Advertisment

‘கே’ பிளானை நினைவு கூறும் காங்கிரஸ்: வழிகாட்ட இன்னொரு 'காமராஜர்' இருக்கிறாரா?

காங்கிரசுக்கு நேரு-காந்தி குடும்பம் அல்லாத தலைவரை ராகுல்காந்தி பரிந்துரைத்திருப்பது காமராஜர் திட்டத்தின் வெற்றி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian National congress president, congress crisis, kamaraj plan, காமராஜர், பெருந்தலைவர் காமராஜர், கே பிளான்

Indian National congress president, congress crisis, kamaraj plan, காமராஜர், பெருந்தலைவர் காமராஜர், கே பிளான்

அம்ரித் லால்

Advertisment

காமராஜர் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் அரசு பதவிகளிலிருந்து வெளியேறி கட்சிக்காக வேலை செய்ய வேண்டும் என்று கோரினார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சி தற்போது தலைமை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பழமையான கட்சியின் வரலாறு கடுமையாக கனத்துக் கிடக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு காலத்திலும் ஒரு நெருக்கடியை சந்தித்துள்ளது. கடந்த காலங்களில் அது தீர்வுகளைத் தேடியது. அது போன்ற ஒரு தீர்வுதான் காமாராஜர் திட்டம். 56 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில் அன்றைய மெட்ராஸ் முதலமைச்சர் காமராஜர், பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு காங்கிரஸ் கட்சியையும் அரசாங்கத்தையும் மீண்டும் உற்சாகப்படுத்தக்கூடிய ஒரு வரைவை முன்மொழிந்தார்.

அது காமராஜர் முன்மொழிவு என்று குறிப்பிடப்படுகிறது. தலைவர்கள் அவர்களுடைய அமைச்சர் பதவிகளிலிருந்து விலகி அமைப்பு ரீதியான வேலைகளை எடுத்து செய்ய வேண்டும். அதேநேரத்தில், அமைப்பில் உள்ளவர்கள் அரசாங்க பணியில் இணைவார்கள் என்று கூறினார். 2019 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ததைத்தொடர்ந்து, காமராஜர் திட்டம் பற்றி மீண்டும் தீவிரமாக பேசப்படுகிறது.

நேருவுக்குப் பிறகு யார்?

1963 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக மூன்று இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்த சூழலைப் பற்றி காங்கிரஸ் கவலையடைந்தது. ஆனால், அந்த கவலை அதனுடைய ஆரம்ப நிலையிலேயே இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் சீனாவுடன் ஏற்பட்ட போர் தலைமையின் மன உறுதியை சிதைத்துவிட்டது. நேரு ஒரு அரசியல்வாதியாக ஒரு அடியை வாங்கியிருந்தார். எதிர்க்கட்சிகள் எல்லா இடங்களிலும் முன்னேறி வந்தார்கள். இடைத்தேர்தல்கள் ஆச்சார்யா கிருபாலனி, ராம்மனோகர் லோகியா, மினு மாசானி ஆகிய மூன்று முக்கியமானவர்களை மக்களவைக்கு கொண்டு வந்தன.

அதிகாரத்திற்கு வந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் மற்றும் பணியாளர்களிடையே சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து, நேருவுக்குப் பிறகு யார் என்ற கேள்வி அச்சுறுத்தலாக ஒலித்தது. அப்போது 60 வயதான காமராஜர், நேருவிடம் அமைப்பு ரீதியான பணிகளை மேற்கொள்ள பதவியில் இருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.

காமராஜரின் கீழ் அன்றைய மெட்ராஸில் காங்கிரஸ் ஒருங்கிணைந்தது. ஆனால், அடிமட்ட நிலையிலிருந்த தலைவர்கள், திமுக முன்னேறிவருவதையும் அதனுடைய அணி திரட்டல் மற்றும் கருத்தியல் சவால்களை காங்கிரஸ் அமைப்பு எதிர்கொள்ள முடியாமல் போகக்கூடும் என்பதை அறிந்திருந்தார்கள்.

இந்த திட்டம் காங்கிரஸ் செயற்குழுவில் விவாதத்திற்கு வந்தது. அங்கே நேருவின் அமைச்சரவை உறுப்பினர்கள், முதலமைச்சர்கள் என பெரிய எண்ணிகையிலான உறுப்பினர்கள் அதை ஆதரித்தனர். அனைத்து மத்திய அமைச்சர்களும் முதலமைச்சர்களும் தங்களுடைய ராஜினாமா கடிதத்தை நேருவிடம் அளித்தனர். மொரார்ஜி தேசாய், எஸ்.கே.பாட்டீல், லால் பகதூர் சாஸ்திரி, ஜெகஜீவன்ராம், கே.எல்.ஸ்ரீமாலி, பி.கோபால ரெட்டி ஆகிய 6 மத்திய அமைச்சர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும், மெட்ராஸ், ஒரிஸா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களின் ராஜினாமாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை புதுப்பிக்க அமைப்பு ரீதியான பதவிகளை ஏற்றுக்கொண்டனர். அப்போதிலிருந்து, காங்கிரஸ் கட்சி கோமா நிலைக்கு செல்லும் என்று அச்சுறுத்தப்படும்போதெல்லாம் காமராஜர் திட்டம் ஒரு தீர்வாக முன்மொழியப்படுகிறது.

காமராஜர் திட்டமும் அவருக்குப் பிறகும்

காமராஜர் சுயமாக உருவான ஒரு தலைவர். அவர் ஒருமைப்பாட்டை வலியுறுத்துவபராக இருந்தார். சுதந்திரப் போராட்டத்தின்போது மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ் பேசும் பகுதிகளில் கட்சி அமைப்பை கட்டி எழுப்பியவர். அதன்பிறகு 9 ஆண்டுகள் முதலமைச்சராக மாநில அரசை நடத்தினார். ஒரு ஏழை நாடார் (பிற்படுத்தப்பட்ட சாதி) குடும்பத்திலிருந்து பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத அவர் கட்சியில் சேர்ந்து, காங்கிரஸ் தன்னார்வலராக இருந்து கட்சித் தலைவராகவும், பிறகு முதலமைச்சராகவும் அடிமட்டத்திலிருந்து எழுந்து வந்தவர். காமராஜரின் கீழ் மெட்ராஸ் இந்தியாவின் மிக முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றாக மாறியது. நேருவுக்கு அவர் மீது மிகுந்த மரியாதை இருந்தது.

1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி காமராஜர் திட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் இயற்றி ஒப்புதல் அளித்தது. அரசியல் விஞ்ஞானி ரஜினி கோத்தாரி அவருடைய மிகச் சிறந்த புத்தகமான ‘இந்தியாவில் அரசியல்’ என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், “இந்த திட்டம், ஒரு புறம், பிரதமர் நேருவுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் அலுவலக அதிகாரிகளை பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்வதற்கு வாய்ப்பளித்தது. ஆனால், மறுபுறம், அரசாங்கத்துடன் கட்சி அமைப்பும் சமமானவை என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது” என்று குறிப்பிடுகிறார்.

அந்த ஆண்டின் பிற்பகுதியில், மெட்ராஸ் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய காமராஜர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964 ஆம் ஆண்டு ஜனவரியில் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தொடரில் தலைமை உரையாற்றிய காமராஜர், சர்வாதிகாரமும் வர்க்க மோதலும் இல்லாமல் காங்கிரஸின் சோசலிச இலக்கை அடைய வேண்டும் என வலியுறுத்தினார்.

நேரு அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமர்வில் கலந்துகொள்ள முடியவில்லை. இதையடுத்து, 1964 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி நேரு காலமானார்.

புத்திசாலியான காமராஜர்... நேருவை ஈடுசெய்யமுடியாது என்பதை அறிந்திருந்தார். மேலும், அதிகாரத்தையும் அதன் லட்சியத் தலைவர்களையும் நிர்வகிக்க கட்சிக்கு ஒரு புதிய தலைமை தேவை என்பதையும் அறிந்திருந்தார். பிரதமர் அலுவலகத்தில் ஒரு சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதே அவரது முதல் பணியாக இருந்தது. பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை சர்ச்சை இல்லாமல் பிரதமராக தேர்வு செய்ததற்கு பின்னால், கட்சியை அணி திரட்டுவதில் அவர் திறமையுடன் செயல்பட்டார்.

அவருடைய அடுத்த கட்டம், கட்சி அமைப்பில் வீரியத்தை ஊக்குவிப்பதற்கும் அதன் மூலம், அவர் அரசாங்கத்தையும் கூட்டாட்சி தலைமைத்துவத்தையும் நோக்கி கட்சியை வழிநடத்த முயன்றார். அதற்காக, அதுல்யா கோஷ், சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா, எஸ்.கே.பாட்டீல் ஆகிய சக்தி வாய்ந்த மாநில தலைவர்களின் நம்பிக்கையையும் வென்றெடுத்தார்.

கூட்டுத் தலைமை கருத்து

காமராஜர் கட்சிக்கு ஒரு கூட்டுத் தலைமையை விரும்பினார். தன்னை அவர் ஒருமித்த கருத்தை உருவாக்குபவராக பார்த்தார். அவருடய வாழ்க்கை வரலாற்றை எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் ஆசிரியர் வி.கே.நரசிம்மன், ‘காமராஜர் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்... “நாடாளுமன்ற மாநாடுகளை கண்டிப்பாக மதிப்பவர் என்ற வகையில், காமராஜர் அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளில் காங்கிரஸ் செயற்குழுவோ அல்லது காங்கிரஸ் தலைவரோ தலையீடு செய்வதை விரும்பவில்லை. அவருக்கு முக்கிய கொள்கைகள் தொடர்பாக அமைச்சரவைக்கும் கட்சி அமைப்புக்கும் இடையிலான முழு ஒருங்கிணைப்புதான் தேவையாக இருந்தது. அரசாங்கத்தால் முடிவுகள் எடுப்பதற்கு முன்னர், கொள்கை விஷயங்கள் செயற்குழுவில் முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் உணர்ந்திருந்தார்.” என்று குறிப்பிடுகிறார்.

நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரியை விரைவாக இழந்திருந்த ஒரு கடினமான நேரத்தில் காமராஜரின் கூட்டுத்தலைமை என்ற வார்த்தை காங்கிரசுக்கு வழிகாட்ட உதவியது. இந்தியாவின் இரண்டு போர்களும் வறட்சியும் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டன. அதனால், மிகவும் அனுபவம் வாய்ந்த மொரார்ஜி தேசாய்க்கு பதிலாக இந்திரா காந்தியை காங்கிரஸ் தேர்ந்தெடுப்பதில் காமராஜர் முக்கிய பங்கு வகித்தார்.

காமராஜரின் திட்டம் கைவிடப்பட்டது

இந்திராகாந்தியின் கீழ், காமராஜரின் கொள்கையான கூட்டுத் தலைமை மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்குதல் என்பதிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகியது. மேலும், அது ஒரு தலைவரை மையமாகக் கொண்ட கட்டளையை நோக்கி நகர்ந்தது. இது இந்திராவின் ஆதரவாளர்களுக்கும் கட்சியின் பழைய காவலர்களுக்கும் உரசல் ஏற்பட வழிவகுத்தது. இது 1969 ஆம் ஆண்டு கட்சியில் பிளவு ஏற்பட வழிகோலியது. அப்போது அமைப்பு மீதான காமராஜருடைய செல்வாக்கும் குறைந்திருந்தது. மெட்ராஸ் மாநிலத்தில் 1967 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை திமுக தோற்கடித்தது. அப்போது பெருந்தலைவர் காமராஜரும் தோல்வியடைந்தார்.

காமராஜர் முதலமைச்சராக இருந்து, அப்போது காங்கிரஸ் மெட்ராஸ் மாநில தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் அது மற்றொரு விவாதம். ஆனால், காமராஜரின் வழிகாட்டுதல் இல்லாமல் மெட்ராஸில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் 1965 ஆம் ஆண்டு மாநிலத்தையே உலுக்கிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் 1965 – 1966 ஆம் ஆண்டு நிலவிய உணவுப் பற்றாக்குறையையும் திறமையாக கையாளத் தவறிவிட்டது.

காமராஜர் திட்டத்தின் ஆதாயத்தை இந்திராகாந்தியின் காலம் இல்லாமல் செய்துவிட்டது. காங்கிரஸ் கட்சி நேரு – காந்தி குடும்பத்தைச் சுற்றிய ஒரு கட்சியாக மாறியது. இப்போது காங்கிரசுக்கு நேரு-காந்தி குடும்பம் அல்லாத தலைவரை ராகுல்காந்தி பரிந்துரைத்திருப்பது காமராஜர் திட்டத்தின் வெற்றி. ஆனால், இந்த மாற்றத்துக்கு வழிகாட்ட காங்கிரஸில் ஒரு காமராஜர் இருக்கிறாரா?

Kamarajar Rahul Gandhi All India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment