கொரோனா சிகிச்சைக்கு அசித்ரோமைசின் பலனளிக்காது : புதிய ஆய்வு

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அசித்ரோமைசின் பங்கு இல்லை எனவும், இது மருந்துப்போலி விளைவை(placebo effect) மட்டுமே கொண்டுள்ளது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

azhithromycin

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வெளிநோயாளிகளுக்கு ஒரு கட்டத்தில் அசித்ரோமைசின் பெரும்பாலும் பரிந்துரைக்கப்பட்டது. எனினும் தொற்று நோய் தொடங்கிய ஒரு வருடத்தில் சிகிச்சைக்காக அந்த மருந்தின் பயன்பாடு குறைந்துவிட்டது. இது கொரோனாவுக்கு எதிராக செயல்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என கூறப்பட்டது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அசித்ரோமைசின் பங்கு இல்லை எனவும், இது மருந்துப்போலி விளைவை(placebo effect) மட்டுமே கொண்டுள்ளது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மருந்துபோலி என்பது உண்மையான மருந்துகளால் அல்லது மருத்துவ நடைமுறைகளால் கிடைக்கக்கூடிய பலன்களை வழங்கக்கூடிய போலியான மருந்துகள் அல்லது மருத்துவ நடவடிக்கைகள் ஆகும். மருந்துகள் மற்றும் விஞ்ஞானிகள் புதிய மருந்துகளின் உடலியல் மற்றும் உளவியல் விளைவுகளை நன்கு புரிந்துகொள்ள உதவுவதற்கு உதவும் மருத்துவ ஆராய்ச்சியில் placebo-க்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இம்மாதிரியான ‘மருந்துகளை’ மருந்துக்குப் போலி (placebo) என்றும், இதனால் கிடைக்கப்பெறும் பலனை ‘மருந்துப்போலி விளைவு’ (placebo effect) என்றும் அழைக்கிறார்கள்.

மருந்து மற்றும் கோவிட் -19

அசித்ரோமைசின் என்பது பரவலாக கிடைக்கக்கூடிய ஆன்டிபயாடிக் ஆகும். இந்த மருந்து பல்வேறு பாக்டீரியா தொற்றுக்கு வழங்கப்படும். இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு முதல் இதன் பயன்பாடு குறைந்துவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். கொரோனா சிகிச்சைக்கான தேசிய மாநில வழிகாட்டுதல்களிலிருந்து இது நீக்கப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்புகள்

கடந்த வாரம் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் ஜர்னலில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது. கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து 263 தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களில் 171 பேர் அசித்ரோமைசின் டோஸ் எடுத்துக்கொண்டனர். 92 பேர் பொருந்தக்கூடிய மருந்துப்போலி எடுத்தனர். அசித்ரோமைசின் Vs மேட்சிங் மருந்துப்போலியின் சீரற்ற மருத்துவ சோதனை மே 2020 முதல் மார்ச் 2021 வரை நடத்தப்பட்டது.

SARS-CoV2 பாதித்த நோயாளிகளுக்கு மருந்துப்போலிக்கு ஒப்பிடும்போது அசித்ரோமைசின் ஒரு டோஸ் மூலம் 14 நாட்களில் கொரோனா அறிகுறிகள் குணமாவதற்கான வாய்ப்புகள் இல்லை என ஆய்வின் ஆசிரியர்கள் கேத்தரின் ஓல்டன்பர்க் மற்றும் பலர் தெரிவித்தனர். SARS-CoV2 பாதித்த வெளிநோயாளிகளுக்கு அசித்ரோமைசின் மருந்தை வழங்க ஆய்வு முடிவுகள் ஆதரிக்கவில்லை என கூறினர்.

தொற்று நோய் தொடங்கிய ஆரம்ப நாட்களில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சிகிச்சை நெறிமுறைகளில் கொரோனாவுக்கு எதிராக குறிப்பிட்ட ஆன்டிவைரல் மருந்துகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டது. மேலும் கடுமையான நோய் பாதிப்பு மற்றும் ஐ.சி.யூ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு அசித்ரோமைசினுடன் இணைந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயினை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம் என அனுமதித்தது.

சில மாநிலங்களின் சுகாதாரத்துறையும் மூன்று மாதங்களுக்கு முன் தங்களது வழிகாட்டுதலில் வீட்டுத் தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அசித்ரோமைசின் வழங்கலாம் என கூறியது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட கொரோனாவுக்கான மருத்துவ மேலாண்மை நெறிமுறையில் அசித்ரோமைசின் சேர்க்கப்படவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகளை பயன்படுத்த தரவுகள் ஆதரிக்கவில்லை என்பதால் பெரும்பாலான வழிகாட்டுதல்களில் இவை சேர்க்கப்படவில்லை என்றார். மேலும், “இந்த மருந்துகளால் சிகிச்சையில் நல்ல பலன் ஏற்பட்டுள்ளதாக உறுதியான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் HCQS- ஐ பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் இது சில நன்மைகள் கொண்டதாக இருக்கலாம் ஆனால் தீங்கு விளைவிக்காது. அதேபோல் அசித்ரோமைசின் ஆண்டிபயாடிக்காக பயன்படுத்தப்படாமல் நோய் எதிர்ப்புத் திறன் மாற்றியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு மருந்துகளும் சில பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன” என கூறினார்.

மருந்தின் பயன்பாட்டை குறைத்தல்

கொரோனா வைரஸின் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய பணிக்குழுவின் உறுப்பினர் டாக்டர் சஞ்சய் பூஜாரி கூறுகையில், ” பல சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளால் அசித்ரோமைசின் செயல்திறன் மிக்கதாக இல்லை என்று காட்டப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்தின் பயன்பாட்டின் விகிதம் குறைந்திருக்கலாம், என்றார்.

புனேவைச் சேர்ந்த தொற்று நோய் ஆலோசகர் டாக்டர் பரிக்ஷித் பிரயாக் கூறுகையில், அசித்ரோமைசின் பயன்பாடு நீண்ட காலத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது. புனே பிரிவின் கோவிட் பணிக்குழுவின் தலைவர் டாக்டர் டி பி காடம் கூறுகையில், ” அசித்ரோமைசின் கடந்த ஆண்டு டைபிக்கல் நிமோனியாவுக்கு ஒரு ஆண்டிபயாடிக் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருதய பக்கவிளைவுகள் காரணமாக இந்த மருந்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் எந்த வழிகாட்டுதல்களிலும் அசித்ரோமைசின் இல்லை” என கூறினார்.

தேவையற்ற பயன்பாட்டை தவிர்த்தல்

கொரோனா சிகிச்சையில் அசித்ரோமைசினுக்கு பங்கு இல்லை என்பதால் அதன் பயன்பாட்டைத் தவிர்ப்பது தேவையற்ற ஆண்டிபயாடிக் எடுத்துக்கொள்வதை குறைக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா நோயாளிகள் ஆன்டிபயாடிக் அதிகளவில் எடுக்கும்போது ஆண்டிமைக்ரோபையல் எதிர்ப்பிற்கான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். பாக்டீரியா அறிகுறி இல்லாத நிலையில் கொரோனாவுக்கு அசித்ரோமைசின் பரவலாகப் பயன்படுத்துவது எதிர்ப்புத் திறனை பாதிக்கும் என்று ஓல்டன்பேர்க்கும் மற்ற ஆய்வாளர்களும் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Azithromycin out of favour as covid 19 therapy

Next Story
இந்தியாவில் கண்காணிப்பு சட்டங்கள் மற்றும் தனியுரிமை குறித்த கவலைகள்!Project Pegasus the laws for surveillance in India Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com