வேலைநிறுத்தத்தால் தொழிலாளர்கள் பாதிக்கக் கூடாது - ரஜினியின் பேச்சு தொழிலாளர் நலனா? சுயநலமா?

தயாரிப்பாளர்கள் சங்கம் தனது கோரிக்கைகள் நிறைவேறும்வரை வேலைநிறுத்தத்தை கைவிடக்கூடாது. இதில் அரசின் பங்கும் உள்ளது என்பதையும் உணரவேண்டும்.

பாபு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. மார்ச் 1 முதல் புதுப்படங்கள் வெளியாகவில்லை. மார்ச் 16 முதல் சினிமா சம்பந்தமான அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டன. அன்றாடப் பிரச்சனைகள் குறித்து கருத்து சொல்ல மாட்டேன் என்று அறிவித்த ரஜினி, திரையுலக வேலைநிறுத்தப் போராட்டத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று வெளிப்படையாகப் பேசினார். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் ரஜினியை சந்தித்து, வேலைநிறுத்தத்துக்கான காரணங்களை விளக்கினார். அப்போதும் ரஜினி, தொழிலாளர் நலன் வேலைநிறுத்தத்தால் பாதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

மேலோட்டமாகப் பார்த்தால் ரஜினி பெப்சி தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டு இதனை கூறியதாகத் தோன்றும். இன்று தொழிலாளர்களுக்காக பரிந்துபேசும் ரஜினி, சில மாதங்கள் முன்பு, பெப்சி தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்த போது தொழிலாளர்களை ஆதரிக்காமல், வேலைநிறுத்தம் எனக்குப் பிடிக்காத வார்த்தை என்றார் ரஜினி. அப்போதும் அவர் தொழிலாளர் பக்கம் நிற்கவில்லை. காலா படப்பிடிப்பு வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் என்ற பதட்டமே அவரிடம் தெரிந்தது. அன்று தொழிலாளர்களுக்காக பேசாதவர் இன்று தொழிலாளர் நலனில் அக்கறை காட்டுவதுபோல் பேசுவது எதனால்?

வேலைநிறுத்தம் முடிந்த பிறகு மார்ச் மாதம் வெளியாகாமல் தங்கிப்போன படங்கள் சீனியாரிட்டி அடிப்படையில் வெளியாக அனுமதிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி காலா படம் அறிவித்த ஏப்ரல் 27 வெளியாக வாய்ப்பில்லை. அதன் காரணமாகவே ரஜினி வேலைநிறுத்தத்தை விரும்பவில்லை என சிலர் கூறுகின்றனர். தவறு. காலா படத்தை லைகாவுக்கு லம்பாக ஒரு தொகைக்கு படத்தை தயாரித்த ரஜினியின் மருமகன் தனுஷ் விற்றுவிட்டார். அதன் ரிலீஸை குறித்து இனி கவலைப்பட வேண்டியது லைகாதான், ரஜினி அல்ல. வேலைநிறுத்தம் ரஜினிக்கு ஏற்படுத்தும் பதட்டத்துக்கு அதைவிட முக்கிய காரணம் உள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் சர்வீஸ் புரவைடர்ஸ் நிறுவனங்களான க்யூப் மற்றும் யுஎஃப்ஓ ஆகியவற்றுக்கு எதிராக மட்டும் இந்த வேலைநிறுத்தத்தை செய்யவில்லை. திரையுலகில் உள்ள முக்கியமான பிரச்சனைகள் அனைத்தையும் இந்த வேலைநிறுத்தத்தை முன்வைத்து தீர்க்க நினைக்கிறார்கள். அதனை வெளிப்படையாக அறிவித்து இயக்குனர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் என ஒவ்வொரு சங்கமாக பேசி வருகின்றனர். அவர்கள் முன்வைக்கும் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று, திரையரங்கு கட்டணத்தை கணினிமயமாக்க வேண்டும். ஒரு படம் எவ்வளவு வசூலிக்கிறது என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் நேரடியாக ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை பாதிக்கக் கூடியது.

ரஜினி, விஜய் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் அதிகம் வசூலிக்க முக்கிய காரணம், முறைப்படுத்தப்படாத டிக்கெட் கட்டணம். படம் வெளியான முதல் மூன்று தினங்களுக்கு ரஜினி படம் ஆயிரம் ரூபாய்கள்வரை திரையரங்குகளிலேயே விற்கப்படுகிறது. ரஜினி படத்தை பல மடங்கு அதிக விலைக்கு வாங்கும் திரையரங்குகள் இப்படி விற்றால் மட்டுமே போட்ட பணத்தை எடுக்க முடியும். அப்படி எடுக்க முடியும் என்பதாலேயே அதிக கட்டணம் கொடுத்து படத்தை வாங்குகிறார்கள். விஜய், அஜித் முப்பது கோடிகள்வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ரஜினியின் சம்பளம் அறுபது கோடிகளுக்கும் மேல் என்கிறார்கள். அதாவது படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கு மேல் இவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதன் காரணமாகவே படத்தின் விலை அதிகரிக்கிறது. அதனை பார்வையாளனின் பாக்கெட்டில் கைவிட்டு திரையரங்குகள் திருடுகின்றன.

ஒரு படத்தை ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிடுவது என்ற கார்ப்பரேட்டின் பாரசூட் தியரிக்குப் பிறகு படங்களின் வசூலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு படத்தின் ஒட்டு மொத்த வசூலில் கிட்டத்தட்ட எண்பது சதவீதம் முதல் ஐந்து முதல் எட்டு தினங்களில் வசூலாகிவிடுகிறது. ஆக, படம் குறித்த ‘ஹைப்’பை ஏற்றி, முதல் பத்து தினங்களில் ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்து, படம் நல்ல படமா இல்லை மோசமா என்பதை அறிவதற்குள் கல்லா கட்டிவிடுகிறார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கம் என்ன சொல்கிறது என்றால், இப்படி அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அதுவும் எத்தனை டிக்கெட்கள் எந்த விலைக்கு விற்கப்பட்டன என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய வேண்டும். அதனால் டிக்கெட் விற்பனையை கணினிமயமாக்குங்கள் என்கிறார்கள். தனது படம் எவ்வளவு வசூலிக்கிறது என்று நடிகர்களுக்கு தெரிவதில்லை. அதனால் அதிக சம்பளம் கேட்கிறார்கள். டிக்கெட் விற்பனை வெளிப்படையானால் அவர்கள் படத்தின் வசூல் என்ன என்பது தெரிந்துவிடும். அதற்கேற்ப சம்பளத்தை குறைத்துக் கொள்வார்கள் என்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுவது போல் டிக்கெட் கட்டணம் வெளிப்படைத்தன்மைக்கு வந்தால் கபாலி படம் வசூலித்ததை காலா படம் வசூலிக்க குறைந்தது நூறு நாள்கள் அனைத்துத் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக அப்படம் ஓட வேண்டும். அது நடக்கிற காரியமில்லை. வசூல் கணிசமாக குறையும். அப்படி குறைந்தால் முதலில் குறைவது ரஜினியின் சம்பளமாகவே இருக்கும். காலாவுக்குப் பிறகு 2.0 வருகிறது. 400 கோடி பட்ஜெட் என்கிறார்கள். கபாலிக்கே டிக்கெட் ஆயிரம் ரூபாய்க்கு விற்றால் 2.0 க்கு எவ்வளவுக்கு விற்க வேண்டும்? இப்படியொரு சூழலில் தயாரிப்பாளர்கள் சங்கம் டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்து, அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கே டிக்கெட்டை விற்பனை செய் என்கிறது. சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் பதட்டம் வரத்தான் செய்யும். வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டால் மட்டுமே இந்த இக்கட்டிலிருந்து முன்னணி நடிகர்கள் தப்பிக்க முடியும். அதனால் தொழிலாளர் நலன் என்ற சப்பைக்கட்டை முன்வைக்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கம் தனது கோரிக்கைகள் நிறைவேறும்வரை வேலைநிறுத்தத்தை கைவிடக்கூடாது. இதில் அரசின் பங்கும் உள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே திரையரங்குகள் வசூலிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பெரிய பட்ஜெட் படங்களுக்கு இந்தக் கட்டணம் போதாது என்றால், அப்படிப்பட்ட படங்களுக்கு மட்டும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அரசிடம் சிறப்பு அனுமதி பெறலாம். 204 ரூபாய் கட்டணம் வாங்குகிற இடத்தில் 300 ரூபாயோ 350 ரூபாயோ அவர்கள் வசூலித்துக் கொள்ளட்டும். ஆனால், அப்படி உயர்த்துகிற கட்டணம் அரசு அனுமதித்ததாகவும், கணக்கில் வரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே சரிந்துகொண்டிருக்கும் திரைப்பட வர்த்தகத்தையும் அதை நம்பியிருக்கும் பல லட்சம் தொழிலாளர்களையும் காப்பாற்ற முடியும்.

முக்கியமாக, வேலைநிறுத்தத்துக்கு பின்னுள்ள காரணங்களை அறியாமல், ரஜினியின் தொழிலாளர்நலன் இனிப்பு மிட்டாய்க்கு யாரும் பலியாகிவிடக் கூடாது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close