What is so special and different in Bigg Boss Season 5 Tamil : தமிழ்நாட்டு மக்கள் பலரும் நீண்ட நாள்களாக ஆவலோடு காத்துக்கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ஆரம்பமாகிவிட்டது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே சமூக வலைத்தளங்களில் இம்முறை யார் போட்டியாளராகக் களமிறங்க உள்ளனர் என்கிற தகவல்கள் வெளியாகின. என்றாலும், நிகழ்ச்சியின் போதுதான் முழு உண்மை நிலவரம் தெரியும் என்பதனால், பொறுத்திருந்தனர். அந்த வகையில், மக்களின் கணிப்பு பாதி உண்மையாகவே இருந்தன.
ஆம், பிரியங்கா, பாவனி, அபிஷேக், இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரவலாகப் பேசப்பட்டவர்கள். இவர்களோடு, மக்களுக்கு அவ்வளவாகப் பரீட்சையம் இல்லாத நடியா சங், நமிதா ஆகியவர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. 'யாருடா இவங்கல்லாம்?' என்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பிலிருந்தே இவர்களைப் பற்றிய விவாதங்கள் எழுந்தாலும், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி சற்று வித்தியாசமானது என்றே சொல்லலாம்.
இதுவரை ஒளிபரப்பான நான்கு சீசன்களில் பெரும்பாலும் ஒரேபோன்ற பேட்டர்னைதான் பின்பற்றி வந்தனர். அதாவது நிச்சயம் பரீட்சையமான நடிகர் நடிகைகள், வளர்ந்துவரும் ஃபேஷன் மாடல்கள், லைம்லைட்டில் இருந்து ஓய்வு பெற்ற சீனியர் கலைஞர்கள், பாடகர்கள், நகைச்சுவை கலைஞர்கள் என இப்படிதான் ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் போட்டியாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், வையாபுரி, மும்தாஜ், பொன்னம்பலம், சரவணன், ரேகா, ஃபாத்திமா பாபு போன்ற எந்த ஒரு சீனியர் ஆர்டிஸ்டுகளும் இம்முறை இல்லை. சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்கள் வயதில் மூத்தவர்கள் என்றாலும், பாடகி, தொகுப்பாளர் என்று இவர்களின் தேர்வும் சற்று வித்தியாசமானதாகவே உள்ளது.
மக்களுக்கு நன்கு பரீட்சையமான முகங்கள் 80 சதவிகிதமும் அவ்வளவாகப் பரீட்சையமில்லாதவர்கள் 20 சதவிகிதமும் இருப்பார்கள். ஆனால், இம்முறை பாதி பேர் மக்களுக்கு அவ்வளவாகப் பரீட்சையமில்லாத முகங்கள். இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளவே சில நாட்கள் ஆகும்.
இம்முறை பாடகர்களின் தேர்வு சுவாரசியமானவை. முகேன் போன்ற தனி இசைக்கலைஞர் ஐக்கி பெரி, கானா பாடகி இசைவாணி, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு என கலக்கலான காம்போவாக இருக்கிறது. மேலும், மாடல்களின் வரவு கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. அதனால்தான் என்னவோ மக்களுக்கு இந்த நிகழ்ச்சி முற்றிலும் வேறு பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது.
ஜெர்மனியிலிருந்து வந்த மாடல் மதுமிதா, திருநங்கை கேட்டகிரியில் கொடிகட்டி பறக்கும் மாடல் நமிதா, மூன்று குழந்தைகளுக்குத் தாயான போதிலும் இன்றும் சாதனைகள் படித்துக்கொண்டிருக்கும் மாடல் நடியா சங், டஸ்கி மாடல் சுருதி, சர்வதேச அழகி போட்டியில் வெற்றிபெற்ற அக்ஷரா என ஏகப்பட்ட மாடல்களை உலகெங்கிலிருந்தும் இறக்கியிருக்கிறது. ஆனால், ஒரு ஆண் மாடல் கூட இல்லாதது ஏன் என்பது தெரியவில்லை. பெண்கள் பாவமில்லையா பாஸ்?
மாஸ்டர் படத்தில் நடித்த துணை நடிகர் சிபி, பப்பி பட நாயகன் வருண் ஆகியோர்களின் வரிசையில், நடிப்பிற்காக முயற்சி செய்துகொண்டிருக்கும் நிரூப், ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரன் அபிநய் ஆகியோர் இணைந்துள்ளனர். வெள்ளித்திரை வரவு குறைவு என்றாலும், சின்னத்திரையிலிருந்து ஏராளமானவர்கள் இருப்பார்களா என்று எதிர்பார்த்தால், அங்கேயும் ட்விஸ்டு வைத்துவிட்டார்கள். பாவனி மற்றும் ராஜு ஆகியோர் மட்டுமே இந்த லிஸ்டில் இருக்கின்றனர்.
சின்னத்திரை மட்டுமல்ல, மக்கள் தற்போது விரும்பி பார்க்கும் யூடியூபர்களையும் உள்ளே இழுத்துக்கொண்டது பிக் பாஸ். திரைப்பட விமர்சனங்கள் செய்து யூடியூபில் வளர்ச்சியடைந்த அபிஷேக் இந்நிகழ்ச்சியில் களமிறங்கியிருப்பது ஆச்சரியம். மேலும், நாட்டுப்புற நடனக்கலைஞர் தாமரை செல்வியின் வருகை யாரும் எதிர்பார்த்திடாத ஒன்று. அதுமட்டுமின்றி இதுபோன்ற உலகளாவிய நிகழ்ச்சியில் ஓர் திருநங்கையைக் கொண்டு வந்ததற்கு உண்மையில் பாராட்டுகள்.
என்னதான் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களை இழுத்துக்கொண்டு வந்திருந்தாலும், நிகழ்ச்சியை எந்த அளவிற்கு அவர்களால் சுவாரஸ்யமாகக் கொண்டுபோக முடியும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இப்போதுவரை, பிரியங்காவின் குரல் மட்டும்தான் தனியாக ஒலித்துக்கொண்டிருக்கிறது!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.