லாஜிக் மீறல்களைத் தாண்டியும் கொண்டாடும் படம் பாகுபலி... ஏன்?

கிங்காங் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டதை ரசித்து கொண்டாடியவர்கள் நாமும் தானே. இப்போது மட்டும் பாகுபலியை கிங்காங்குடனும், காட்ஸில்லாவுடனும் ஒப்பிட்டு விமர்சனம் செய்வதன்...

பாகுபலியின் பிரம்மாண்டத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதினாலும் பத்தாது. நாட்டிலுள்ள ஊடகங்கள் அனைத்தும் கடந்த சில வாரங்களாகவே பாகுபலி புராணத்தைத்தான் பாடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து நாட்களில் 600 கோடியைத் தாண்டி வசூல் ஆகிவிட்டது. இன்னும் வசூல் மழை நிற்காமல் கொட்டும் என்கிறார்கள். பலர் இரண்டு மூன்று முறை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாகுபலிக்கு இருக்கும் இந்த வரவேற்பினால் இந்த வாரம் வெளியாகவிருந்த படங்கள் எல்லாம் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துவிட்டன.

ஆனால் ஒரு பக்கம் பாகுபலி படத்தையும் ராஜமெளலியையும் கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் மறுபக்கம் பாகுபலி படத்தைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களையும் பார்க்க நேரிடுகிறது. எல்லா வெற்றிப் படங்களுக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் இருப்பது சஜகம் தான். ஆனால் இந்தப் படத்துக்கு வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அதிலுள்ள லாஜிக் மீறல்கள் தான். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

’என்னதான் மாவீரனாக இருந்தாலும் இந்த ஹீரோயிஸம் ரொம்ப ஓவர்தான்’, ‘பாகுபலி பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும் எப்படி அவன் தவறானவன் என்ற முடிவுக்கு சிவகாமி தேவி வந்தார்’, ‘ராஜமாதாவான சிவகாமி தேவி முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் வெவ்வேறு மனநிலைகளில் செயல்படுகிறார். முதல் பாகத்தில் நியாயம், தர்மம், உண்மை. ஆனால் இரண்டாம் பாகத்தில் சுயகழிவிரக்கம், கோபம், எடுப்பார் கைபிள்ளை’, ‘ராஜாமாதாவுக்கும் பாகுபலிக்கும் செய்த கொடுமையைப் பார்த்தும் 25 ஆண்டுகள் பல்வாள் தேவனுக்கு ஊழியம் செய்து வருகிறார்’ இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இனி பாகுபலி போன்ற படங்களை எப்படி அணுகலாம் என்பதைப் பார்க்கலாம். பாகுபலி மட்டும் அல்ல கிட்டதட்ட இன்றைய பெரும்பாலான வெகுஜன படங்கள் ஹீரோயிச படங்கள் தான். இந்தியில் கான்கள், தெலுங்கு ஹீரோக்கள், தமிழில் அஜித், விஜய்யில் ஆரம்பித்து ஓங்கி அடிக்கும் சூர்யா வரை எல்லோரும் மலையை ஒற்றை கையால் உடைப்பதும், பெரிய மரத்தைப் பிடுங்கி அடிப்பதும் சர்வசாதாரணமாகவே செய்கிறார்கள். மக்கள் அதற்கெல்லாம் பழகிவிட்டார்கள். பெரும்பாலான மக்கள் திரைப்படத்தை பொழுதுபோக்கவே நினைக்கிறார்கள். ஆனால் அந்த பொழுது ரம்யமாகவும் சுவாரஸ்யமாகவும் கழிய வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

மக்களின் அந்த எதிர்பார்ப்பை ஒரு படம் நிறைவேற்றிவிட்டாலே போதும் அந்தப் படம் வெற்றிதான். ஆனால் பாகுபலி படம் ஹீரோயிசம், பிரம்மாண்டம் அவற்றையெல்லாம் தாண்டியும் சில விஷயங்களைப் போகிற போக்கில் உணர்த்தும் படமாக இருப்பதால்தான், விமர்சகர்கள் பலரையும் கவர்ந்திருக்கிறது.

பாகுபலி முதல் பாகத்தில் பாகுபலி, பல்வாள் தேவன் இருவரில் யார் அரசனாகத் தகுதியானவன், அவர்கள் இருவரின் குணநலன்கள் என்ன என்பதைக் காட்டும் கதையாக மட்டுமே இருந்தது. ஆனால் பாகுபலி இரண்டாம் பாகம், கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார், மகன் பாகுபலி பல்வாள்தேவனை பழிவாங்கினானா என்பதோடு முடிந்துவிடவில்லை. அதையெல்லாம் தாண்டிய அனுபவமும் படிப்பினைகளும் பாகுபலி இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ளன.

இப்படத்தில் ராணா, நாசர் இருவரின் கதாபாத்திரம் தவிர்த்து ரம்யா கிருஷ்ணன், பிரபாஸ், அனுஷ்கா மற்றும் சத்யராஜ் ஆகிய நால்வரின் கதாபாத்திரங்கள் தான் முக்கியத்துவம் பெறுகின்றன. அனுஷ்காவின் தேவசேனா கதாபாத்திரம் ஒரு பெண்ணின் உரிமைகளைப் பற்றியும் பெண்ணின் மாண்பைக் குறித்தும் பேசுகின்றது. ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் சூழ்ச்சிகளை நம்பி தடம் மாறுவதால் தான் மகிழ்மதி பேரரசு கொடுங்கோலனின் கைகளுக்கு போகிறது. அதற்கான விளக்கத்தையும் தேவசேனையின் ’ஒரு நல்லவனின் மெளனம் மிக ஆபத்தானது’ என்ற வசனம் மூலமாக உணர்த்தி விடுகிறார் இயக்குனர்.

பிரபாஸின் கதாபாத்திரம் ஒவ்வொரு தனி மனிதனுக்குமான பாடம். பாகுபலி என்பவன் அரசன், மாவீரன் மட்டுமல்ல. மனிதன். உண்மைக்கும் தர்மத்துக்கும் மட்டுமே கட்டுப்படுபவன். ’உண்மையும் நியாமுமே தர்மம்’ என்பதை மனதில் வைத்துக்கொண்டு வாழ்பவன். அதற்காக அரியாசணத்தையும் தூக்கி எறிய துணியவில்லை. அதேசமயம் தன் தாய், ராஜமாதாவுக்கு பணிவாக அவரது தவறுகளைச் சுட்டிக்காட்டவும் தவறவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் தன்னிலையிலிருந்து மனம்பிறழாமல் இருக்கும் பாகுபலியின் வீரமும், கோபமும், விவேகமுமே முக்கியமாகப் பார்வையாளர் பார்க்க வேண்டியவை.

அவற்றை அழகான கதைப் பின்னணியில் துளியும் சளிக்காமல் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் சொன்ன விதத்தில் தான் ராஜமெளலி இயக்குனராக மக்களின் மனங்களை வென்றெடுக்கிறார். கிங்காங் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டதை ரசித்து கொண்டாடியவர்கள் நாமும் தானே. இப்போது மட்டும் பாகுபலியை கிங்காங்குடனும், காட்ஸில்லாவுடனும் ஒப்பிட்டு விமர்சனம் செய்வதன் மனநிலை எப்படிப்பட்டது என்று தெரியவில்லை. நல்ல விஷயங்கள் கிங்காங் நேரடியாகச் சொன்னால் என்ன, மனிதன் கிங்காங்காக மாறிச் சொன்னால் என்ன?

எனவே பாகுபலி போன்ற படங்களை விமர்சன புத்தியைத் தாண்டி அனுபவித்து ரசிக்க பழகிக்கொண்டால்தான் அதன் உண்மையான பிரம்மாண்டத்தை உணர முடியும்.

×Close
×Close