Advertisment

NRC vs NPR : தேசிய மக்கள் தொகை பதிவேடு என்றால் என்ன?

மக்கள் தொகை பதிவேட்டில் இருக்கும் தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு ஒரு குறிப்பிட்ட நபரின் தகவல்கள் இந்திய குடிமக்களின் உள்ளூர் பதிவேட்டில் இணைக்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
National Population Register, NPR, NRC

National Population Register

National Population Register : மத்திய அமைச்சரவை நேற்று தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ஒப்புதல் அளித்துள்ளது. 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணி வருகின்ற 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். இந்த புதுப்பித்தல் பணி அசாம் மாநிலம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அமைச்சரவை ரூ. 3941 கோடி ரூபாயை நிதியாக ஒதுக்கியுள்ளது.

Advertisment

தேசிய மக்கள் தொகை பதிவேடு என்றால் என்ன?

இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்கள் குறித்த பதிவேடு இது. இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் இந்த பதிவேட்டில் தங்களை குறித்து பதிவு செய்திருக்க வேண்டும். இதன் குறிக்கோள் என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் குடிமக்கள் குறித்த அனைத்து தரவுகளையும் விவரமாக பதிவு செய்ய வேண்டும் என்பது தான். முதல் பதிவேடு 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது 2015ம் ஆண்டு புதிப்பிக்கப்பட்டது. அடுத்த புதிப்பிக்கும் பணி ஏப்ரல் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரையில் நடைபெறும். குடியுரிமை சட்டம் 1955, குடியுரிமை விதிகள் 2003-ன் அடிப்படையில் இந்த பதிவேடு உள்ளூர் (கிராமம் / துணை நகரம்), துணை மாவட்டம், மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவில் தயார் செய்யப்படும்.

To read this article in English

யூஸுவல் ரெஸிடெண்ட் என்றால் என்ன?

குடிமக்கள் விதிமுறைகள் 2003-ன் (Citizenship (Registration of Citizens and issue of National Identity Cards) Rules, 2003) படி, யூஸூவல் ரெஸிடெண்ட் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் 6 மாதங்களுக்கும் மேலாக வசிப்பவர்கள் அல்லது 6 மாதங்களுக்கும் மேலாக வசிக்க விரும்புபவர்கள் ஆவார்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்றால் என்ன?

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையை கணக்கெடுத்து கொள்வதாகும். இந்தியாவில் ஒவ்வொரு பத்தாண்டு இடைவெளிக்கு ஒரு முறை இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக 1872ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் கணக்கெடுப்பு 16வது ஆகும். சுதந்திரத்திற்கு பிறகு 8வது கணக்கெடுப்பு ஆகும். 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மக்களின் தரவுகளை சேகரிக்க மொபைல் செயலி பயன்படுத்தப்படும்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்ய என்னென்ன தேவை?

ஒவ்வொரு யூஸூவல் ரெசிடெண்டின் தனிப்பட்ட விவரங்கள் இதில் சேகரிப்படுகின்றன. 21 மிக முக்கியமான தகவல்கள் இதில் இணைக்கப்படுகிறது. குடியிருப்போரின் பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம், கடைசியாக குடியிருந்த பகுதி, பான் அட்டை எண், ஆதார் அட்டை எண், வாக்காளர் அடையாள அட்டை எண், ஓட்டுநர் உரிமம் எண் மற்றும் போன் நம்பர் உள்ளிட்ட 21 தகவல்கள் இதில் இடம்பெறும். 2010ம் ஆண்டு இதில் 15 விபரங்கள் மட்டுமே இணைக்கப்பட்டது. பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் இடம் தற்போது தான் இணைக்கப்பட்டுள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் என்ன வித்தியாசம்?

பொதுவாக தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது கிராமம், நகரம், டவுன், வார்ட்களில் வசிக்கும் குடியிருப்போரின் தகவல்கள் அடங்கிய பதிவேடு ஆகும். ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் குறித்த பதிவேடு ஆகும். இந்திய குடிமக்களுக்கான தேசிய பதிவேடு என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் பெயர், தந்தை பெயர், தாய் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், முகவரி, திருமண உறவு, துணையின் பெயர், அங்க அடையாளம், பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவேட்டு எண், தேசிய அடையாள எண் ஆகியவை உள்ளடக்கியது ஆகும்.

என்.ஆர்.சி - என்.பி.ஆர்-க்கு இடையே இருக்கும் தொடர்பு என்ன?

டிசம்பர் 10, 2003 அன்று அறிவிக்கப்பட்ட குடியுரிமை (குடிமக்களின் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் வெளியீடு) விதிகளின்படி, உள்ளூர் பதிவாளரின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து நபர்களின் விவரங்களையும் சேகரித்து மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் தேதியை மத்திய அரசு தீர்மானிக்கலாம். மக்கள் தொகை பதிவேட்டில் இருக்கும் தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு ஒரு குறிப்பிட்ட நபரின் தகவல்கள் இந்திய குடிமக்களின் உள்ளூர் பதிவேட்டில் இணைக்கப்படும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment