Advertisment

இந்துக்கள் சிறுபான்மையினரா? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

சிறுபான்மையினர் முழுமையாக திருப்தி அடையாத வரை, நாம் எந்த முன்னேற்றமும் அடைய முடியாது.” - இது 1947ம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையில் பண்டிட் ஜி.பி. பாண்ட் அங்கே குழுமியிருந்த தலைவர்கள் முன்பு கூறியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்துக்கள் சிறுபான்மையினரா? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

Faizan Mustafa 

Advertisment

”இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் தொடர்பாக நிலவும் பல்வேறு சந்தேகங்களுக்குமான திருப்திகரமான பதிலை சுதந்திர இந்தியாவின் ஆரோக்கியம், சக்தி மற்றும் வலிமையே உறுதி செய்யும். இதுகாலம் வரை சிறுபான்மையினர் குறித்த கேள்விகள் இங்கே கலவரங்களையும், அவநம்பிக்கை மற்றும் பிளவுகளை ஏற்படுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு புதிய அத்யாயம் துவங்குவதற்கான தேவை இருக்கிறது. சிறுபான்மையினர் முழுமையாக திருப்தி அடையாத வரை, நாம் எந்த முன்னேற்றமும் அடைய முடியாது.” - இது 1947ம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையில் பண்டிட் ஜி.பி. பாண்ட் அங்கே குழுமியிருந்த தலைவர்கள் முன்பு கூறியது.

சிறுபான்மையினர் யார், அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினர் எப்படி வரையறுக்கப்படுகிறார்கள் என்பது குறித்த விரிவான பிரமாணப் பத்திரத்தை இந்த வாரம் இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த பிரமாணப் பத்திரம் "சிறுபான்மைத் திருப்தி" என்ற பதத்தை சிக்கலாக மாற்றியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக சில இடங்களில் இந்துக்களும் சிறுபான்மையினரே என்று பிரமாணப் பத்திரம் சரியாக கூற, சிறுபான்மையினர் நலத்திற்காக கொண்டு வரப்படும் திட்டங்களை எவ்வாறு ”சமாதானப்படுத்த எடுக்கப்படும் முயற்சி” என்று அழைக்க முடியும்?

அரசின் பிரமாணப் பத்திரம்

பாஜக அனைவருக்கும் நீதி; யாரையும் திருப்திப்படுத்த வேண்டாம் என்று வெகு காலமாக சிறுபான்மையினரின் உரிமைகளை எதிர்ப்பதற்காக பேசி வருகிறது. சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராக, 2014ம் ஆண்டு மே மாதம், நஜ்மா ஹெப்துல்லா பொறுப்பேற்றுக் கொண்ட அந்த நாளில், சிறுபான்மையினர் என்று அழைக்க முடியாத அளவுக்கு இந்தியாவில் அதிகமான முஸ்லிம்கள் இருப்பதாக குறிப்பிட்டார். அரசு தற்பொது வரவேற்கத் தக்க மாற்றத்தைப் பெற்றுள்ளது. இனி காஷ்மீர், லடாக், பஞ்சாப், சில வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவுகளில் உள்ள இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதில் அது தயக்கம் காட்டாது என்று தெரிவித்தார்.

வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் 2020இல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கலாம் என்றும், சிறுபான்மை நலத் திட்டங்கள் "மதத்தின் அடிப்படையில் மட்டுமே பாகுபாட்டைத் தடைசெய்யும் அரசியல் அமைப்பு பிரிவு 15ஐ மீறவில்லை” என்றும் பிரமாணப் பத்திரம் கூறுகிறது. இந்தத் திட்டங்கள் சிறுபான்மையினரிடையே உள்ள ஏழைப் பிரிவினரின் நலனுக்காக வழங்கப்படுகிறது, மேலும் அரசியல் அமைப்பின் 38 மற்றும் 46 பிரிவுகளின் கீழ் நலிந்த பிரிவினரின் நலன்களைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் 1992 மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையச் சட்டம் 2005 ஆகியவற்றை இயற்றுவதற்கான நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பையும் அரசாங்கம் பாதுகாத்துள்ளது. சிறுபான்மையினர் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வரையறுக்கப்பட்டுள்ளனர் என்று பிரமாணப் பத்திரம் கூறுகிறது.

இதே வழக்கில் உபாத்யாய் தாக்கல் செய்த முந்தைய மனுவில், இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கு அனுப்பியது. ஆணையத்தால் அமைக்கப்பட்ட துணைக் குழு இதன் அனைத்து கோரிக்கைகளையும் 2019ம் ஆண்டு நிராகரித்தது.

1) பெரும்பான்மை இல்லாத மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும்;

2) சிறுபான்மையர் ஆணைய சட்டம் 1992ன் கீழ், 1993ம் ஆண்டு இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிக்கள் ஆகியோரை சிறுபான்மையினராக அறிவித்தது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

3) மாநில அளவில் சிறுபான்மையினர் அறிவிப்பிற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குதல்

4)சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான 1992 ஐ.நா பிரகடனத்தின் அடிப்படையில் சிறுபான்மையினரை வரையறுத்தல்

போன்ற வேண்டுகோள்களை அவரின் மனு கோரியது. அனைத்தையும் நிராகரித்து அறிவித்தது அந்த துணைக் குழு.

இந்த வார அரசாங்கத்தின் பிரமாணப் பத்திரம், தேசிய சிறுபான்மை வாரியத்தின் கருத்துகளுக்கு மாறாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையினர் வரையறை

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினர் யார் என்பது வரையறுக்கப்படவில்லை. ஆனால் பிரிவுகள் 29 மற்றும் 30 இன் தலைப்புக் குறிப்புகளிலும், பிரிவு 30ன் (1) மற்றும் (2) பிரிவுகளிலும் என 4 இடங்களில் மைனாரிட்டி என்ற வார்த்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் (மற்றும் பெரும்பான்மையினர்) என்பதன் மிகத் தெளிவான வரையறை எண்களின் அடிப்படையிலானது. சிறுபான்மை என்பது ஒரு சமூகத்தில் உள்ள பெரும்பான்மையினரை விட எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் குழுவாகும்.

ஆனால் முன்னுரிமை அல்லது எண்களின் பற்றாக்குறை மட்டும் எந்த அதிகாரபூர்வமான வரையறைக்கும் வழிகாட்டியாக இருக்காது. நிறரீதியாக மக்கள் பிரிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவில், சிறுபான்மையினர் மற்ற சமூகத்தின் மீது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் செலுத்தினர்.

சில நாடுகளில், சிறுபான்மை மற்றும் பெரும்பான்மையை பிரிக்கும் கோடு மிகவும் மெல்லியதாக இருப்பதால், சிறுபான்மை குழுவை வரையறுப்பது சாத்தியமற்றதாக உள்ளது. ஒரு சமூகம் வெவ்வேறு குழுக்களால் ஆனதாக இருக்கும், எண்ணிக்கை அடிப்படையில் அவர்களில் யாருமே சிறுபான்மையினராக இருக்க இயலாது. எண்களின் அளவுகோல் முக்கியமானதாக இருக்கலாம், ஆனால் சிறுபான்மையினரின் எந்தவொரு வரையறைக்கும் இது போதுமானதாக கருதப்படக் கூடாது.

சிறுபான்மையினரின் வரையறையின் இரண்டாவது கூறு, அவர்கள் சமூகத்திலும் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தாததாக நபர்களாக இருக்க வேண்டும். ஒரு குழுவின் மதிப்புகள் மற்றும் உலகக் கண்ணோட்டங்கள் எதுவும் பிரதிபலிக்காதபோது அல்லது பொதுத் துறையில் மற்றும் சமூக விதிமுறைகளின் அரசியலமைப்பில் போதுமான அளவு பிரதிபலிக்காதபோது ஒரு குழுவை சிறுபான்மையாகக் கருதலாம். இவை ஓரங்கட்டுதல் மற்றும் விலக்கப்படுதல் ஆகிய முக்கிய காரணங்களை வலுப்படுத்துகின்றன. இஸ்லாமியர்கள் இவ்விரண்டிலும் சரியாக பொருந்துகிறார்கள். குறைவான எண்ணிக்கை மற்றும் ஆதிக்கமின்மை. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் இவர்களின் பிரதிநிதித்துவம் எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

எண்களின் அளவு மற்றும் ஆதிக்கம் அற்ற தன்மை ஆகியவை மட்டுமே பெரும்பான்மை, சிறுபான்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற அவசியமில்லை. ஒரு குழு மற்றவர்களை விட எண்ணிக்கையில் சிறியதாக இருக்கலாம், மேலும் அதன் மதிப்புகள் மேலாதிக்க அரசியல் அல்லது சமூக நெறிமுறைகளில் முழுமையடையாமல் பிரதிபலிக்கப்படலாம். ஆனால் அவர்கள் மத்தியில் விலக்கப்பட்டவர்கள் என்ற போக்கு காணப்படாது. பார்சிக்களே இதற்கு சிறந்த உதாரணம்.

இந்திய அரசியல் சாசனம் மதம் மற்றும் மொழி சிறுபான்மையினர் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. எல்.ஜி.பி.டி.க்யூ போன்ற பாலியல் சிறுபான்மையினரை அங்கீகரிக்கவில்லை. மேலும், ஒரு குழுவை 30(1) பிரிவின் கீழ் சிறுபான்மையினராக அங்கீகரிப்பதற்காக, ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் 50%க்கும் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களை மட்டுமே உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்

இந்துக்களை சிறுபான்மையினராக அங்கீகரிப்பதற்கான பொதுநல வழக்குகள் தேவையில்லை என்று இந்த ஆசிரியர் நீண்டகாலமாக கூறிவருகிறார். உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வமான தீர்ப்புகளில் ஏற்கனவே தீர்வு காணப்பட்ட பிரச்சினைகள் குறித்து தேவையில்லாத பொது விவாதத்தை உருவாக்க இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கேரளா கல்வி மசோதா 1958-ல் ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், கேரள மாநிலத்தில் உள்ள ஒரு குழுவின் சிறுபான்மை நிலையைத் தீர்மானிக்க மாவட்டங்களை ஒரு அலகாக எடுத்துக் கொள்வதை நிராகரித்தது. உச்ச நீதிமன்றம் தங்களை சிறுபான்மையினர் என்று கூறிக்கொள்ளும் குழுக்களின் சிறுபான்மை நிலையை தீர்மானிக்க "மாநிலத்தை" ஒரு அலகாக எடுத்துக் கொண்டது.

டி.எம்.ஏ. பை அறக்கட்டளை 2003ம் ஆண்டு வழக்கில் 11 பேர் கொண்ட அமர்வு, சமூகம், மதம், அல்லது மொழி போன்று எந்தவிதமான சிறப்பு சிறுபான்மை வரையறையையும் பெற முடியாதவர்களில், ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் 50%க்கும் குறைவாக இருக்கும் குழுவினரை சிறுபான்மையினர் என்று வரையறை செய்து அவர்களுக்கு சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க உரிமையுண்டு என்று குறிப்பிட்டது.

30வது பிரிவு “மதம் அல்லது மொழி அடிப்படையில் சிறுபான்மையினர்” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், மொழிவாரியாக உருவாக்கப்பட்ட மாநிலங்களின் மட்டத்தில் சிறுபான்மையினர் வரையறுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கூறி வருகிறது. காஷ்மீர், பஞ்சாப் மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மை சமூகத்தின் அந்தஸ்துக்கு தகுதியானவர்கள் என்று இந்த ஆசிரியர் பல ஆண்டுகளாக வாதிட்டு வருகிறார். ஒரு தமிழ் பிராமணர் தமிழ்நாட்டைத் தவிர pஇற மாநிலங்களில் சிறுபான்மை கல்வி நிறுவனத்தை அமைக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார். உண்மையில், மொழிவழி சிறுபான்மையினராக, இந்து குழுக்கள் நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றன.

எனவே, இந்துக்கள் இந்தியா முழுவதிலும் உள்ள மொழிவழி சிறுபான்மையினராக அங்கீகரிக்கப்படுவதற்கு உரிமையுடையவர்கள். எனவே பொதுநல வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பற்றி பேசுவது என்ன?

மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் கர்நாடக அரசு அங்கீகரிக்கும் பல மொழி சிறுபான்மையினரைக் குறிப்பிடுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதாகவும், அவர்கள் மீது பஞ்சாபி மொழியை திணிக்க முடியாது என்றும் அரை நூற்றாண்டுக்கும் முன்பாக 1971ம் ஆண்டு டி.ஏ.வி. கல்லூரி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

மத மற்றும் மொழி சிறுபான்மையினர்

இந்திய அரசியல் அமைப்பு பிரிவு 30ல் மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கு ஒரே உரிமைகளை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிறுபான்மையினர் மாநில அளவில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறவில்லை. 2019ம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், சிறுபான்மையினர் நலச் சட்டம், 1992 இன் பிரிவு 2 இன் கீழ், ஒரு சமூகத்தை மத சிறுபான்மையினராக அறிவிக்க மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று கூறியது. இது உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட சட்டத்துடன் ஒத்துப்போகவில்லை, மேலும் 2016ஆம் ஆண்டில் யூதர்களை மாநிலத்தில் சிறுபான்மையினராக அங்கீகரித்த தேவேந்திர ஃபட்னாவிஸின் கீழ் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் உதாரணத்தை மார்ச் 25 ஆம் தேதி பிரமாணப் பத்திரத்தில் மேற்கோள் காட்டியுள்ளது மத்திய அரசு.

சிறுபான்மையினரை அங்கீகரிப்பது குறித்து இரண்டு கருத்துக்கள் உள்ளன. மத சிறுபான்மையினரை தேசிய அளவிலும் மொழி சிறுபான்மையினரை மாநில அடிப்படையிலும் வரையறுப்பது ஒரு அணுகுமுறையாக இருக்கலாம். சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின் கீழ் இந்திய அரசு ஏற்கனவே சில மத குழுக்களை நாடு முழுவதும் சிறுபான்மையினராக அறிவித்துள்ளது.

டிஎம்ஏ பை அறக்கட்டளையில் நீதிபதி ரூமா பாலின் மாறுபட்ட கருத்தை ஏற்றுக்கொள்வது இரண்டாவது அணுகுமுறையாக இருக்கும். ஒரு குழு சிறுபான்மையா இல்லையா என்பது பாதுகாப்பு கோரப்படும் குறிப்பிட்ட சட்டத்தின் ஆதாரம் மற்றும் பிராந்திய பயன்பாடு தொடர்பாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை அந்த நீதிபதி கூறினார். பாராளுமன்றத்தின் ஒரு சட்டம் சவால் செய்யப்பட்டால், சிறுபான்மையினர் தேசிய அளவில் வரையறுக்கப்பட வேண்டும்; இது ஒரு மாநில சட்டமாக இருந்தால், சிறுபான்மையினர் மாநில அளவில் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்குள் உள்ள எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.

2005 இல் ஒரு தவறான தீர்ப்பில், அலகாபாத் உயர்நீதிமன்றம் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல, ஏனெனில் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் மற்றும் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருந்தது. இந்தியாவில் யாரும் சிறுபான்மையினர் இல்லை என்றும், இதனால் சிறுபான்மையினர் உரிமைகள் பொருத்தமற்றது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் 'பால் பாட்டீல்' (2003) இல் ஜெயின்களை சிறுபான்மையினராக அங்கீகரிக்க மறுத்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பெரிய அமர்வின் தீர்ப்புகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், தனித்துவமான அடையாளங்களைப் பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு பார்வைக்கும் எதிரான தீர்ப்பை வழங்கியது.

எந்தவொரு புதிய மதக் குழுவையும் சிறுபான்மையினராக அங்கீகரிக்கக் கூடாது என்றும், மதச் சிறுபான்மையினரின் பட்டியலைக் குறைப்பதற்கும், இறுதியாக அதை முற்றிலுமாக அகற்றுவதற்குமே சிறுபான்மையினர் ஆணையம் பணியாற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. . ஷரத்து 25, தற்போதுள்ள மதங்களுக்கு மட்டும் மத சுதந்திரத்தை வழங்கவில்லை. புதிய மதங்கள் பிறப்பதைத் தடுக்காது. புதிய மதங்கள் தோன்றலாம், அத்தகைய குழுக்கள் மத சிறுபான்மையினராக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படலாம் என்பதையும் சுட்டுகிறது இந்த பிரிவு.

அரசியலமைப்புச் சட்டத்தின் இந்தியாவின் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவர், NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பேராசிரியருமான ஃபைசான் முஸ்தபா எழுதிய கட்டுரை இது. கருத்துகள் அனைத்தும் அவரின் சொந்த கருத்துகள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment