Advertisment

மேக வெடிப்பு நடைபெறுவது எப்படி? இந்தியாவில் அடிக்கடி நடைபெறுகிறதா?

மேக வெடிப்பு என விவரிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வும் உண்மையில், வரையறையின்படி, மேக வெடிப்பு அல்ல. ஏனென்றால், இந்த நிகழ்வுகள் மிகவும் குறிப்பிட்ட இடத்தில் நிகழ்பவை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cloudburst

உத்தரகாண்ட் மாநிலத்தில் சனிக்கிழமையன்று தொடர்ச்சியான மேக வெடிப்புகள் தாக்கியதை அடுத்து, ஆற்றுவெள்ளத்தின் அருகே தனது உடைமைகளை மீட்கும் நபர். (PTI)

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மேக வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள சில பகுதிகள் இந்த நேரத்தில் கனமழையைப் பதிவு செய்துள்ளன, நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதித்தது, மேலும் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

Advertisment

மேக வெடிப்பு என்றால் என்ன?

மேக வெடிப்பு என்பது குறிப்பிட்ட இடத்தில் நிகழும் தீவிரமான மழைப்பொழிவு ஆகும். ஒரு சிறிய புவியியல் பகுதியில், குறுகிய காலத்தில் பெய்யும் மிகக் கடுமையான மழை பரவலான அழிவை ஏற்படுத்தும். குறிப்பாக மலைப்பகுதிகளில் இந்த நிகழ்வு மிகவும் பொதுவானது.

இருப்பினும், மிக அதிக மழையின் அனைத்து நிகழ்வுகளும் மேக வெடிப்புகள் அல்ல. மேக வெடிப்புக்கு ஒரு குறிப்பிட்ட வரையறை உள்ளது: சுமார் 10 கிமீ x 10-கிமீ பரப்பளவில் ஒரு மணி நேரத்தில், 10 செமீ அல்லது அதற்கு மேற்பட்ட மழை பொழிவு மேக வெடிப்பு நிகழ்வாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த வரையறையின்படி, அதே பகுதியில் அரை மணி நேரத்தில் 5 செ.மீ மழை பொழிந்தால் அதுவும் மேக வெடிப்பாகவும் வகைப்படுத்தப்படும்.

இதை வைத்துப் பார்த்தால், ஒரு சாதாரண ஆண்டில், இந்தியா, ஒட்டுமொத்தமாக, ஆண்டு முழுவதும் சுமார் 116 செ.மீ மழையைப் பெறுகிறது. அதாவது ஒரு வருடத்தில் இந்தியாவில் எல்லா இடங்களிலும் பெய்யும் மழை முழுவதும் அதன் பரப்பளவில் சமமாகப் பரவியிருந்தால், மொத்த நீர் 116 செமீ உயரத்தில் இருக்கும். நிச்சயமாக, நாட்டில் மழைப்பொழிவில் மிகப்பெரிய புவியியல் மாறுபாடுகள் உள்ளன, மேலும் சில பகுதிகள் ஒரு வருடத்தில் இந்த அளவை விட 10 மடங்கு அதிகமாகப் பெறுகின்றன. ஆனால் சராசரியாக, இந்தியாவில் எந்த இடத்திலும் ஒரு வருடத்தில் சுமார் 116 செ.மீ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

அதுவே மேக வெடிப்பு நிகழ்வின் போது, அந்த இடத்தில் ஆண்டு மழையில் கிட்டத்தட்ட 10%, ஒரு மணி நேரம் பெய்யும் மழையில் கிடைத்துவிடுகிறது. ஜூலை 26, 2005 அன்று மும்பை அனுபவித்ததை விட மோசமான நிலைமை இது, இது சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் மழைப்பொழிவின் மிக தீவிர நிகழ்வுகளில் ஒன்றாகும். அந்த நேரத்தில், மும்பையில் 24 மணி நேரத்தில் 94 செமீ மழை பெய்தது, இதன் விளைவாக 400 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர் மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டன.

மேக வெடிப்புகள் எவ்வளவு பொதுவானவை?

மேக வெடிப்புகள் அசாதாரணமான நிகழ்வுகள் அல்ல, குறிப்பாக மழைக்கால மாதங்களில். இவற்றில் பெரும்பாலானவை இமயமலை மாநிலங்களில் நிகழ்கின்றன, அங்கு உள்ளூர் புவியியல், காற்று அமைப்புகள், கீழ் மற்றும் மேல் வளிமண்டலத்திற்கு இடையே உள்ள வெப்பநிலை மாற்றங்கள் போன்றவை மேக வெடிப்பு நிகழ்வுக்கு வழிவகுக்கின்றன.

இருப்பினும், மேக வெடிப்பு என விவரிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வும் உண்மையில், வரையறையின்படி, மேக வெடிப்பு அல்ல. ஏனென்றால், இந்த நிகழ்வுகள் மிகவும் குறிப்பிட்ட இடத்தில் நிகழ்பவை. அவை பெரும்பாலும் மழையை அளவிடும் கருவிகள் இல்லாத மிகச் சிறிய பகுதிகளில் நடைபெறுகின்றன. இருப்பினும், இந்த நிகழ்வுகளின் விளைவுகள் சிறிய பகுதிகளில் மட்டும் அல்ல. நிலப்பரப்பின் தன்மை காரணமாக, கனமழை நிகழ்வுகள் அடிக்கடி நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளங்களைத் தூண்டி, கீழ்நோக்கி விரிவான அழிவை ஏற்படுத்துகின்றன.

இதனால் தான், மழையின் அளவு வரையறுக்கப்பட்ட அளவுகோல்களை சந்திக்கிறதா என்பதைப் பொருட்படுத்தாமல், மலைப்பாங்கான பகுதிகளில் உயிர் மற்றும் உடைமைகளை அழிக்க வழிவகுக்கும் ஒவ்வொரு திடீர் மழையும் "மேகவெடிப்பு" என்று விவரிக்கப்படுவதற்கு இதுவே காரணம். அதே நேரத்தில், தொலைதூர இடங்களில் உண்மையான மேக வெடிப்பு நிகழ்வுகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதும் சாத்தியமாகும்.

மேக வெடிப்புகளை முன்னறிவிக்க முடியுமா?

இந்திய வானிலை ஆய்வு மையம் மழை நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்துள்ளது, ஆனால் அது மழையின் அளவைக் கணிக்கவில்லை- உண்மையில், எந்த வானிலை ஆய்வு நிறுவனமும் அவ்வாறு செய்யவில்லை. முன்னறிவிப்புகள் லேசான, கன அல்லது மிகக் கடுமையான மழையைப் பற்றியதாக இருக்கலாம், ஆனால் வானிலை விஞ்ஞானிகளுக்கு எந்த இடத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்று சரியாக கணிக்கும் திறன் இல்லை.

கூடுதலாக, முன்னறிவிப்புகள்’ பொதுவாக ஒரு பகுதி, ஒரு மாநிலம், ஒரு வானிலை துணைப் பிரிவு அல்லது ஒரு மாவட்டம் என ஒப்பீட்டளவில் பெரிய புவியியல் பகுதி உள்ளடக்கியது. அவை சிறிய பகுதிகளில் ஜூம் செய்யும்போது, ​​முன்னறிவிப்புகள் மேலும் மேலும் நிச்சயமற்றதாக இருக்கும்.

கோட்பாட்டளவில், மிகச் சிறிய பகுதியிலும் மழையை முன்னறிவிப்பது சாத்தியமில்லை. அதற்கு மிகவும் அடர்த்தியான வானிலை கருவிகளின் நெட்வொர்க் மற்றும் தற்போதைய தொழில்நுட்பங்களில் சாத்தியமற்றதாகத் தோன்றும் கணினித் திறன்கள் தேவை.

இதன் விளைவாக, குறிப்பிட்ட மேக வெடிப்பு நிகழ்வுகளை முன்னறிவிக்க முடியாது. எந்த முன்னறிவிப்பும் மேக வெடிப்புக்கான சாத்தியத்தை குறிப்பிடவில்லை. ஆனால் கனமழை முதல் மிக கனமழை வரையிலான நிகழ்வுகளுக்கான எச்சரிக்கைகள் உள்ளன, மேலும் இவை வழக்கமாக நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே கணிக்கப்படுகின்றன. மேக வெடிப்பு போன்ற சூழ்நிலைகளை விளைவிக்கக்கூடிய மிக அதிக மழைக்கான சாத்தியம், ஆறு முதல் 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே கணிக்கப்பட்டுள்ளது.

மேக வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறதா?

இந்திய வானிலை மையம் வரையறுத்துள்ளபடி, மேக வெடிப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறும் நீண்ட காலப் போக்கு எதுவும் இல்லை. எவ்வாறாயினும், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும். தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகள் மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன என்பது நன்கு நிறுவப்பட்ட விஷயம். இந்தியாவில் பெய்யும் மழையின் அளவு கணிசமாக மாறவில்லை என்றாலும், குறுகிய காலத்தில் மழையின் அளவு அதிகரித்து வருகிறது.

அதாவது, ஈரமான காலங்கள் மிகவும் ஈரமாக இருக்கும், மேலும் மழைக்காலத்திலும் கூட நீண்ட வறண்ட காலநிலையுடன் இடைப்பட்டதாக இருக்கும். காலநிலை மாற்றத்திற்கு காரணமான இந்த வகையான முறை, மேக வெடிப்பு நிகழ்வுகளும் அதிகரித்து வரக்கூடும் என்று கூறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment