Advertisment

தென் கொரிய மனிதரை கொன்ற ‘மூளையை தின்னும் அமீபா’: இந்தியாவிலும் இருக்கிறதா?

மூளையை உண்ணும் அமீபா, மூளை திசுக்களை அழித்து, முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (primary amebic meningoencephalitis) எனப்படும் ஆபத்தான தொற்றுநோயை ஏற்படுத்துகிறது.

author-image
WebDesk
New Update
health

‘Brain-eating amoeba’ kills South Korean man: What is the infection

தி கொரியா டைம்ஸ் படி, தென் கொரியா திங்களன்று நெக்லேரியா ஃபோலேரி அல்லது "மூளையை உண்ணும் அமீபா" விலிருந்து அதன் முதல் தொற்று நோயைப் பதிவு செய்தது. சமீபத்தில் தாய்லாந்தில் இருந்து திரும்பிய 50 வயதான கொரியர், அரிதான மற்றும் ஆபத்தான நோய்த்தொற்றின் அறிகுறிகளுடன் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட 10 நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisment

கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் (KDCA) அந்த நபர் டிசம்பர் 10 அன்று தென் கொரியாவிற்குள் வருவதற்கு முன்பு தாய்லாந்தில் நான்கு மாதங்கள் தங்கியிருந்ததை உறுதிபடுத்தியது. ஒரு நாள் கழித்து, அவர் தலைவலி, வாந்தி, கழுத்தில் விறைப்பு மற்றும் வாய் உலறல் ஆகியவற்றால் அவதிப்படத் தொடங்கிய பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று அறிக்கை கூறுகிறது.

அந்த நபர் டிசம்பர் 21 அன்று இறந்தார். அவரது மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய சுகாதார அதிகாரிகள் பல சோதனைகளை மேற்கொண்டனர், இறுதியில் இது Naegleria fowleri மூலம் ஏற்பட்ட தொற்று என கண்டறியப்பட்டது.

Naegleria fowleri என்றால் என்ன?                                               

Naegleria என்பது ஒரு அமீபா, இது ஒரு செல் உயிரினம், மேலும் அதன் இனங்களில் ஒன்றான Naegleria fowleri மட்டுமே மனிதர்களைப் பாதிக்கக்கூடியது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவித்துள்ளது. இது முதன்முதலில் ஆஸ்திரேலியாவில் 1965 இல் கண்டுபிடிக்கப்பட்டது, இந்த அமீபா பொதுவாக சூடான நீரூற்றுகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற சூடான நன்னீர் ஆதாரங்களில் காணப்படுகிறது.

இது மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது?

அமீபா மூக்கு வழியாக மனித உடலில் நுழைந்து பின்னர் மூளை வரை பயணிக்கிறது. இது பொதுவாக யாராவது நீந்தும் போது, ​​அல்லது டைவ் செய்யும்போது அல்லது நன்னீரில் தலையை நனைக்கும் போது கூட நிகழலாம். சில சந்தர்ப்பங்களில், மக்கள் தங்கள் நாசியை அசுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்யும் போது தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஏரோசல் துளிகள் மூலம் நெக்லேரியா ஃபோலேரி பரவுவதற்கான எந்த ஆதாரத்தையும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை.

ஒருமுறை Naegleria fowleri மூளைக்குச் சென்றால், அது மூளை திசுக்களை அழித்து, முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) எனப்படும் ஆபத்தான தொற்றுநோயை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது.

PAM (primary amebic meningoencephalitis) இன் அறிகுறிகள் என்ன?

நோய்த்தொற்றுக்குப் பிறகு ஒன்று முதல் 12 நாட்களுக்குள் இந்த தொற்றின் முதல் அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். ஆரம்ப கட்டங்களில், அவை தலைவலி, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்ற மூளைக்காய்ச்சலின் அறிகுறிகளைப் போலவே இருக்கலாம். பிந்தைய கட்டங்களில், ஒருவர் கடினமான கழுத்து, வலிப்பு, மாயத்தோற்றம் மற்றும் கோமா ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.

தொற்று வேகமாக பரவி சராசரியாக ஐந்து நாட்களுக்குள் மரணத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் அமெரிக்க பொது சுகாதார நிறுவனம் கவனித்தது.

1962 முதல் 2021 வரை அமெரிக்காவில் primary amebic meningoencephalitis தொற்றால் பாதிக்கப்பட்ட 154 நபர்களில் நான்கு பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர் என்று அது குறிப்பிடுகிறது.

தொற்றுநோய்க்கான சிகிச்சை என்ன?

Naegleria fowleri தொற்று அரிதானது மற்றும் வேகமாக முன்னேறுவதால், விஞ்ஞானிகளால் இதுவரை எந்த பயனுள்ள சிகிச்சையையும் கண்டறிய முடியவில்லை. தற்போது, ​​மருத்துவர்கள் அம்போடெரிசின் பி, அசித்ரோமைசின், ஃப்ளூகோனசோல், ரிஃபாம்பின், மில்டெஃபோசின் மற்றும் டெக்ஸாமெதாசோன் உள்ளிட்ட மருந்துகளின் கலவையுடன் சிகிச்சை அளிக்கின்றனர்.

காலநிலை மாற்றம் தொற்று பரவலை அதிகரிக்குமா?

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூற்றுப்படி, அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையுடன், அமீபா முக்கியமாக சூடான நன்னீர் ஆதாரங்களில் செழித்து வளர்வதால், Naegleria fowleri தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த உயிரினம் 46 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலையில் சிறப்பாக வளரும் மற்றும் சில சமயங்களில் அதிக வெப்பநிலையிலும் உயிர்வாழ முடியும்.

அதிகப்படியான வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு, ஏரிகள் மற்றும் ஆறுகளின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு வழிவகுத்தது என்று சமீபத்திய பல்வேறு ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இந்த நிலைமைகள் அமீபா வளர மிகவும் சாதகமான சூழலை வழங்குகின்றன.

வெப்ப அலைகள், காற்று மற்றும் நீர் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் போது, ​​அமீபா செழிக்க அனுமதிக்கலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இணையதளம் கூறுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்காவில் நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் தென் மாநிலங்களில் பதிவாகியுள்ளன, இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், அவை வட மாநிலங்களிலும் காணப்படுகின்றன.

இதுவரை, Naegleria fowleri அனைத்து கண்டங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா உட்பட 16 நாடுகளில் முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment