60% மக்களுக்கு கொரோனாவை அனுமதிக்க வேண்டுமா? ஹெர்ட் இம்யூனிட்டி சொல்வது என்ன?

சீனாவிலிருந்து கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையிலும், பல்வேறு நிபுணர்களின் கூற்றுப்படியும், கொரோனா வைரஸின் R0 எண் 2 முதல் 3 வரை இருக்கும் என்று நம்பப்படுகிறது.

By: Updated: March 19, 2020, 03:48:48 PM

கடந்த வாரம், இங்கிலாந்து அரசின் தலைமை அறிவியல்  ஆலோசகர்  சர் பேட்ரிக் வாலன்ஸ், கொரோனா வைரஸ் தொற்றை நாட்டின் 60% மக்களை பாதிக்க அனுமதிக்கும் ‘ஹெர்ட் இம்மியூனிட்டி’ என்ற யுக்தியை சுட்டிக்காட்டினார்.

விமர்சனங்கள் கடுமையாக எழுந்ததையடுத்தும், வைரஸ் தொற்றைக் கட்டுபடுத்தாமல் போனால் விளைவுகள் மோசமானதாகிவிடும் என்று  லண்டன் இம்பீரியல் கல்லூரி எச்சரித்ததாலும், இங்கிலாந்து ‘ஹெர்ட் இம்மியூனிட்டி’ என்ற யுக்தியில் இருந்து பின்வாங்கியுள்ளது.

மேலும், வயதானவர்களை தனிமைபடுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

ஹெர்ட் இம்மியூனிட்டி பற்றி? (குறிப்பு: ஹெர்ட் என்றால் மந்தை என்று பொருள் கொள்ளலாம்)

ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அதிகப்படியான மக்கள் ஒரு நோய்க்கு எதிராக தடுப்பாற்றல் பெறுவதன் மூலம், அந்த நோய் மற்றவர்களுக்கு (அதாவது, தடுப்பாற்றல் இல்லாதவர்களுக்கு) பரவுவதை தடுத்து நிறுத்தும் சக்திக்கு ஹெர்ட் இம்மியூனிட்டி என்று பொருள். (எப்படி நாம் தடுப்பாற்றல் பெறுவோம்: இயல்பாக (அ) தடுப்பூசி மூலமாக)

ஹெர்ட் இம்மியூனிட்டி என்பது சமூகத்தில் நிலவும் நோய் எதிர்ப்பு சக்தி என்று பொருள் கொள்ளலாம். அதவாது, வைரஸ் தொற்று சங்கிலியை, “அதிகப்படியான மக்கள்” மூலம் உடைத்தெரிவதே இதன் அடிப்படையாகும்.

இருப்பினும், இங்கிலாந்து அரசின் ‘ஹெர்ட் இம்மியூனிட்டி’ குறித்த விவாதம் இந்த வழக்கமான வரையறையின் அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. உதாரணமாக, பெரும்பான்மையானவர்கள் கொரோனா வைரசுக்கு எதிரான  நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டுமெனில், நாட்டின் மொத்த மக்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவேண்டும் என்று இங்கிலாந்து அரசு விரும்பிகிறது.

ஹெர்ட் இம்மியூனிட்டி எவ்வாறு செயல்படுகிறது?

சமூகத்தில் ஏராளமான மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதன் மூலம் (உதரணமாக, கொரோனா வைரஸுக்கு எதிராக நமது உடலில் உருவாகும் எதிர்ப்பு சக்திகள்), அநேக மக்களுக்கு அந்த  வைரஸ் தொற்றை பரவாமல் செய்யலாம். இதன் மூலம்,அந்த சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மறைமுகமாக பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதே ஹெர்ட் இம்மியூனிட்டி பற்றிய அறிவியல் கூற்றாகும்.

பரவல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை மதிப்பிடுவதற்கு, ‘அடிப்படை இனப்பெருக்க எண்’ ( R0) எனப்படும் அளவைப் உலகளவில் தொற்றுநோயியல் நிபுணர்கள் பயன்படுத்துகின்றனர். நோய் தொற்று உள்ள ஒருவர் அதிகபட்சம் எத்தனை நபர்களுக்கு அந்த தொற்றை பரப்பலாம் என்பதையே இது குறிக்கிறது

அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சுமார் 12-18 நபர்களுக்கு தொற்று ஏற்படுத்தலாம் என்று அறிவியல் சான்றுகள் காட்டுகின்றன;

காய்ச்சல் உள்ள ஒருவர் சுமார் 1.2-4.5 நபர்களுக்கு தொற்றை ஏற்படலாம் (பருவ காலத்தைப் பொறுத்து).

சீனாவிலிருந்து கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையிலும், பல்வேறு நிபுணர்களின் கூற்றுப்படியும், கொரோனா வைரஸின் R0 எண் 2 முதல் 3 வரை இருக்கும் என்று நம்பப்படுகிறது.

பொதுவாக சமூகத்தில் தொற்று பரவ மூன்று வழிகள் உள்ளன.

முதலாவதாக நோய் எதிர்ப்பு இல்லாத ஒரு சமூகத்தை எடுத்துக்கொள்வோம். R0-1 வைரஸ் தொற்றால் பாதித்த இரண்டு நோயாளிகளை அந்த சமூகத்தில் அறிமுகப்படுத்தப்படும்போது, ஒட்டு மொத்த மக்களுமே பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது ( சில விதிவிலக்குகள் இருக்கலாம் ).

இரண்டாவதாக, அந்த சமூகத்தில் இருக்கும் சிலருக்கு மட்டும் நோய் எதிர்ப்பு  உள்ளதாக வைத்துக் கொள்வோம்; தற்போது குறைந்தது இரண்டு நோயாளிகளை அறிமுகப்படுத்தப்படும்போது, நோய் எதிர்ப்பு உள்ளவர்கள் இல்லாத அனைத்து மக்களும் தற்போது பாதிக்கப்படுவார்கள்.

மூன்றாவதாக, சமூகத்தின் பெரும்பான்மையானவர்களுக்கு நோயெதிர்ப்பு உள்ளதாக எடுத்துக் கொள்வோம் .தற்போது, அங்கு இரண்டு நோயாளிகளை  அறிமுகப்படுத்தப்படும்போது, வயதானவர்கள் மற்றும் எண்ணிக்கையில் குறைவான சிலருக்கு மட்டுமே தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இருக்கும்.

அத்தகைய சூழ்நிலையில் கூட, நோய்த்தடுப்பு உள்ள பெரும்பான்மை மக்கள், ஒரு தடுப்பு சுவர் போல் நின்று நோய்த்தடுப்பு இல்லாதவர்களை பாதுகாக்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகை ஹெர்ட் இம்மியூனிட்டியை  அடைந்துள்ளனர் என்பது நமக்கு எப்போது தெரியும்?

கணித ரீதியாக, “ஹெர்ட் இம்மியூனிட்டி அளவு (herd immunity threshold)” என்ற அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. சமூகத்தில் நோய் எதிர்ப்பு உடையவர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கும் போது, நோய்  மேலும் பரவாமல் இருப்பதை இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

உதாரணமாக- போலியோ நோய்க்கு இந்த அளவு 80% முதல் 85% வரை இருந்தது , (அதாவது,80%  சதவீத மக்களுக்கு போலியோ நோய் எதிர்ப்பு சக்தி  இருந்தால், போலியியோ அந்த சமூகத்தில் பரவாது), தட்டம்மை நோய்க்கு இது 95% மாக  உள்ளது.

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு, வல்லுநர்கள் 60% க்கும் அதிகமான வரம்பை மதிப்பிட்டுள்ளனர். அதாவது 60% க்கும் அதிகமான மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கினால்  நாம் கொரோனா வைரசுக்கான ஹெர்ட் இம்மியூனிட்டியை உருவாக்கி விடலாம்.

இருப்பினும்,கொரோனா வைரஸ் க்கு எதிரான ஹெர்ட் இம்மியூனிட்டி சக்தி ஏன் கேள்விக்குரியது?

தற்போதைய சூழலில், ஹெர்ட் இம்மியூனிட்டியை மனதில் வைத்துக் கொண்டு மக்கள்தொகையில் பெரும் பகுதியை கொரோனா வைரஸ் தொற்று பாதிக்க அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது.

உதரணமாக,கொரோனா வைரஸின் செயல்பாடுகள் இன்னும் நமக்கு தெளிவாகத் தெரியவில்லை. ஒரு பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று பரவும்  என்பதை உறுதியாக மதிப்பிடுவதற்கு போதுமான, புள்ளிவிவர முக்கியத்துவம் வாய்ந்த தரவுகள் நம்மிடம் இல்லை.

இரண்டாவதாக, கொரோனா வைரஸிற்கு எதிரான ஒரு சமூக எதிர்ப்பு சக்தியை உருவாக்க பல மாதங்கள் கூட ஆகலாம். அதுவரையில், 55 வயதிற்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக, இருதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற அதிக ஆபத்து உள்ளவர்களைப் நாம் பாதுகாக்க வேண்டும்

மூன்றாவதாக, ஒரு தொற்றுநோயிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவார்கள். ஆனால், கொரோனா வைரஸை பொறுத்த வரையில், அந்த வைரசுக்கான நோய் எதிர்ப்பு சக்தி நம்மில் உருவாகுமா? என்பது கூட நமக்கு தெரியாது. அப்படியே நோய் எதிர்ப்பு சக்தி பெரும் ஒருவர், வாழ்நாள் முழுவதும் நிரந்தரமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பாரா என்பதும் தெளிவாக இல்லை.

ஆங்கிலத்தில் படிக்க: Explained: What is herd immunity?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus herd community epidemiology science latest coronavirus news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X