Advertisment

எஸ்.பி.ஜி., என்.எஸ்.ஜி. பாதுகாப்பு படை மூலம் இந்தியா வி.ஐ.பி-களை எப்படி பாதுகாக்கிறது?

How India protects its VIPs: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கான சிறப்பு பாதுகாப்பு படையின்(எஸ்.பி.ஜி) பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இப்போது மத்திய ஆயுத போலீஸ் படையின் (சி.ஏ.பி.எஃப்) இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How India protects its VIPs, SPG and NSG Security forces, Home Ministry, NSG, SPG,எஸ்.பி.ஜி., என்.எஸ்.ஜி., பாதுகாப்பு படை, வி.ஐ.பி, Manmohan Singh, Prime Minister

How India protects its VIPs, SPG and NSG Security forces, Home Ministry, NSG, SPG,எஸ்.பி.ஜி., என்.எஸ்.ஜி., பாதுகாப்பு படை, வி.ஐ.பி, Manmohan Singh, Prime Minister

SPG and NSG Security forces: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கான சிறப்பு பாதுகாப்பு படையின்(எஸ்.பி.ஜி) பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இப்போது மத்திய ஆயுத போலீஸ் படையின் (சி.ஏ.பி.எஃப்) இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏழு பாதுகாப்பு படைகளை ஒரு குடையின் கீழ் உள்ள பாதுகாப்பு படை என்கிறோம். அதாவது, அது அசாம் ரைபிள்ஸ், எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) , மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்), மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்), தேசிய பாதுகாப்பு காவலர் (என்.எஸ்.ஜி), இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி), மற்றும் சஷாஸ்ட்ரா சீமா பால் (எஸ்.எஸ்.பி) அகிய ஏழு படைகள் அடங்கியது.

சிறப்பு பாதுகாப்பு காவல் மற்றும் சிறப்பு பாதுகாப்பு காவல் சட்டமும்

1984 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி தனது சொந்த மெய்க்காப்பாளர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட பிறகு, ராஜீவ் காந்தி அரசு பிரதமருக்கு ஒரு சிறப்பு பாதுகாப்புப் பணியாளர்களை உருவாக்க முடிவு செய்தது.

மார்ச் 1985-இல் உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, அமைச்சரவை செயலகத்தின் கீழ் இந்த நோக்கத்திற்காக ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறப்பு பாதுகாப்பு பிரிவு என்று அழைக்கப்பட்ட இந்த அலகு ஏப்ரல், 1985-இல் சிறப்பு பாதுகாப்பு குழு என மறுபெயரிடப்பட்டது .

அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி) சட்டத்தை நிறைவேற்றியது, அது ஜூன் 1988-இல் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் பிரதமருக்கு அருகிருந்து பாதுகாப்பை வழங்குவதற்கும் அதனுடன் தொடர்புடைய விஷயங்களுக்கும் மத்திய அரசின் ஆயுதப்படைக்கு அரசியலமைப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை அளிப்பது தொடர்பாக இருந்தது.

எஸ்.பி.ஜி சட்டம் அருகாமை பாதுகாப்பை வரையறை செய்கையில், சாலை, ரயில், விமானம், நீர்வழி பயணம், நடந்து செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து வழிகளில் பயணம் செய்யும்போது வழங்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறது.

1991, மே மாதம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், இந்த சட்டத்தில் ஒரு திருத்தம் மூலம் பிரதமரைத் தவிர, இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டது.

1989 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ராஜீவ் காந்தி எஸ்.பி.ஜி பாதுகாப்பை இழந்தார். பின்னர் 1994 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் இந்தச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டது. அப்போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்த பி.வி. நரசிம்மராவுடன் தொடர்புடையதாக காணப்பட்ட ஒரு வழக்கு டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.புஞ்ச்சி மற்றும் கே.டி.தாமஸ் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அந்த அமர்வு எஸ்.பி.ஜி சட்டம் இயல்பிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று தீர்ப்பளித்ததோடு அருகாமை பாதுகாப்பின் நோக்கத்தை வரையறுத்தது.

அதில் நீதிமன்றம் கூறியதாவது: “… இந்தச் சட்டத்தில் பிரதிபலிக்கும் பாராளுமன்றத்தின் விருப்பம் தைரியமானது, தெளிவானது, விரிவானது மற்றும் பரந்த தன்மை கொண்டது. பாதுகாப்பாளருக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்படும் அவர்களின் அருகாமை பாதுகாப்பை திரும்பப் பெறுவது, கட்டுப்படுத்துவது அல்லது தடைசெய்வதை இது அனுமதிப்பது இல்லை…

அருகாமைப் பாதுகாப்பை பற்றி வெளிப்படுத்துகையில் அதற்கு ஒரு அர்த்தம் கொடுக்கப்பட வேண்டும். ஏனென்றால், அவர்களின் செயல்பாடுகள், ஈடுபாடுகள், குடியிருப்பு அல்லது ஒரு இடத்தில் தங்குவது போன்ற இடங்களுக்கு மட்டுமே என பாதுகாப்பு மட்டுப்படுத்தப்படும் என்று நாடாளுமன்றம் கருதியிருக்க முடியாது. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு படை ஒரு நபரின் நிழலைப் போல தொடர்ந்து செல்கிறது. ஒரு பாதுகாவலருக்கு அர்த்தமுள்ள பாதுகாப்பை எவ்வாறு வழங்குவது என்பதை எஸ்.பி.ஜி தான் முடிவு செய்யும்...” (காவல் ஆணையர், டெல்லி மற்றும் மற்றவர்கள் Vs பதிவாளர், டெல்லி உயர் நீதிமன்றம் 1996)

சிறப்பு பாதுகாப்பு காவல் (எஸ்.பி.ஜி) பணியாளர்களை இந்திய பிரதமரைச் சுற்றி எல்லா நேரங்களிலும் காணலாம். அவர்கள் கோடையில் சஃபாரி சூட்களையும், குளிர்காலத்தில் இருண்ட ஃபார்மல் ஜாக்கெட்டுகளையும் பிரதிபலிக்கும் சன்கிளாஸையும் அணிந்துகொள்கிறார்கள். மேலும், அவர்கள் காதில் தகவல் தொடர்பு கருவிகளையும் வைத்திருப்பார்கள். அவர்களுடைய ஆயுதங்கள் பெரும்பாலும் மறைக்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பின் வகைகள்

எஸ்.பி.ஜி தவிர, இந்தியாவில் உள்ள வி.ஐ.பிகளுக்கு மற்ற பாதுகாப்பு படையினரால் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றன. பாதுகாப்பு படையின் அளவுகள் குறிப்பிட்ட தனிநபரைச் சுற்றியுள்ள அச்சுறுத்தல் உணர்வுகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

பாதுகாப்பு படையில் மிக உயர்ந்த பாதுகாப்பு நிலை இசட்-பிளஸ் பாதுகாப்பு வகை ஆகும். அதைத் தொடர்ந்து இசட், ஒய் மற்றும் எக்ஸ் பாதுகாப்பு வகைகள் உள்ளன. பாதுகாப்பு படையின் அளவு உயர்ந்தால், தனிநபரைப் பாதுகாக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இசட்-பிளஸ் வகை பாதுகாவலுக்கு தானியங்கி துப்பாக்கி ஆயுதங்களைக் கொண்ட 24-36 பாதுகாப்பு பணியாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். இசட் வகை பாதுகாவலுக்கு 16 -20 பாதுகாப்பு பணியாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி) உயரடுக்கு கருப்பு பூனை படை கமாண்டோக்கள் அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ள வி.ஐ.பி-களைப் பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறார்கள்.

பாதுகாப்பை திரும்பப் பெறுதல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறுவது பற்றி பரவலாகப் புகார்கள் கூறப்பட்டாலும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட வி.ஐ.பி-களின் பாதுகாப்பை அவ்வப்போது அவர்களுக்கு உள்ள அச்சுறுத்தல் குறித்த அப்போதைய மதிப்பீட்டைப் பொறுத்து, பாதுகாப்பை மேம்படுத்தியோ அல்லது தரமிறக்கியோ உள்ளன.

உதாரணமாக, ஆகஸ்ட் 2015 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகம் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார், முன்னாள் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 8 பேர், 2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்பட பல முன்னாள் அமைச்சர்கள் என மொத்தம் 30 தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப்பெற்றுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பாதுகாப்பு வகைப்படுத்தல் குழுவின் கூட்டத்தில், இந்த பாதுகாவலர்களின் பாதுகாப்பை திரும்பப் பெறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சகம் தனது உத்தியோகப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக 2009 ஆம் ஆண்டில், ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, இசட் மற்றும் இசட்-பிளஸ் பிரிவுகளில் உள்ள வி.ஐ.பி-களின் பட்டியலை அரசாங்கம் பிரித்து, ஒய் பாதுகாப்பு படை பிரிவுக்கு அனுப்பியது. பல பேருக்கு வழங்கபப்ட்ட எக்ஸ் வகை பாதுகாப்பை நீக்கியது.

Former Pm Manmohan Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment