இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

இணையம், ஸ்மார்ட்போன், செல்ஃபி, சமூக வலைதளம் என எந்நேரமும் பிசியாகவே இருக்கும் இளைய தலைமுறையினரின் மிக மோசமான மறுபக்கம்

வெள்ளிக்கிழமை என்றால் முன்பெல்லாம் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி தான் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். ஆனால் எப்போதிலிருந்து வெள்ளிக்கிழமையில் மட்டும் படங்களை வெளியிடுவது என்று சினிமா துறையினர் தீர்மானித்தார்களோ அன்றிலிருந்து வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள்தான் நினைவுக்கு வரும்.

வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், வெள்ளிக்கிழமை ராமசாமி போல் வெள்ளிக்கிழமை என்றால் படங்கள் என்பது தான் தற்போதய ட்ரெண்ட். ஆனாலும் பெரிய ஹீரோக்களின் படங்கள் வரும் போது குறைவான படங்களும், பெரிய ஹீரோக்களின் படங்கள் வராத போது அதிக அளவிலான படங்களும் வருவதை நாம் என்ன செய்ய முடியும். ஒன்னும் செய்ய முடியாது.

சரி நாம இந்த வெள்ளிக்கிழமைக்கு வருவோம். இன்று என்னென்ன படங்கள் வெளியாகின்றன, எந்தப் படத்தைப் பார்க்கலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம். இன்று உதயநிதி ஸ்டாலின் நடித்த சரவணன் இருக்க பயமேன், ஜெயப்பிரகாஷ் என்ற புதுமுக இயக்குனரின் ‘லென்ஸ்’, கலையரசன் நடித்த எய்தவன், ஹரியின் உதவியாளர் கே.ஜி.வீரமணி இயக்கிய திறப்பு விழா ஆகிய படங்கள் இன்று வெளியாகி இருக்கின்றன.

சரவணன் இருக்க பயமேன்!

’எம்புட்டு இருக்குது ஆசை’ என்றப் பாடலை ஒரு நாளைக்கு 40 தடவை டிவியில் போட்டு போட்டு எப்படியோ கேட்க வைத்துவிட்டார்கள். உதயநிதி ஸ்டாலின் படம் என்றாலே காமெடிக்கும், மசாலாவுக்கும் பஞ்சமிருக்காது. ரெஜினா கஸாண்ட்ரா தான் ஹீரோயின். கவர்ச்சிக்கு கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் உதயநிதியோடு முதன்முறையாக, பரோட்டா சூரியாக இருந்து, தற்போது புஷ்பா புருஷனாக இருக்கும் சூரி நடித்திருக்கிறார். இதுவரை சந்தானத்தோடு கூட்டுச் சேர்ந்து உதயநிதி ஆவரேஜ் ஹிட் படங்கள் கொடுத்தார். இந்தப் படத்தில் சூரி கூட்டணியில் காமெடி எப்படி கைக்கொடுக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி இருக்கும். ஜாலியாகப் போய் டைம்பாஸ் செய்துவிட்டு வர இந்தப் படம் சரியாக இருக்கும்.

லென்ஸ்!

எந்தவொரு சினிமா முன்அனுபவமும் இல்லாமல், யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர் ‘லென்ஸ்’ வழியே இன்றைய தலைமுறையின் பிரச்னைகளைப் பேச முயற்சித்திருக்கிறார். இணையம், ஸ்மார்ட்போன், செல்ஃபி, சமூக வலைதளம் என எந்நேரமும் பிசியாகவே இருக்கும் இளைய தலைமுறையினரின் மிக மோசமான மறுபக்கத்தை பெரிதுபடுத்தி காட்டுகிறது ‘லென்ஸ்’. எல்லோரும் பார்க்க வேண்டிய படமாக இதனைச் சொல்லலாம். இன்னொரு முக்கியமான விஷயம், தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறார். எனவே நம்பிப் போங்க, சந்தோஷமா வாங்க.

எய்தவன்!

மெட்ராஸ் படத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டு கபாலியில் ரஜினி தலையிலேயே துப்பாக்கி வைத்தவர். கோலிவுட்டின் புது செல்லப்பிள்ளை. படங்களின் தேர்வும் அர்த்தமானவையாக இருக்கும். எய்தவன் படமும் அப்படித்தான். பெரிதாக யாரும் பேசாத கல்வி நிறுவனங்கள் கொள்ளையைப் பற்றி பேசுகிறான் ‘எய்தவன்’. எல்லோரும் கல்விக் கொள்ளையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் எப்படித்தான் அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்பதே தெரியாமல் தான் இருக்கிறோம். எய்தவன் பார்த்தால் ஒருவேளை தெரியவரலாம்.

திறப்பு விழா!

சமீப காலமாக செய்திகளில் அடிபடும் ஒரு விஷயம்தான் இதன் கதைக்களம். என்ன கண்டுபிடிக்க முடியவில்லையா? நானே சொல்லிவிடுகிறேன். டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக மக்கள் பேராடுவதுதான். மதுக்கடைக்கு எதிராக தீக்குளித்து உயிரைவிட்ட ஒரு வீரத்தமிழச்சியின் கதை தான் திறப்பு விழா. டாஸ்மாக்கை மூடச் சொல்லும் படத்துக்கு ‘திறப்பு விழா’ என்று பெயரா? படத்தைப் பார்த்தாதான் காரணம் தெரியுமோ?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close