Advertisment

போரால் அல்ல... பஞ்சத்தால் இலங்கையில் இருந்து புலம் பெயரும் அப்பாவி மக்கள்!

யுத்தத்தின் இறுதி கட்டத்தின் போது ஆயிரக் கணக்கான மக்களை கொன்ற இலங்கை ராணுவத்திற்கு உதவிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கமாக செயல்பட்டதால் திமுகவை தமிழர் விரோத கட்சியாகவே தீவிர தமிழ் தேசியவாதிகள் கருதுகின்றனர்

author-image
WebDesk
New Update
The new refugees from Sri Lanka driven by hunger not war

Arun Janardhanan

Advertisment

New refugees from Sri Lanka: வெகு காலமாக இலங்கையில் நிலவி வந்த போர் சூழல் மற்றும் வெறுப்பின் காரணமாக இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்கு வருகை புரிவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் மார்ச் 22ம் தேதி, இரண்டு குழுக்களாக தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள் 16 பேரின் நிலைமை மற்றும் சூழல் முற்றிலும் வேறானது. அவர்கள் அனைவரும் பொருளாதார அகதிகள். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழலில் இருந்து தப்பிக்க அவர்கள் அந்நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்திய உளவு அமைப்புகள், இலங்கையில் நிலவி வரும் மோசமான பணவீக்க நிலைமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக வருகின்ற வாரங்களில் அதிக அளவில் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று கூறியுள்ளன.

தமிழகத்தை நோக்கி வரும் மக்கள்

வெறும் 30 கி.மீ தொலைவில், ஆழமற்ற பாக் ஜலசந்திக்கு அப்பால் அமைந்திருக்கும் இந்திய நிலப்பரப்பு, நீண்ட காலமாக, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எட்டக் கூடிய தூரமாகவே இருந்திருக்கிறது. தமிழகத்துடனான இனப் பிணைப்பு இலங்கைத் தமிழர்களுக்கான புகலிடமாகவோ, மேற்கத்திய, பொதுவாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல விரும்பும் மக்களுக்கான போக்குவரத்து மையமாகவோ தமிழகத்தை மாற்றியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மக்களும் அரசியல் கட்சிகளும், ஒரே இனம் மற்றும் கலாச்சார வேர்களைக் கொண்ட, புலம்பெயர்ந்த தமிழ் மக்களை வரவேற்கின்றனர். இலங்கைப் போரில் ஈடுபட்ட தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு 1970-80களில் ராணுவ பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கியது இந்தியா. அக்காலத்தில் கடல் தாண்டி வந்த புலம்பெயர் தமிழர்களுக்கு எந்த விதமான அச்சுறுத்தல்களும் நிலவவில்லை. ஆனால் 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட பிறகு நிலைமை அடியோடு மாறியது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியா வந்த இலங்கை தமிழர்கள்; அகதி அந்தஸ்து வழங்கப்படுமா?

இலங்கை அகதிகளின் வரலாறு

வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் இருந்து 1980களுக்கு முன்பு இருந்தே இந்திய வம்சாவளி தமிழர்கள் தமிழகத்திற்கு புலம்பெயர துவங்கியிருந்தனர். ஆனால் 1983ம் ஆண்டு பேரினவாத ஆளும் பௌத்த சிங்கள அரசுக்கும், ஆயுதமேந்திய தமிழ் புலிகளுக்கும் இடையே இனப்போர் மூண்ட பிறகு வருகை அதிகரிக்கத் துவங்கியது.

1983ம் ஆண்டுக்கு முன்பு தமிழகம் திரும்பிய பெரும்பாலான இலங்கை தமிழர்களின் மூதாதையர்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு, தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் இந்திய வம்சாவளி தமிழர்கள் 9,75,000 பேர், அவர்கள் விரும்பும் நாட்டின் குடிமக்களாக மாறுவதற்கு அன்றைய இந்திய -இலங்கை பிரதமர்கள் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் மூலம் இலங்கைத் தமிழர்களின் வருகை எளிதாக்கப்பட்டது.

1982ம் ஆண்டுக்கு முன்பு சுமார் 4.6 லட்சம் இலங்கை வாழ் தமிழர்கள் ஐரோப்பாவில் குடியேறினார்கள். அடையாள நெருக்கடிகளை சமாளிக்க பலர் இந்தியர்களை மணந்தனர்.

‘சிலோன் டீ’ வரலாறும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் 55 வருடங்களும்!

1983ம் ஆண்டு முதல் இலங்கை தமிழர்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழகத்தை வந்தடைந்தனர். 1983ம் ஆண்டு 13 இலங்கை ராணுவத்தினரை விடுதலைப் புலிகள் கொன்றதை தொடர்ந்து இலங்கையில் உருவான தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் காரணமாக, அவ்வாண்டு ஜூலை மாதம் துவங்கி 1987ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 1.34 லட்சம் தமிழர்கள் இந்தியா வந்தடைந்தனர்.

இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட உடன்படிக்கை அடிப்படையில் இலங்கை மக்கள் தமிழகம் வருவது குறைந்தது. 87-89 கால கட்டத்தில் தமிழகம் வந்தடைந்தவர்களில் 25,600 பேர் இலங்கைக்கு திரும்பி சென்றது குறிப்பிடத்தக்கது.

1990ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு மீண்டும் இலங்கையில் இருந்து தமிழர்கள் இந்தியா வருவது அதிகரிக்க துவங்கியது. கிட்டத்தட்ட 1,22,000 நபர்கள் அக்காலகட்டத்தில் தமிழகம் வந்து, அதில் 54 ஆயிரம் பேர் சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றனர் என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதே காலகட்டத்தில் நடைபெற்ற ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு புலம் பெயர்ந்தோர் இங்கே அதிக அழுத்தத்தை சந்திக்க துவங்கியிருந்தனர்.

1995ம் ஆண்டு துவங்கி 2002ம் ஆண்டு வரை, மூன்றாம் கட்ட புலம்பெயர்வு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் போர் உச்சக் கட்டத்தில் இருந்த காலம் அது. 2008 - 2009 காலங்களில் இந்தியாவை நோக்கி வந்தவர்களின் எண்ணிக்கை தீவிரமானது. அவர்களின் வருகை 2013ம் ஆண்டு வரை நீடித்தது.

தமிழ் அகதிகளின் எண்ணிக்கை

சமீபத்திய தரவுகள், 18 வயதுக்கு கீழ் உள்ள 10 ஆயிரம் குழந்தைகள் உட்பட 58,822 இலங்கை தமிழ் மக்கள் 19 ஆயிரம் குடும்பங்களில் வசித்து வருகின்றனர் என்று கூறுகிறது. தமிழகத்தில் உள்ள 108 அகதிகள் முகாம்களில் இவர்கள் வசித்து வருகின்ற நிலையில் அகதி சான்றுகளுடன் முகாம்களுக்கு வெளியே 34,087 பேர் வசித்து வருகின்றனர்.

அதிக காலம் இந்தியாவில் தங்கியவர்கள், ஐரோப்பாவிற்கு செல்ல காத்துக் கொண்டிருப்பவர்கள், சிறப்பு முகாம்களில் தங்கியிருக்கும் முன்னாள் தமிழ்ப் போராளிகள், இந்தியாவில் இருந்து ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சட்டத்திற்கு புறம்பாக தப்பிக்க முயன்று இந்திய அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட நபர்களும் தமிழகத்தில் வசித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அவர்களின் வாழ்வு

யுத்தத்தின் இறுதி கட்டத்தின் போது ஆயிரக் கணக்கான மக்களை கொன்ற இலங்கை ராணுவத்திற்கு உதவிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கமாக செயல்பட்டதால் திமுகவை தமிழர் விரோத கட்சியாகவே தீவிர தமிழ் தேசியவாதிகள் கருதுகின்றனர். ஆனால் இலங்கையை விட்டு வெளியேறும் மக்கள், கடந்த ஓராண்டில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஆதரவாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஸ்டாலின் அரசுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர்.

பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் இலங்கை தமிழர்கள் விவகாரம் பேசப்பட்டு வந்தாலும் கூட அகதிகள் முகாம்களின் தரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. பெரும்பாலான முகாம்களில் 80மற்றும் 90களில் கட்டப்பட்ட ஒன்று அல்லது இரண்டு அறைகளுடன் கூடிய வீடுகள் திறந்தவெளி சிறைகளாகவே உள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் மாநில உளவுத்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவான க்யூ பிரிவு காவல்துறையினர், முகாம்களில் தங்கி, ஹோட்டல் உள்ளிட்ட முறைசாரா பணியிடங்களில் பணியாற்றும், தினக்கூலிகளாக வேலைக்கு செல்லும் நபர்களை கண்காணித்து வருகின்றனர்.

இலவச அரிசி, விழாக்கால ஊக்கத்தொகை, பொங்கல் பரிசு என்று தமிழகத்தில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் அனைத்துவிதமான சமூக நலத்திட்டங்கள் மூலம் பயன் அடைந்துள்ளனர் இம்மக்கள். முகாம்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலைவருக்கும் மாதாந்திர உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ. 1,000 வழங்கப்படுகிறது. மனைவி மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் மாதாந்திர உதவி வழங்கப்படுகிறது. இலங்கை அகதிகளுக்கு 3,510 வீடுகள் கட்டவும், 7,469 வீடுகளை சீரமைக்கவும், நிதியுதவி வழங்கும் திட்டத்தை திமுக அரசு அறிவித்தது. மேலும் இலங்கை தமிழ் மாணவர்களின் உயர்க்கல்விக்கு தேவையான நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொருளாதார நெருக்கடி: 4 மாத கைக் குழந்தையுடன் தமிழகத்தை நாடிய இலங்கை தமிழர்கள்

பொருளாதார அகதிகள்

2019ம் ஆண்டு ஏற்பட்ட ஈஸ்டர் தின வெடிகுண்டு தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று போன்றவை அந்நாட்டின் சுற்றுலாத்துறையை பெரிதும் பாதித்து இலங்கை பொருளாதாரத்தை சீர் குலைக்க துவங்கியது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை அதிகமாக நம்பியிருக்கும் பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில், அன்னிய செலாவணியில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உணவு, எரிபொருள மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அரிசி மற்றும் பால் போன்ற அடிப்படை உணவுப் பொருட்களின் விலை விளிம்பு நிலை மனிதர்களால் நினைத்து பார்க்க இயலாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

மன்னார் மற்றும் யாழ்ப்பாண தமிழர்கள் இந்தியாவிற்கு வருகை புரிய தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். படகுகளின் இருப்பு, இந்திய மற்றும் இலங்கை கப்பற்படை ரோந்து அதிகாரிகளின் பணியிடம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் இந்தியாவுக்கு வருவார்கள் என்று மன்னாரில் உள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இந்தியா வந்தடைந்தவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து தமிழகத்தில் இருந்து வரும் செய்திகளை மக்கள் ஆர்வத்துடன் கேட்டு வருவதாகவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment