நடிகர்களின் போராட்டம் நன்மை பயக்குமா?

மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர் தங்கள் துறையில் சாதனைப் படைத்தால், அரசியல் கட்சி ஆரம்பியுங்கள், எங்களை ஆட்சி செய்ய வாருங்கள் என்று யாரும் ...

பாபு

காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் வரும் எட்டாம் தேதி அரைநாள் அறவழி கண்டனப் போராட்டத்தை தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்துகிறது. காவிரிக்காகவும், ஈழத்தமிழ் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தும் தென்னிந்திய நடிகர் சங்கம் இதற்கு முன்பும் போராட்டங்கள் நடத்தியிருக்கிறது. ஆனால், இந்தப் போராட்டங்கள் அவசியமா? இவற்றால் ஏதாவது பயன் விளைந்திருக்கிறதா? இந்த கோணத்தில் ஆராய வேண்டியது இன்றைய அவசியமாகிறது.

நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள் பதவியேற்றதும், சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், காவிரி உள்பட எந்த மக்கள் பிரச்சனைக்கும் நடிகர் சங்கம் இனி போராடாது என்று அறிவித்தார். அரசுகள் பேசித்தீர்க்க வேண்டிய விவகாரத்தில் நாங்கள் தலையிட்டு போராட்டம் நடத்துவதில்லை என்ற அர்த்தத்தில் அவர் கூறினார். அதற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

ஆனால், விஷால் கூறியதுபோல், மக்கள் பிரச்சனைகளில் இருந்து நடிகர்கள் தள்ளி நிற்பதே நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது.

தமிழ் திரைத்துறை எப்போதும் ஆளும்கட்சியை அண்டியே இருந்து வந்துள்ளது. அவர்கள் முன்னெடுக்கும் எந்தப் போராட்டமும் ஆளும் கட்சியின் கண்ணசைவுக்குப் பிறகே நடத்தப்பட்டன என்பது வரலாறு. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது காவிரிப் பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது. நீங்கள் காவிரியில் நீர் தரவில்லை என்றால், நெய்வேலி மின்சாரம் கிடையாது என்று எச்சரிக்க, நடிகர்களை ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டார். ஜெயலலிதா அரசின் வழிகாட்டலில் பாரதிராஜா தலைமையில் நடிகர்கள் நெய்வேலியில் குவிந்தனர். நடிகர்களுக்கு பரிமாறப்பட்ட பதினேழுவகை அசைவ உணவுகள் குறித்து ஊடகங்கள் உற்சாகமாக பட்டியலிட்டன. நடிகர் கமலுடன் ஒன்றாக காரில் வந்த நடிகை யார் என்று கிசுகிசுக்கள் எழுதப்பட்டன. ஆனால் பலன்? எதுவுமில்லை.

கலைஞர் ஆட்சியில் சேப்பாக்கத்தில் காவிரிக்காக மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் திரைத்துறையினரால் ஒழுங்கு செய்யப்பட்டது. நட்சத்திரங்களை காண ரசிகர்கள் முண்டியடித்ததை ஊடகங்கள் நாளெல்லாம் ஒளிபரப்பியது. விவசாயிகளை அவமதிக்கும்விதமாக ரசிகர்களின் செயல்பாடுகள் அமைந்தன. முரளி, அர்ஜுன், ரஜினி போன்ற கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகர்களிடம் மைக் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது. கர்நாடகத்தை எதிர்த்து பேச அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்த நடிகர்கள் தமிழில் நடித்தாலும் அவர்களின் பூர்வீகம் கர்நாடகா. அவர்களின் சொத்துக்கள், உறவினர்கள் அங்கு உள்ளனர். கர்நாடகாவுக்கு போகாமல் அவர்களால் தவிர்க்க முடியாது. கர்நாடகாவை விமர்சித்துவிட்டு அங்கு சென்றால் என்னவாகும் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்.

அந்த போராட்டத்தில் ரஜினி, தமிழகத்துக்கு காவிரி நீர் தராமல் போராடும் கன்னடர்களை உதைக்கணும் என்றார். சத்யராஜ் ரஜினியின் கர்நாடக பாசத்தையும், தமிழ் விரோதியான வாட்டாள் நாகராஜை ஒருகாலத்தில் தனக்குப் பிடித்த பேச்சாளர் என்று ரஜினி கூறியதையும் விளாசினார். கமல் அமைதியாக சத்யராஜை கண்டித்தார். வெறுப்பு கூடாது என்றார்.

இதன் விளைவுகள் என்ன என்பது அனைவருக்குமே தெரியும். உதைக்கணும் என்று சொன்னதற்காக ரஜினி படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு ரஜினி அப்படி சொன்னதற்காக கன்னடத்தில் மன்னிப்பு கேட்டார். அப்போதும் சத்யராஜ் பொங்கினார். அவரது படம் கர்நாடகாவில் வெளியாவதில்லை என்பதால் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால், காலம் மகத்தானது. எப்படியும் புரளும். பாகுபலி படத்தை சத்யராஜை முன்னிட்டு கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் எச்சரிக்க, பாகுபலி தயாரிப்பு தரப்பின் அழுத்தம் காரணமாக, சத்யராஜ் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அதாவது பல வருடங்கள் முன்பு சேப்பாக்கத்தில் பேசிய பேச்சுக்காக. சத்யராஜுக்கே இப்படியொரு நெருக்கடி என்றால் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட முரளி, அர்ஜுன், பிரகாஷ்ராஜுக்கு என்ன மாதிரி அழுத்தம், பிரச்சனை இருக்கும், அவர்களை வலுக்கட்டாயமாக கர்நாடகாவுக்கு எதிராக பேச வைக்கக் கூடாது என்பது நமக்கேன் புரியவில்லை?

எப்போது காவிரி பிரச்சனை எழுந்தாலும் முதலாவதாக கர்நாடக திரையுலகு தெருவுக்கு வந்துவிடும். அதன்காரணமாக தமிழ் திரைத்துறைக்கும் ஒரு போராட்ட நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இன்னொரு அழுத்தம் தமிழக மக்களிடமிருந்து வருகிறது. தமிழ்நாட்டில் சம்பாதிச்சிட்டு தமிழ் மக்களோட பிரச்சனைக்கு இந்த நடிகர்கள் பேசாமலிருக்கிறார்கள் என்று நடிகர்கள் மீது கணைகள் வீசப்படும்.

மருத்துவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், ஹேnட்டல் நடத்துகிறவர்கள் தொடங்கி பிச்சையெடுக்கிறவர்கள்வரை அனைவரும் தமிழ்நாட்டில்தான் சம்பாதிக்கிறார்கள். அவர்களிடம் முன்வைக்கப்படாத இந்தக் கேள்வி ஏன் நடிகர்களிடம் மட்டும் கேட்கப்படுகிறது?

மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர் என்று யாராக இருப்பினும் தங்கள் துறைகளில் சாதனைப் படைத்தால், அரசியல் கட்சி ஆரம்பியுங்கள், எங்களை ஆட்சி செய்ய வாருங்கள் என்று யாரும் அழைப்பதில்லை. அவர்கள் எந்தத்துறையில் சாதித்தார்களோ அதை மட்டும் பாராட்டுகிறேnம். ஆனால், இரண்டு படங்களில் நடித்தாலே, அரசியலில் குதிப்பீர்களா ஆட்சிக்கு வருவீர்களா என்று நடிகனைப் பார்த்து கேட்கிறேnம். படத்தில் நடித்தாலே ஒருவனுக்கு அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய, அரசை நிர்வகிக்கக்கூடிய தகுதி வந்துவிட்டதான ஒரு மனநோய் நம்மிடையே உள்ளது. அந்த நோயின் விளைவே, எந்தப் பிரச்சனைக்கும் நடிகர்கள் போராட வேண்டும் என்று எதிர்பார்ப்பது. நீ நடிகன், நடிப்பது உன் வேலை, பிடித்தால் ரசிக்கிறேnம், இல்லையென்றால் விமர்சிப்போம் என்று சுயமரியாதையுடன் நடிகனை அணுகும் ஆள்களல்ல நாம். திரையில் நல்லது செய்யும் நடிகன், நிஜத்திலும் அந்த சூப்பர் ஹீரோ செயல்களை செய்வான் என்று நம்பும் நோய்த்தன்மை கொண்டவர்கள். ஆனால், நடிகர்கள் போராடி இதுவரை எந்த நன்மையும் விளைந்ததில்லை.

அதேநேரம் மக்கள் திரளின் போராட்டம் பல நன்மைகளை ஏற்படுத்தியது. ஜல்லிக்கட்டுக்காக நடந்த மக்களின் எழுச்சியே மத்திய, மாநில அரசுகளை செயல்பட வைத்தது. நாம் போராடாவிட்டால் கெட்டப்பெயர் சேர்ந்துவிடும் என நடிகர்களை களத்துக்கு அழைத்து வந்தது. மக்கள் பிரச்சனைக்காக இனி போராட மாட்டோம் என்ற நடிகர் சங்கம் இன்று போராட்ட அறிவிப்பை விடுத்திருக்கிறது என்றால், மக்களின் எழுச்சிமிகு போராட்டங்களே காரணமாகும். மக்கள் தெருவில் இறங்கி போராடுகையில் நாம் ஆதரவு தெரிவிக்கவில்லையென்றால் தனித்துவிடப்படுவோம் என்ற அச்சம்.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, நடிகர்கள் என அனைவரையும் செயல்பட வைக்க, சரியான திசையில் செலுத்த மக்கள் சக்தியால் மட்டுமே முடியும். மக்கள் அவர்களை தங்கள் விருப்பத்துக்கேற்ப செயல்பட வைக்க வேண்டுமே தவிர, தங்களை வழிநடத்த அவர்களில் ஒருவரை தேடுவது மடமை.

நடிகர்களின் போராட்டத்தின் போது, தமது விருப்பத்துக்குரிய நடிகர்களை காணும் ஆவலில் ரசிகர்களாகிய பொதுமக்கள் செய்யும் கூத்துக்கள் நடிகர்கள் மீதான பிம்பத்தை மென்மேலும் ஊதி பெரிதாக்குகின்றன. நடிகர்களின் போராட்டத்தால் நடக்கும் ஒரேவிளைவு இது மட்டுமே. எட்டாம் தேதி நடக்கிற போராட்டத்திலாவது இந்த விபத்து தவிர்க்கப்பட வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close