ட்ரெய்லரிலேயே சர்ச்சையை கிளப்பியிருக்கும் விஸ்வரூபம் 2

பத்திரிகையாளர்களை சந்தித்த கமல் இவ்வாறான எதிர்ப்புகளை எதிர்பார்த்திருப்பார் போலிருக்கிறது. எதிர்ப்புகள் வந்தால் அதனை ஒரு எதிர்கொள்ள தயாராகிவிட்டேன் என்றார்.

பாபு

கமல் படங்களில் அதிக சர்ச்சையை கிளப்பிய படம் விஸ்வரூபம். முஸ்லீம்களை தவறாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதாகக் கூறி அப்படத்தை முஸ்லீம் அமைப்புகள் எதிர்த்தன. படத்தை திரையிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றனர். படத்துக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று விஸ்வரூபத்தை வெளியிட அன்றைய ஜெயலலிதா தலைமையிலான அரசு தடை விதித்தது. பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் படம் வெளியான பின்பும் தமிழகத்தில் படம் வெளியாகவில்லை. பிறகு நீதிமன்றம் சென்று தடையை நீக்கி படத்தை வெளியிட்டார் கமல். சர்ச்சை காரணமாக படம் எதிர்பார்த்ததைவிட அதிகம் கவனிக்கப்பட்டது.

விஸ்வரூபம் சர்ச்சையில் கமலுக்கு ஆதரவும் இருந்தது. சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை சில அமைப்புகளின் அச்சுறுத்தலுக்காக தடை செய்வது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. விஸ்வரூபத்தை வெளியிட வேண்டும். அதனை பார்ப்பதா பிறக்கணிப்பதா என்பதை பொதுமக்கள் முடிவு செய்யப்பட்டும் என்ற கோணத்தில் பலர் விஸ்வரூபத்தை ஆதரித்து, அதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்தனர்.

விஸ்வரூபத்தில் தாலிபன் தீவிரவாதிகளே காட்டப்படுகின்றனர், இந்திய முஸ்லீம்கள் அல்ல. இந்திய முஸ்லீம்களை தவறாக சித்தரித்திருந்தால் படத்தை விமர்சிக்கலாம் என்ற நோக்கில் விஸ்வரூபத்தை ஆதரித்தவர்கள் இருந்தார்கள்.

இந்தியாவில் ஏற்கனவே முஸ்லீம் வெறுப்பு இருக்கையில் அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் படம், அந்த வெறுப்பை மேலும் அதிகரிக்கும் என்ற கோணத்தில் படத்தை பலரும் எதிர்த்தனர். இந்த ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடு சமூகத்தில் நிலவும் சூழலில் நேற்று விஸ்வரூபம் 2 ட்ரெய்லரை கமல் வெளியிட்டார்.

தமிழ் ட்ரெய்லரில் ‘எந்த மதத்தையும் சார்ந்துக்கிறது பாவமில்ல ப்ரதர்…தேசதுரோகியா இருக்கதுதான் தப்பு’ என்ற வசனம் வருகிறது. இதே வசனம் இந்திப் பதிப்பில், முசல்மானாக இருப்பதில் தவறில்லை என வருகிறது. அதாவது முஸ்லீமாக இருப்பது தவறில்லை என்கிறார் கமல். விட்டால் இஸ்லாமியனாக இருப்பதே தவறு என்று சொல்வாரோ என சமூக வலைத்தளங்களில் பலரும் கொந்தளித்துள்ளனர். கவிஞர் மனுஷ்யபுத்திரன் இதுபற்றி தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

“விஸ்வரூபம் 2 ட்ரெயிலர் பார்த்தேன். இந்து பயங்கரவாதம் இந்தியாவையே அழித்துக்கொண்டிருக்கும் சூழலில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற கருத்தியலை பொது உளவியலில் அழுத்தமாக திரும்பவும் பதியவைக்கும் ஒரு படம் என்றே தோன்றுகிறது. துப்பாக்கி, விஸ்வரூபம்-1 போன்ற படங்களின் தொடர்ச்சியாக இதுவும் அமைந்தால் அது கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தும்.

“நாசர் பள்ளிக்கூடத்துக்கு போகணும், ஜலால் காலேஜ்ஜிக்கு போகணும். அதான் சரி..” என்ற வசனத்தை தொடர்ந்து ஒரு இஸ்லாமிய தீவிரவாதி துப்பாக்கி போல விரலை ஒரு இஸ்லாமிய சிறுவனின் தலையில் வைக்கிறார். இஸ்லாமிய சிறுவர்கள் பயங்கரவாதிகளாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி அழுத்தமாக சொல்லப்படுகிறது.

அடுத்த வசனம் இன்னும் தெளிவானது.

“எந்த மதத்தையும் சார்ந்துக்கிறது பாவமில்ல ப்ரதர்…தேசதுரோகியா இருக்கதுதான் தப்பு..”

இதை காட்சி அமைப்பின்படி இப்படி மொழி பெயர்க்கலாமா?

“இஸ்லாமியனா இருக்கிறது பாவமில்ல…தேசதுரோகியா இருக்கதுதான் தப்பு.”

இஸ்லாமிய தேச துரோகிகள்..

இந்தி ட்ரெயிலரில் முஸ்லீமாக இருந்தாலும் தேச துரோகியாக இருக்காதீர்கள் என்று தெளிவாக கமல் பேசுகிறார். தமிழில் கொஞ்சம் பம்முகிறார்

கமல் யாருக்காக வேலை செய்கிறாரோ அந்தப்பணியை இப்படத்திலும் சிறப்பாக தொடர்வார் என்றே நினைக்கிறேன். என் எதிர்பார்ப்பு பொய்த்தால் மகிழ்ச்சி. ஆனால் ஒருபோதும் அப்படி நடப்பதில்லை.”

– இவ்வாறு மனுஷ்யபுத்திரன் பதிவிட்டுள்ளார்.

விஸ்வரூபம் 2 படத்துக்கு இசை ஜிப்ரான். இதுவரை அவரது பெயர் – கமலின் உத்தம வில்லன், தூங்கா வனம், விஸ்வரூபம் உள்ளிட்ட அனைத்துப் படங்களிலும் ஜிப்ரான் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. விஸ்வரூபம் 2 படத்தில் முகமது ஜிப்ரான் என போடப்பட்டுள்ளது. இயக்குநர் தாமிரா இதனை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஜிப்ரான் தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியலில், தன் பெயரை முகம்மது ஜிப்ரான் எனப் போட சொல்லியிருக்க மாட்டார். அப்படிச் சொல்வதானால் என்னிடமும் தனது பெயர் மாற்றத்தை சொல்லியிருப்பார். காரணம் எனது ஆண்தேவதை திரைப்படத்திற்கும் அவர்தான் இசை. இந்தி முன்னோட்டத்தில் ஜிப்ரானென்றும் தமிழில் முகம்மது ஜிப்ரான் என்றும் இருப்பது தற்செயல் அல்ல. ஒரு வேளை கமலஹாசனுக்குத் தெரியாமல் இது நடந்திருக்குமா என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை. கமல் திரைப்படத்தில் நிறைய தவறுகள் இருக்கும் அதை மற்றவர்கள் செய்ய ஒருபோதும் அவர் அனுமதித்ததில்லை” என தாமிரா குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முஸ்லீம் விரோத படத்தின் இசையமைப்பாளர் முஸ்லீம் என்பதை அடையாளப்படுத்தி தனது படத்தை கமல் நியாயப்படுத்த முனைகிறார் என்ற குற்றச்சாட்டின் தொனி தாமிராவின் பதிவில் உள்ளது.

நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த கமல் இவ்வாறான எதிர்ப்புகளை எதிர்பார்த்திருப்பார் போலிருக்கிறது. எதிர்ப்புகள் வந்தால் அதனை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ள தயாராகிவிட்டேன் என்றார்.

விஸ்வரூபம் 2 முதல் பாகத்தைப் போல சர்ச்சைகளை கிளப்பும் என்பதை அதன் ட்ரெய்லரே முன்னோட்டாக சொல்லியிருக்கிறது.

விஸ்வரூபம் 2 டிரைலரைக் காண…

×Close
×Close