஷாலிடம் செய்தியாளர்கள் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த விஷால், “நானி என்னுடைய நல்ல நண்பர். அவரைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் பெண்களிடம் எப்படி பழகுவார் என்பதும் எனக்கு தெரியும். அதற்காக, நான் அவருக்கு ஆதரவாக பேசவில்லை. நானியைப் பற்றி தெரிந்த அனைவருக்கும் அவர் ஆண்களிடமும் பெண்களிடமும் எவ்வளவு ஒழுக்கத்துடன் பழகுவார் என்பது தெரியும். ஸ்ரீ ரெட்டியின் இந்தக் குற்றச்சாட்டு மிகவும் கேவலமான ஒன்று. ஸ்ரீ ரெட்டி கூறும் புகார்கள் உண்மையென்றால், அதை நிரூபிக்கும் ஆதாரங்களை வெளியிட வேண்டும். அதை விட்டுவிட்டு, வேண்டுமென்றே ஒவ்வொருவர் மீது குற்றம் சாட்டி வருகிறார். அவர் அடுத்ததாக என் மீது கூட புகார் கூறலாம். பயமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close