Advertisment

அரசியல் பரப்புரையில் ஒலிக்கும் ஜின்னா பெயர்… தொடரும் பாகிஸ்தானின் தந்தை சர்ச்சை

கடந்த காலங்களில், ஜின்னாவின் பெயரை அரசியல் உரையாடலில் பயன்படுத்துவதை காண முடிந்தது. குறிப்பாக, தேர்தல் காலங்களில் அதிகளவில் வருவதை பார்க்கமுடிகிறது.

author-image
WebDesk
New Update
அரசியல் பரப்புரையில் ஒலிக்கும் ஜின்னா பெயர்… தொடரும் பாகிஸ்தானின் தந்தை சர்ச்சை

உத்தரப் பிரதேச தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், பாகிஸ்தானின் தேசிய தந்தை என அழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவின் பெயர் மீண்டும் வளம்வரதொடங்கியுள்ளது.

Advertisment

கடந்த வாரம் முதல்வர் யோகி ஆதித்யநாத், அவர்கள் ஜின்னாவை வணங்குபவர்கள், நாங்கள் சர்தார் படேலை வணங்குபவர்கள். பாகிஸ்தான் அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. நாங்கள் நம் நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்கிறோம் என ட்வீட் செய்திருந்தார்.

மாநில அரசியலில் ஜின்னாவின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் எச்சரித்த ஒரு நாளுக்கு பிறகு, முதல்வரிடமிருந்து இத்தகைய ட்வீட் வந்தது மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காசியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகரில் வாக்காளர் சந்திப்பில் பேசிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் தந்தை ஜின்னாவின் பெயர் ஏன் தேர்தல் நேரங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இதனை உபி அரசியலில் பயன்படுத்த விரும்புவோர், ஜின்னாவின் பெயரைச் சொல்லக் கூடாது. அதற்கு பதிலாக, விவசாயிகளின் கரும்பு பற்றி பேச வேண்டும்" என்றார்.

கடந்த காலங்களில், ஜின்னாவின் பெயரை அரசியல் உரையாடலில் பயன்படுத்துவதை காண முடிந்தது. குறிப்பாக, தேர்தல் காலங்களில் அதிகளவில் வருவதை பார்க்கமுடிகிறது. 75 ஆண்டுகளுக்கு முன்பு மதவாத அடிப்படையில் நாட்டைப் பிரித்ததற்கு, இந்துத்துவா ஆதரவாளர்களுக்கு, ஜின்னா எப்போதும் குற்றம் சாட்டப்பட வேண்டியவராக உள்ளார்.

publive-image

பாஜக தலைவர்கள் தங்கள் அரசியல் எதிரிகளை ஜின்னாவின் "ஆதரவாளர்கள்" என்று அடிக்கடி கூறுவதை காணமுடியும்.

கடந்தாண்டு, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவை அரசியல் ரீதியாக ஒன்றிணைத்த பெருமைக்குரிய தலைவருமான படேலை விட ஜின்னாவை விரும்புகிறார் என்று குற்றம் சாட்டினார்.

இஸ்லாமியர்களை திருப்திப்படுத்துபவர் ஜின்னா என பாஜகவால் பல முறை குறிப்பிட்டு வந்தாலும், 1948 இல் ஜின்னா மறைந்தது, பாஜகவிற்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி போன்ற தலைவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

எல் கே அத்வானி (2005)

ஜூன் 2005 இல், பிரிக்கப்படாத இந்தியாவில் அவர் பிறந்த இடமான கராச்சிக்கு அத்வானி விஜயம் செய்தார். அப்போது, அவரது சமாதியில் பாகிஸ்தானின் நிறுவனரைப் புகழ்ந்து, அவரை "சிறந்த மனிதர்" என்று அழைத்தார்.

சமாதியில் உள்ள பதிவேட்டில் அத்வானி எழுதியதாவது, வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவர்கள் பலர் உள்ளனர், ஆனால் உண்மையில் வரலாற்றை உருவாக்குபவர்கள் மிக குறைவானவர்கள் தான். க்வாய்ட்-இ-ஆசம் முகமது அலி ஜின்னா அத்தகைய அரிய நபர்களில் ஒருவர் ஆவர்.

சரோஜினி நாயுடு ஜின்னாவை 'இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதர்' என்று வர்ணித்தார். ஆகஸ்ட் 11, 1947 அன்று பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சபையில் அவர் ஆற்றிய உரை, உண்மையில் ஒரு உன்னதமானது. ஒவ்வொரு குடிமகனுக்கும், சொந்த மதம் குறித்து வழிப்பட நாட்டில் உரிமை உண்டு. மதத்தின் அடிப்படையில் குடிமகனுக்கும் மற்றொரு குடிமகனுக்கும் இடையே அரசு வேறுபாடு காட்டக்கூடாது. இந்த மாபெரும் மனிதருக்கு எனது வீரவணக்கங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

1947ல் ஜின்னாவுக்கு எதிரான கொலைச் சதி வழக்கில் அத்வானி குற்றச்சாட்டப்பட்ட நிலையில், அத்வானியின் கருத்து முரண்பாடாக அமைந்தது.

2004 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட எதிர்பாராத தோல்வியில் இருந்து மீண்டு வர, அவரது கருத்து பாஜகவுக்கு சிக்கலாக இருந்தது. ஜின்னாவைப் பற்றி அத்வானி பாராட்டியதில் RSS வெளிப்படையாக உடன்படவில்லை.

அத்வானி தனது அறிக்கைகளைத் திரும்பப் பெற மறுத்த நிலையில், அவர் இந்தியா திரும்பியதும் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். இருப்பினும், ஆர்.எஸ்.எஸ் உடனான அவரது உறவில் விரிசல் ஏற்பட்ட போதிலும், சில நாட்களுக்குப் பிறகு தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.

ராஜினாமாவை திரும்பப் பெற்ற ஏழு மாதங்களுக்குள், அத்வானி பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து, ராஜ்நாத் சிங் பாஜக தலைவராக பொறுப்பேற்றார்.

ஜஸ்வந்த் சிங் (2009)

2009 இல் ஜஸ்வந்த் சிங்கின் Jinnah: India, Partition, Independence’,புத்தகம் வெளிவந்த பிறகு, ஜின்னா மீண்டும் பாஜகவில் பேசும் பொருளாக மாறினார். சிங், பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் மிக முக்கியமான உறுப்பினராக இருந்தார். முன்னதாக, இந்தியாவின் நிதி, வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார்.

ஜஸ்வந்த சிங், ஜின்னாவை "இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான தூதுவர்" என்று குறிப்பிட்டார், அத்வானியைப் போலவே, இந்த விளக்கத்திற்காக அவர் வேறு ஒருவரை மேற்கோள் காட்டினார்.

புத்தக வெளியீட்டிற்கு முன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய ஜஸ்வந்த் சிங், ஜின்னா இந்தியாவின் எதிரி போல் குற்றச்சாட்டப்பட்டார். உண்மை என்னவென்றால், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு மையப்படுத்தப்பட்ட அரசியலில் இருந்த நம்பிக்கைதான் பிரிவினைக்கு வழிவகுத்தது என்றார்.

புத்தகம் வெளியான உடனேயே, சிங் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.புத்தகம் வெளியாவதற்கு முன்பே அதன் பிரதிகள் எரித்த சம்பவங்கள் நடந்தன. அப்போது, குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, அங்கு அப்புத்தகம் வெளியீட்டிற்கு தடை விதித்தார்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (2018)

மே 2018 இல், அலிகார் பாஜக எம்பி சதீஷ் கௌதம், பல்கலைக்கழக மாணவர் சங்க அலுவலகத்தில் ஜின்னாவின் உருவப்படத்தை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து AMU துணைவேந்தர் தாரிக் மன்சூருக்கு கடிதம் எழுதினார்.

ஜின்னாவின் உருவப்படத்தை அகற்றக் கோரி இந்து யுவா வாஹினி என்ற வலதுசாரி அமைப்பு நடத்திய போராட்டத்திற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், வளாகம் வன்முறை களமாக மாறியது.

பின்னர், பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஷஃபே கித்வாய் கூறுகையில், பல தசாப்தங்களாக பல்கலைக்கழக மாணவர் சங்க அலுவலகத்தில் ஜின்னாவின் புகைப்படம் இருக்கிறது. பல்கலைக்கழக நீதிமன்றத்தின் நிறுவன உறுப்பினராக இருந்த ஜின்னாவுக்கு, மாணவர் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்தின்படி, அனைத்து வாழ்நாள் உறுப்பினர்களின் உருவப்படங்கள் மாணவர் சங்க அலுவலகத்தின் சுவர்களில் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் உட்பட பல்கலைக்கழகத்தில் அவரது உருவப்படத்திற்கு எந்த தேசியத் தலைவரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை" என்றார்.

ஜின்னாவின் உருவப்படம் குறித்த சர்ச்சை 2020 ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் எழுந்தது.

மதுபானியில் உள்ள ஜலேயில் முன்னாள் AMU மாணவர் மஸ்கூர் உஸ்மானியை வேட்பாளராக நிறுத்தியதற்காக காங்கிரஸை பாஜக எதிர்த்தது. அந்த வேட்பாளரை, ஜின்னா ஆதரவாளர் என அழைத்தது.

ஆனால், ஜின்னாவின் சித்தாந்தத்திற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி உஸ்மானியின் வேட்புமனுவை காங்கிரஸ் ஆதரித்தது.

அகிலேஷ் யாதவ் (2021)

அக்டோபர் 2021 இல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய பட்டேல், காந்தி மற்றும் நேரு ஆகியோரின் பெயரைப் போலவே ஜின்னாவின் பெயரையும் எடுத்து சர்ச்சையைத் தூண்டினார்.

உ.பி.,யில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், சர்தார் படேல், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் (முகமது அலி) ஜின்னா ஆகியோர் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்தவர்கள். அவர்கள் வழக்கறிஞர்களாக மாறி, இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள் என்றார்.

இவரது கருத்துக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் நேற்று ஜின்னாவை சர்தார் வல்லபாய் படேலுடன் ஒப்பிட்டது, வெட்கக்கேடானது. இது பிரிப்பதை நம்பும் தாலிபான் மனநிலை. சர்தார் படேல் நாட்டை ஒருங்கிணைத்தார்” என்று முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்தார்.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி பேசுகையில், நாட்டின் பிரிவினை வில்லனாக முகமது அலி ஜின்னா சொல்லப்படுகிறார். ஆனால் ஜின்னாவை சுதந்திர நாயகன் என்று அழைப்பது முஸ்லீம் திருப்தி அரசியலாகும் என்றார்.

பாஜகவின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அகிலேஷ், ஜின்னாவின் வரலாற்றுப் புத்தகங்களை மீண்டும் படிக்குமாறு தனது எதிர்ப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mohammad Ali Jinnah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment