Advertisment

வரலாற்று சாட்சியான காந்தி சிலை இடம்பெயர்கிறது

புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும் இந்த சிலை புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் முக்கிய நுழைவு வாயிலில் வைக்கப்படும் என்று நாடாளுமன்ற அவை அதிகாரிகள் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mahatma Gandhi statue parliament, Gandhi statue Parliament, மகாத்மா காந்தி சிலை, நாடாளுமன்றத்தில் காந்தி சிலை, Parliament building construction, Mahatma Gandhi statue parliament building, tamil indian express explained

Liz Mathew

Advertisment

புதிய பாராளுமன்ற கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியதும், இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தின் முக்கிய அடையாளமாகக் காணக்கூடிய மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற சிலை ஒரு தற்காலிக இடத்திற்கு மாற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். இறுதியில் மீண்டும் நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டுவரப்படும்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும், சிலை புதிய கட்டடத்தின் பிரதான நுழைவாயிலில் வைக்கப்படும் என்று நாடாளுமன்ற அவை அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.

வரலாற்று சாட்சி

சிலைகள் அவைகளுக்கு முன் நடப்பவைகளை பதிவு செய்தால், தேசத் தந்தையின் 16 அடி வெண்கலச் சிலை இந்தியாவின் சமகால வரலாற்றின் மிக மதிப்புமிக்க களஞ்சியங்களில் ஒன்றாக இருக்கும். சம்மணமிட்டு தாமரை நிலையில் அமர்ந்திருக்கும் மகாத்மா காந்தி, 3 தசாப்தங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் தீவிரமான, சிந்தனையைத் தூண்டும் விவாதங்களுக்கும், அமளிகளுக்கும் - பரபரப்பான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் முழக்கங்களுக்கும் ஒரு மௌன சாட்சியாக இருந்து வருகிறது. ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒருமுறையேனும் அல்லது மற்றவர்கள் பலமுறை இந்த சிலையின் முன்பு போராட்டத்தில் நின்றுள்ளனர்.

இந்த சிலைக்கு முன்னால் தான் பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை அடிக்கடி சீர்குலைப்பதை எதிர்த்து ராகுல் காந்தி தனது முதல் போராட்டத்தை நடத்தினார். ராகுலின் முதல் படங்கள் அவரை ஒரு செயல்படுகிற உறுப்பினராகக் காட்டியது. இப்போது பாஜகவுடன் இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியாவுடன், ராகுலின் வலதுபுறம் இருக்க ஜிதின் பிரசாதா, குல்தீப் பிஷ்னோய், சச்சின் பைலட் மற்றும் அஜய் மக்கான் போன்ற இளம் எம்.பி.க்கள் காந்தி சிலை முன் அமர்ந்து 2005 ஆம் ஆண்டு பட்ஜெட் அமர்வின் போது தயவுசெய்து நாங்கள் சொல்வதைக் கேளுங்கள், நாங்கள் பேச விரும்புகிறோம் என்று தெரிவிக்கும் பதாகைகளை வைத்திருப்பதை பார்க்க முடிகிறது.

மறைந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. நரமல்லி சிவபிரசாத் 2018ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஒவ்வொரு நாளும், அவர் சேலை கட்டிக்கொண்டு, ஹிட்லர் போன்று உடை அணிந்து, கிறிஸ்தவ பாதிரியார், கிருஷ்ணர், மவுல்வி, நாரதர் என பல்வேறு வேடங்களில் வந்ததை புகைப்படம் எடுக்க புகைப்படக் கலைஞர்கள் திரண்டு வந்தனர்.

கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரின்போது, ​​திரிணாமுல் காங்கிரஸின் டெரெக் ஓ பிரையன் மற்றும் காங்கிரசின் ராஜீவ் சதவ் உட்பட 8 மாநிலங்களவை எம்.பி.க்கள் இந்த சிலையின் முன்பு புல்வெளியில் தரைவிரிப்புகளை விரித்து முதல்முறையாக இரவு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்.

விழுமியங்களின் நினைவூட்டல்

இந்த சிலை அவர்களுக்கு மகத்தான அர்த்தம் அளிப்பதாக கட்சிகளைத் தாண்டி எம்.பி.க்கள் கூறுகின்றனர்.

பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வினய் சஹஸ்ரபுத்தே, இந்த சிலை மகாத்மா காந்தி உலகுக்கு அளித்த பங்களிப்பு, அவரது மதிப்புகள் மற்றும் எளிமை ஆகியவற்றிற்கு நாடு அளித்த நன்றியுணர்வைக் குறிக்கிறது என்று கூறினார்.

12 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா, இந்த சிலை அனைவருக்கும் அன்பையும் கருணையையும் குறிக்கிறது. மேலும், அது அகிம்சையை எந்த எம்.பி-யும் மறக்கக்கூடாது என்பதற்கான செய்தி ஆகும் என்று கூறினார்.

2019-ல் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த காங்கிரஸ் எம்.பி ஹிபி ஈடன், இந்த சிலை ஒருபோதும் அலங்காரப் பொருள் அல்ல என்று கூறினார். “அதன் பொருள் நாம் கவனிக்க வேண்டிய பல விழுமியங்கள் மற்றும் கொள்கைகளைக் குறிக்கிறது. அநீதி ஏற்படும் போதெல்லாம் - மக்களுக்கு எதிராக அல்லது எதிர்க்கட்சிக்கு நீதி மறுக்கப்படும் போது - சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையை குறிக்கும் சிலைக்கு முன்னால் செல்கிறோம். நாட்டின் பொதுவான குடிமகன் எங்களிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளையும் இந்த சிலை நமக்கு நினைவூட்டுகிறது.” என்று ஈடன் கூறினார்.

வேறு எங்கே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

நாடாளுமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் படங்களில் காணப்படும் இந்த சிலை 1993, அக்டோபர் 2 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயால் சர்மாவால் திறக்கப்பட்டது. இதை நகர வளர்ச்சி அமைச்சகம் நன்கொடையாக அளித்ததாக மாநிலங்களவை வலைத்தளம் தெரிவித்துள்ளது.

சில நாடாளுமன்ற அதிகாரிகள், இந்த சிலை நிறுவப்பட்டது இந்த இடத்திற்காக அல்ல, வேறு இடம் என்று தெரிவித்தனர். இந்த சிலை 1960களின் நடுப்பகுதியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் சிலை அகற்றப்பட்ட இந்தியா கேட்டின் விதானத்தின் கீழ் வைக்கப்பட வேண்டியது. பிரிட்டன் மன்னர் சிலை இருந்த பீடத்தில் மகாத்மாவை வைக்கும் யோசனையை பல தலைவர்களும் காந்தியவாதிகளும் எதிர்த்ததை அடுத்து அந்த சிலை நாடாளுமன்ற வளாகத்தில் வைக்க முடிந்தது என்று கூறினார்கள்.

மறைந்த சோசலிச தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியதை முன்னாள் நாடாளுமன்ற மூத்த அதிகாரி நினைவுகூர்ந்தார். “(காங்கிரஸ்) அரசாங்கம் காந்தியை நடுரோட்டில் விட்டுவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அதனால், அரசாங்கம் உடனடியாக இந்த சிலையை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து கேட் எண் 1க்கு முன்னால் வைக்க ஏற்பாடு செய்தது” என்று அந்த அதிகாரி கூறினார். இந்த சிலையை நிர்மான் பவன் அருகே நிறுவும் திட்டமும் இருந்தது என்று மற்றொரு அதிகாரி கூறினார்.

இந்த சிலையை செய்த சிற்பியும் அவரது படைப்பும்

இந்த சிலை குஜராத்தில் உள்ள சர்தார் படேலின் உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலையை வடிவமைத்த 95 வயதான ராம் வி சுதரின் படைப்பாகும். இந்தியா கேட் நுழைவாயிலுக்கு ஒரு சிலையை வடிவமைக்குமாறு சுதரிடம் கேட்கப்பட்டபோது, ​​அவர் தியான நிலையில் இருக்கும் மகாத்மா காந்தியின் ஒரு சிறிய மாதிரியை உருவாக்கியிருந்தார் என்று சுதரின் மகன் அனில் ராம் சுதர் நினைவுகூர்ந்தார்.

“அங்கே ஒரு போட்டி இருந்தது, பங்கேற்பாளர்கள் 2.5 அடி உயரத்தில் ஒரு சிலையை உருவாக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் அதை மத்திய பொதுப்பணித்துறை அமைச்சகத்திடம் காட்சிக்கு வைத்திருந்தபோது, பிரதமர் மொரார்ஜி தேசாய் உள்ளீடுகளை ஆய்வு செய்ய வந்தார். என் தந்தை உருவாக்கிய மிகச் சிறந்த ஒன்றை அவர் விரும்பினார். அவர் அதைக் கண்டு மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் அதை சில நாட்கள் பார்ப்பதற்கு வீட்டிற்கு எடுத்துச் சென்றார். பின்னர் அதைத் திருப்பித் தந்தார்” என்று அனில் ராம் சுதர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இந்திரா காந்தி பிரதமரானார். அவரும் அனைத்து சிலைகளையும் சரிபார்த்து, என் தந்தையின் படைப்பை மிகவும் விரும்பினார்” என்று அவர் கூறினார்.

மகாத்மாவின் முகத்தில் உள்ள அமைதியும் அமைதியான வெளிப்பாடும் அனைவரையும் கவர்ந்தது என்று அனில் ராம் சுதர் கூறினார். இந்த சிலையின் இரண்டு பிரதிகள் உள்ளன என்று அவர் கூறினார் - ஒன்று குஜராத்திலும் மற்றொன்று ஹைதராபாத்திலும் உள்ளது. “கர்நாடகா விதான் சபைகாக 27 அடி உயரத்தில் இதே போன்ற ஒரு சிலையும் உள்ளது” என்று அவர் கூறினார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Parliament Mahatma Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment