Advertisment

8 கட்டத் தேர்தல் : திரிணாமுல் காங்கிரசுக்கு பின்னடைவு, பாஜகவுக்கு சாதகம் ஏன்?

8 phase elections in west bengal : தென் மாவட்டங்களில் கட்சி  கட்டமைப்பு பலவீனமாக உள்ள பாஜகவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் தேர்தல் அட்டவணை

author-image
WebDesk
New Update
8 கட்டத் தேர்தல் : திரிணாமுல் காங்கிரசுக்கு பின்னடைவு, பாஜகவுக்கு சாதகம் ஏன்?

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டசபைக்கான தேர்தல் முன்னோடியில்லாத வகையில் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி வரை எட்டு கட்டங்களாக நடைபெறும் என தலைமைத்தேர்தல் ஆணையர் தெரிவித்தார். 101,916 வாக்குச் சாவடிகளில், சுமார் 7,32,94,980 வாக்காளர்கள், தங்கள் வாக்குரிமையை செலுத்தவுள்ளனர்.

Advertisment

சுவாரஸ்யமாக, மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கனா , தெற்கு 24 பர்கனா, கிழக்கு மிட்னாபூர், மேற்கு மிட்னாபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இது மேற்கு வங்க அரசியல்  வரலாற்றில் ஒரு அரிய நிகழ்வாகும்.

காலநிலை, பல்வேறு பண்டிகைகள், பாதுகாப்புப் படையினரின் தயார் நிலை,  கோவிட்-19 நெறிமுறைகள், கூடுதல் வாக்குச்சாவடிகள் போன்ற பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, 8 கட்டங்களாக தேர்தலை நடத்த  முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையக் குழு தெரிவித்தது.

எவ்வாறாயினும்,பல கட்டங்களாக தேர்தலை நடத்துவது மத்திய பாஜக அரசுக்கு சாதகமாக அமையும் என்று  திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பேனர்ஜி குற்றம் சாட்டியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தலை நடத்தப்படுவதற்கு நம்பதகுந்த வாதத்தை தேர்தல் ஆணையக் குழு அளிக்கவில்லை என்று இடதுசாரிகள்  குற்றம் சாட்டின.

தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் அதிகம் காணப்படும் மேற்குவங்க மாநிலத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான சட்டமன்றத் தேர்தலை நடத்த இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்தது.

எட்டு கட்டத் தேர்தல்: 

மேற்கு வங்கத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 8  கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தேர்தல் தேதி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கும் வரையிலான மொத்த தேர்தல் செயல்முறையும்  66 நாட்களில் நிறைவு செய்யப்படுகிறது.

2016-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 77,413 வாக்குப்பதிவு மையங்கள் செயல்பட்ட நிலையில், 2021 தேர்தலில் 101,916  வாக்குப்பதிவு மையங்கள் செயல்படும். இது 31.65 சதவீதம் அதிகமாகும்.இதன் காரணமாக, வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,500 இலிருந்து 1,000 ஆகக் குறிக்கப்பட்டுள்ளது.

2016 தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற போதிலும், ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறைகளை முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு 77 நாட்கள் பிடித்தன. 77,000 க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் இருந்ததால், ஒவ்வொரு கட்டத்திலும் சுமார் 11,000 வாக்கப் பதிவு மையங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்த முறை வாக்குப் பதிவு மையங்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகமாக செயல்பட உள்ளதாக, சராசரியாக 12,000 க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு மையங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் தேர்தலை சந்திக்கும்.

தேர்தல் ஆணையம்: 

அமைதியான முறையில் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. பல கட்டங்களாக தேர்தல் நடத்துவதினால் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது. மேலும்,பதற்றமான பகுதிகளை நன்கு அறிவதற்கும், கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும் மத்திய ஆயுத படைகளை சிறந்த முறையில் பயன்படுத்தவும் இது அனுமதிக்கிறது.

சட்டப்பேரவைத்தேர்தல் அட்டவணையை வெளியிடுவதற்கு முன்பே, நம்பிக்கை வளர்க்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய ஆயுத காவல் படைகளின் 125 கம்பெனிகள் மேற்கு வங்க மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வன்முறை இல்லாத தேர்தலை உறுதி செய்ய வேண்டும்,  வாக்காளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பல கட்டங்களாக தேர்தலை நடத்துவதன் மூலம், மத்திய ஆயுதப்படைகளின் நகர்வு  சீராக இருக்கும்.

குறிப்பிட்ட மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளை  நன்கு அறிவதற்கும், சமூக விரோத சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பு படையின் நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதற்கும் பல மாவட்டங்கள் 2 முதல் 3 கட்டங்களாக தேர்தலை சந்திக்க உள்ளன.

உதாரணமாக, தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தான், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முதல்வர் மமதா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி  இந்த மாவட்டத்தில் உள்ள பாராளுமன்றத் தொகுதியில் திருணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Explained: What the 8-phase Bengal elections mean for the EC, parties and voters

மற்றொரு நிகழ்வாக, மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவின் 11 சட்டமன்றத் தொகுதிகளில் ஏப்ரல் 26, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் கொல்கத்தா பெருநகர மாநகராட்சி காவல்துறையின் அதிகார எல்லைக்குட்பட்டு வருகிறது. உதரணமாக, பெஹலா பூர்பா, பெஹலா பாசிம், கஸ்பா, டோலிகங்கே, ஜாதவ்பூர் போன்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இதன் விளைவாக, கொல்கத்தா  வாக்காளர்கள் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதை சந்திக்கவுள்ளனர். இது, கொல்கத்தா மக்கள் வரலாற்றில் அரிய நிகழ்வாகவே கருதப்படுகிறது.

அரசியல் கட்சிகள்: 

இந்த தேர்தல் அட்டவணையால் ஆளும் திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.  மமதா பேனர்ஜி என்ற ஒற்றை ஆளுமையின் முகத்தை வைத்து தேர்தல் பிரச்சாரத்தை அக்கட்சி நடத்தி வருகிறது.  தற்போது, முழு தேர்தல் பிரச்சாரத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாக தெரிகிறது. மேற்கு வங்கத்தின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற  இருப்பதால், இரண்டிலும் ஒரே நேரத்தில்  கவனம் செலுத்துவது கடினமான பணியாக அமைகிறது.

மறுபுறம், திரிணாமுல் கட்சியின் கோட்டையாக அறியப்படும் மாவட்டங்களில் பல கட்டங்களாக தேர்தலை நடத்துவது மற்ற கட்சிகளுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தக் கூடும். தென் மாவட்டங்களில் கட்சி  கட்டமைப்பு பலவீனமாக உள்ள பாஜகவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் தேர்தல் அட்டவணை இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.       .

எட்டு கட்டங்களாக தேர்தலை நடத்துவதால் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வதற்கான கால அவகாசம் பாஜகவிற்கு கிடைக்கும். முதல் மூன்று கட்டங்களுக்குள், தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத்தேர்தல்  முடிவடைந்திருப்பதால், பாஜக தலைவர்கள் மேற்கு வங்கத்திற்கு அதிக நேரம் ஒதுக்க முடியும். ஏராளமான பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய முடியும்.

முதல் மூன்று கட்டத் தேர்தல் வாக்குப்பதிவுகளும், பாஜக வலுவான நிலையில் இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளில் நடக்க இருக்கிறது. எனவே, முதல் 3 கட்ட வாக்குப்பதிவு வரை மற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் கவனம் செலுத்துவதற்கும், நான்காவது கட்ட வாக்குப்பதிவில்  இருந்து திரிணாமுல் காங்கிரஸ் ஒரு வலுவான எதிர்ப்பை கொடுக்கவும் பாஜகவிற்கு வாய்ப்பளிக்கிறது.

மேற்கு வங்கத்தில் 30 சதவீத இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும்  முர்ஷிதாபாத், மால்டா, வடக்கு தினாஜ்பூர் போன்ற மாவட்டங்களில்  எர்பல் 22 முதல் (கடைசி மூன்று கட்ட) வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. ரமலான் மாதம் ஏப்ரல் 12 முதல் துவங்குவதால், ரமலான் நோன்பு இருக்கும்  வாக்காளர்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கூடுதல்  சிரமத்தை ஏற்படுத்தும்.

Election 2021 West Bengal Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment