Advertisment

வீட்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

மிதமான கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒரு பிரத்யேக கோவிட் சுகாதார மையத்தில் அல்லது இரண்டாம் நிலை சுகாதார நிலையத்தில் அனுமதிக்க வேண்டும்,

author-image
WebDesk
New Update
New Covid-19 guidelines on home isolation

 Kaunain Sheriff M 

Advertisment

New Covid-19 guidelines on home isolation : வியாழக்கிழமை அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இரண்டு முக்கியமான வழிகாட்டு ஆவணங்களை வெளியிட்டது. வீட்டில் இருந்து சிகிச்சை பெறும் நோய் அறிகுறிகள் குறைவாக இருக்கின்ற, நோய் அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கான வழிகாட்டுதல்களில், மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் மருத்துவர் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும் என்பது உட்பட முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி வெளியிட்டது. இரண்டாவது குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்று குறித்து மேலாண்மை வழிகாட்டுதல்.

வீட்டில் இருந்து சிகிச்சை பெறும் நபர்களுக்கு கூறப்பட்ட பரிந்துரைகள் என்ன?

சில பொதுவான மற்றும் குறிப்பிட்ட பரிந்துரைகளை அரசு வழங்கியுள்ளது. பொது வழிகாட்டுதல்களில் அனைத்து நோயாளிகளும் மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனே அவருக்கு தெரிவிக்க வேண்டும். இணை நோய்களுடன் இருக்கும் கொரோனா நோயாளிகள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு அந்நோய்களுக்கான சிகிச்சைகளை பெற வேண்டும்.

காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளிகளுக்கு பல்வேறு முக்கியமான பரிந்துரைகள் வழங்க்கப்பட்டன. சுடுநீரில் வாய்க் கொப்பளித்தல் மற்றும் ஆவி பிடித்தல் ஆகியவற்றை நாள் ஒன்றுக்கு இருமுறை செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் என்ன செயவது?

நாள் ஒன்றுக்கு 650மில்லி கிராம் பாராசிட்டமால் மாத்திரைகளை நான்கு முறை எடுத்துக் கொண்டும் காய்ச்சல் சரியாகவில்லை என்றால் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். அவர் ஸ்டெராய்ட் இல்லாத ஆண்ட்டி இன்ஃப்ளமேட்டரி மருந்தான நாப்ராக்ஸனை (250mg நாள் ஒன்றுக்கு இரண்டு முறை) பரிந்துரைக்கலாம்.; மருத்துவர் இவெர்மெக்டின் மாத்திரைகளை (200 mcg/kg வெறும் வயிற்றில் நாள் ஒன்றுக்கு ஒன்று) மூன்று முதல் 5 நாட்களுக்கு பரிந்துரைக்கலாம் என்று கூறியுள்ளது.

ஐந்து நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் இருந்தால் உள்ளிழுக்கும் புடெஸோனைடு (Inhalational Budesonide) (ஸ்பேசருடன் 800 எம்.சி.ஜி டோஸில் தினமும் இரண்டு முறை 5 முதல் 7 நாட்களுக்கு வழங்கப்படுகிறது) கொடுக்கலாம்.

7 நாட்களுக்கும் மேலாக கடுமையான இருமலுடன் காய்ச்சல் இருந்தால் குறைந்த டோஸ்கள் கொண்ட ஸ்டெராய்ட் மருந்துகளை பெற சிகிச்சையளிக்கும் மருத்துவரை அணுக வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

ரெம்டெசிவிரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டுமா?

ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு தான் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பெற வேண்டும். வீட்டில் இருந்து சிகிச்சை பெறும் போது இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறப்பட்டுள்ள்ளது.

ஆக்ஸிஜன் செறிவு வீழ்ச்சியடைந்தால் அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், அந்த நபருக்கு மருத்துவமனையில் அனுமதி தேவைப்படுகிறது மற்றும் அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் / கண்காணிப்புக் குழுவின் உடனடி ஆலோசனையைப் பெற வேண்டும் என்று கடுமையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோவிட்19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை பராமரிப்பது எப்படி?

நெறிமுறை அறிகுறியற்ற குழந்தைகளுக்கும், லேசான, மிதமான மற்றும் கடுமையான நோயுற்றவர்களுக்கும் தனி வழிகாட்டுதல்களை வகுக்கிறது. அறிகுறிகளின் வளர்ச்சியைக் கண்காணிப்பதும், மதிப்பிடப்பட்ட தீவிரத்தின்படி அடுத்தடுத்த சிகிச்சை தர வேண்டும். அறிகுறியற்ற குழந்தைகளுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை என்று நெறிமுறை கூறுகிறது.

மேலும் படிக்க : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா; சோதனைக் கூட்டங்கள் எண்ணிக்கை எவ்வளவு?

லேசான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், சுவாசிக்க சிரமமில்லாத இருமல், மற்றும் ஒரு சில குழந்தைகளுக்கு கேஸ்ட்ரோ அறிகுறிகள் இருக்கலாம். அத்தகைய குழந்தைகளுக்கு எந்தவொரு பரிசோதனையும் தேவையில்லை. தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.

அறிகுறிகளுடன் இருக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் என்ன?

காய்ச்சலுக்கு மருத்துவர் பரிந்துரையின் படி பாராசிட்டமால் (10-15 mg/kg/dose) ஒவ்வொரு நான்கு முதல் 6 மணி நேர இடைவேளையில் தர வேண்டும். இருமலுக்கு ஸூத்திங் ஏஜெண்ட்டுகளையும், வாய் கொப்பளித்தல் முறையையும் பரிந்துரை செய்கின்றனர்.

நீரேற்றம் மற்றும் சத்தான உணவை பராமரிக்க வாய்வழி திரவங்களை அவர்கள் பரிந்துரைக்கின்றனர். குழந்தைகளுக்கு லேசான நோய்க்கு சிகிச்சையளிக்க ஆண்ட்டிபயோடிக்ஸை பரிந்துரைக்கவில்லை.

குழந்தைகளில் மிதமான நோய் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

கோவிட் -19 உள்ள ஒரு குழந்தைக்கு மிதமான நோய் (ஆக்ஸிஜன் செறிவு 90% க்கு மேல்) இருப்பதாக கீழ் கண்ட நெறிமுறைகளின் படி வகைப்படுத்தப்படும் .

குழந்தையின் வயதை அடிப்படையாகக் கொண்ட சுவாச வரையறைகள்:

2 மாதங்களுக்கும் குறைவானவர்கள் : சுவாச வீதம்> 60 / நிமிடம்

2-12 மாதங்களுக்கு இடைப்பட்டவர்கள் : சுவாச வீதம்> 50 / நிமிடம்

1-5 வயது உடையவர்கள் : சுவாச வீதம்> 40 / நிமிடம்

5 வயதிற்கும் மேற்பட்டவர்கள் : சுவாச வீதம்> 30 / நிமிடம்.

மிதமான கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நிமோனியாவால் பாதிக்கப்படலாம், இது மருத்துவ ரீதியாக வெளிப்படையாக இருக்காது என்று நெறிமுறை கூறுகிறது. இணை நோய்களின் நிலைமைகள் மோசமடையாத வரை ஆய்வக சோதனைகள் தேவையில்லை.

மேலும் படிக்க : நீதிபதி முதல் செயலாளர் வரை; அதிகாரமிக்க நகரில் அனைவரையும் சோர்வடைய வைத்த பற்றாக்குறை

பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன?

மிதமான கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒரு பிரத்யேக கோவிட் சுகாதார மையத்தில் அல்லது இரண்டாம் நிலை சுகாதார நிலையத்தில் அனுமதிக்க வேண்டும், மேலும் மருத்துவ முன்னேற்றத்தினை கண்காணிக்க வேண்டும் என்று நெறிமுறை பரிந்துரைக்கிறது.

திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க வேண்டும் என்று அது பரிந்துரைக்கிறது. வாய்வழி உணவு எடுத்துக் கொள்ளலை (பிறந்த குழந்தைகளுக்கு பாலூட்டுதல்) ஊக்குவிக்க வேண்டும். வாய்வழி உணவு எடுத்துக் கொள்ளுதலில் சிரமம் ஏற்பட்டால் நரம்பு வழியாக திரவம் உள் அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

மிதமான கோவிட் -19 நோய் உள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு கவனிப்பு வழங்கப்பட வேண்டும்?

காய்ச்சலுக்கு, பாராசிட்டமால் 10-15 மி.கி / கிலோ / டோஸ். ஒவ்வொரு 4-6 மணி நேரத்திற்கும் ஒரு முறை வழங்க வேண்டும். (வெப்பநிலை> 38 ° C, அதாவது 100.4 ° F)

பாக்டீரியா தொற்றுக்கான சான்றுகள் இருந்தால் அமோக்ஸிசிலின் வழங்கப்பட வேண்டும்.

94% க்கும் குறைவான ஆக்ஸிஜன் செறிவூட்டலுக்கு, கூடுதல் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

மிதமான நோய் உள்ள அனைத்து குழந்தைகளிலும், குறிப்பாக நோயின் முதல் சில நாட்களில் ஸ்டெராய்டுகள் தேவையில்லை என்று நெறிமுறை கூறுகிறது. ஆனால் தொற்றில் தொடர் முன்னேற்றம் இருக்கும் போது கார்டிகோஸ்டீராய்டுகள் வழங்கப்பட வேண்டும்.

குழந்தைகளில் கடுமையான நோயை நெறிமுறை எவ்வாறு வகைப்படுத்துகிறது?

ஆக்ஸிஜன் செறிவு நிலை 90% க்கும் குறைவான குழந்தைகள் கோவிட் -19 நோய்த்தொற்றின் கடுமையான அளவு கொண்டவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய குழந்தைகளுக்கு கடுமையான நிமோனியா, ARDS (கடுமையான சுவாசக் குழாய் நோய்க்குறி), செப்டிக் அதிர்ச்சி, MODS (பல-உறுப்பு செயலிழப்பு நோய்க்குறி) அல்லது சயனோசிஸுடன் நிமோனியா (டீஆக்ஸைஜனேற்றத்தால் ஏற்படும் நீல நிறமாற்றம்) இருக்கலாம்.

மருத்துவ ரீதியாக, அத்தகைய குழந்தைகளுக்கு முணுமுணுப்பு, நெஞ்சுக்கூடு உள்வாங்குதல், சோம்பல், வலிப்பு போன்றவை இருக்கலாம் என நெறிமுறை கூறுகிறது.

அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன?

த்ரோம்போசிஸ், இது ஒரு ஆழமான நரம்பில் இரத்த உறைவு; ஹீமோபாகோசைடிக் லிம்போஹிஸ்டியோசைடோசிஸ் (எச்.எல்.எச்), கடுமையான முறையான அழற்சி நோய்க்குறி; மற்றும் உறுப்பு செயலிழப்பு ஆகியவை தொடர்பாக மதிப்பீடு செய்யவேண்டும்.

முழுமையான இரத்த எண்ணிக்கை, கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடு சோதனைகள் மற்றும் மார்பு எக்ஸ்ரே ஆகியவற்றை பரிந்துரை செய்கிறது.

இது இன்ட்ரெவனஸ் திரவ சிகிச்சை மற்றும் கார்டிகோஸ்டீரியோட்களை பரிந்துரைக்கிறது - டெக்ஸாமெதாசோன் ஒரு டோஸுக்கு 0.15 மி.கி / கி.கி (அதிகபட்சம் 6 மி.கி ஒரு நாளைக்கு இரண்டு முறை)

ரெம்டெசிவிர் போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் போதுமான பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறைவாக உள்ளது என்று தரவுகள் கூறுகின்றனர்.

18 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்தின் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் குறிப்பிடத்தக்க உயிர்வாழும் நன்மைகளை அளிக்கவில்லை. குழந்தைகளுக்கான அவசர பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தரவு கிடைக்கும் வரை, அறிகுறிகள் தோன்றிய மூன்று நாட்களுக்குள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் இது கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட வேண்டும், குழந்தையின் சிறுநீரக மற்றும் கல்லீரல் செயல்பாடுகள் இயல்பானவை என்பதைக் கண்டறிந்த பின்னர் பக்க விளைவுகள் தொடர்பாக ஆராயப்படும்.

கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையில் மலேரியா எதிர்ப்பு மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின், வைரஸ் எதிர்ப்பு ஃபெவிபிராவிர், ஐவர்மெக்டின் மற்றும் எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்துகள் லோபினாவிர் / ரிடோனவீர் ஆகியவற்றின் பங்கு இல்லை என்பதையும் நெறிமுறை குறிப்பிடுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment