Advertisment

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் - சிறப்பு கட்டுரை

அரசாங்கம் மெஜாரிட்டியை இழந்தது. இருப்பினும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது கொடுத்த ஆதரவால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பிழைத்துக் கொண்டது. இதே சமாஜ்வாடி கட்சியின் தான் யு.பி.ஏ. 2004 உருவாக்கத்தின் போது காங்கிரஸால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது.

author-image
WebDesk
New Update
The rise and fall of the UPA

Manoj C G , Ravish Tiwari 

Advertisment

The rise and fall of the UPA : புதன்கிழமை அன்று மும்பைக்கு வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி இரண்டு முக்கியமான அரசியல் அறிக்கைகளை வெளியிட்டார். பாஜகவை வீழ்த்துவது மிகவும் எளியது. அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என்று கூறிய அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவாரை சந்தித்து பேசிய பிறகு யு.பி.ஏ ( ஐக்கிய முற்போக்கு கூட்டணி) என்றால் என்ன? அப்படி ஒன்று இல்லவே இல்லை என்றும் கூறினார்.

ஒரு காலத்தில் இந்த முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கமாக இருந்த மமதா பானர்ஜி “பிராந்திய கட்சிகள்” என்று அழுத்திக் கூறும் போது பாஜகவை எதிர்க்கும் வல்லமை காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்று பிராந்திய கட்சிகளுக்கு சமிக்ஞை அளிப்பது போன்றும், இக்கட்சிகளின் கூட்டணி மாற்று சக்தியாக செயல்படும் என்றும் கூறுவதை உறுதி செய்கிறது. இவரின் இந்த அறிக்கைகள் மாற்றுக் கூட்டணிக்கான அழைப்பாக கூட இது இருக்கலாம். ஆனால் நிச்சயமாக இந்த கூட்டணியின் தலைமையாக காங்கிரஸ் கட்சி இருக்க முடியாது.

2004ம் ஆண்டு பல்வேறு அரசியல் தேவைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. 2008ம் ஆண்டு முக்கிய கூட்டணி கட்சியான இடதுசாரி கட்சிகள் யு.பி.ஏவை கைவிட்டது. சில கூட்டணி கட்சிகளால் பிரச்சனைகள் உருவாகின. 2004 முதல் 2014 கால கட்டத்தில் பல்வேறு தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலையும் உருவானது. 2009ம் ஆண்டு கிடைத்த எதிர்பாராத இரண்டாம் வாய்ப்பைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு இறுதியாக அந்த கூட்டணி பெரும் அழிவை சந்தித்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி எப்படி உருவானது?

2004 மக்களவைத் தேர்தலில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தோல்விக்குப் பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானது. 145 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் அது பாஜகவைக் காட்டிலும் வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே முன்னணி வகித்தது. பாஜகவை ஒதுக்கி வைப்பது மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுக்கு இன்றியமையாததாக மாறியது, மேலும் காங்கிரஸ் இயல்பாகவே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அன்றைய சி.பி.எம் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் இந்த முயற்சிகளுக்கு தலைமை வகித்தார். அவரும் காங்கிரஸும் இறுதியில் 14 கட்சிகளை ஒன்றிணைத்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், திராவிட முன்னேற்றக் கழகம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, லோக் ஜன்சக்தி கட்சி, மதிமுக, ஏ.ஐ.எம்.ஐ.எம்., மக்கள் ஜனநாயக கட்சி (PDP), இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக், இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே), ஆர்.பி.ஐ (ஜி) மற்றும் கேரளா காங்கிரஸ் (ஜோசப்) கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தனர்.

சி.பி.எம்., சி.பி.ஐ., ஆர்.எஸ்.பி., மற்றும் ஃபார்வர்ட் ப்ளாக் ஆகிய நான்கு இடதுசாரி கட்சிகள் கூட்டணிக்கு வெளியே இருந்து, காமன் மினிமம் ப்ரோகிராம் திட்டத்தின் கீழ், ஆதரவு அளித்தன. இது மே 17, 2004 அன்று கையெழுத்தானது. ஆட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாக மாறியது. சமாஜ்வாடி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியை காங்கிரஸ் கூட்டணிக்கு அழைக்கவில்லை. இருந்த போதும் அஜித் சிங் மற்றும் அமர் சிங்கை சுர்ஜீத் தன்னோடு அழைத்துக் கொண்டார்.

‘United Progressive Alliance என்பது கூட்டணியின் பெயருக்கான முதன்மை தேர்வாக இல்லை. ஆரம்ப கட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள், ஐக்கிய மதசார்பற்ற கூட்டணி அல்லது முற்போக்கு மதச்சார்பற்ற கூட்டணி என்று பெயர் வைக்க முடிவு செய்தனர் என்று கூறினார்கள். ஆனால் மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், நாத்திகருமான மு. கருணாநிதி, ”தமிழில் செக்யூலர் என்பதற்கு மதமற்ற என்று பொருளாகிறது. எனவே முற்போக்கு கூட்டணி என்று வைக்கலாம்” என மே 16, 2004ம் ஆண்டு சோனியா காந்தியிடம் கூறினார். அது பிறகு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2004ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி அன்று பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் என்.சி.பியின் தலைவர் ஷரத் பவார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் லாலு பிரசாத், லோக் ஜன்சக்தியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஷிபு சோரன், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் சந்திரசேகர் ராவ், திமுகவின் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

publive-image

இந்த கூட்டணியில் ஏற்பட்ட பின்னடைவுகள் என்ன?

2006ம் ஆண்டு கூட்டணியில் இருந்து வெளியேறிய முதல் கட்சி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகும். தெலுங்கானா மாநில கோரிக்கையை தொடர்ந்து அன்றைய தொழிலாளர் நலன் அமைச்சராக இருந்த சந்திரசேகர் ராவ் மற்றும் அவருடைய கட்சியின் மற்றொரு தலைவர் ஏ. நரேந்திரா ஆகியோர் கூட்டணியில் இருந்து வெளியேறினார்கள்.

Common minimum programme -ல் கூறப்பட்ட எந்த திட்டங்களையும் அரசு நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வைகோவின் மதிமுக கூட்டணியில் இருந்து 2007ம் ஆண்டு வெளியேறியது.

2008ல் இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் வற்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு இடதுசாரி கட்சிகளும் கூட்டணிக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. 2005ஆம் ஆண்டு பிரதமர் சிங்கின் அமெரிக்கப் பயணத்தை அடுத்து, புது டெல்லியும் வாஷிங்டனும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பைப் புதுப்பிக்க முடிவு செய்ததை அடுத்து, இந்த ஒப்பந்தத்தின் மீதான வேறுபாடுகள் முன்னுக்கு வந்தன. அடுத்த மூன்று ஆண்டுகளில், இடதுசாரிகள் வெளியேறும் வரை, அரசாங்கமும் இடதுசாரிகளும் நீடித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் மெஜாரிட்டியை இழந்தது. இருப்பினும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது கொடுத்த ஆதரவால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பிழைத்துக் கொண்டது. இதே சமாஜ்வாடி கட்சியின் தான் யு.பி.ஏ. 2004 உருவாக்கத்தின் போது காங்கிரஸால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது.

அந்தந்த மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகளால் 2009ஆம் ஆண்டில் பி.டி.பி. மற்றும் பாமக கட்சிகள் வெளியேற வழிவகுத்தன. பாமக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. ஜம்மு காஷ்மீரில் பி.டி.பியை விடுத்து, ஆட்சி அமைக்க காங்கிரஸ் தேசிய மாநாட்டுக் கட்சியை தேர்வு செய்த பிறகு கூட்டணியில் இருந்து பி.டி.பி. வெளியேறியது.

மீண்டும் ஆட்சிக்கு வந்த யு.பி.ஏ

2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 206 இடங்களில் வெற்றி பெற்று வியக்கத்தக்க வகையில் மீண்டும் யு.பி.ஏ. ஆட்சிக்கு வந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிகவும் வசதியான நிலையில் இருந்த போதிலும், காங்கிரஸுக்கு கூட்டணி கட்சிகளின் உதவி தேவைப்பட்டது. இப்போது தான் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் கூட்டணிக்குள் வந்தன. மமதாவிற்கு ரயில்வே துறை வழங்கப்பட்டது.

யு.பி.ஏ.-1 -உடன் ஒப்பிடுகையில் கூட்டணியில் இருந்த கட்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. திரிணாமுல் காங்கிரஸ், என்.சி.பி., திமுக, தேசிய மாநாட்டு கட்சி, இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் கட்சிகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியுடன் பொறுப்பேற்றுக் கொண்டன.

இந்த முறை இடதுசாரிகளின் ஆதரவு கூட்டணிக்கு இல்லை. பாஸ்வான் மற்றும் லாலுவும் பீகாரில் தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் போது காங்கிரஸை புறக்கணித்தனர், மேலும் லாலுவின் ஆர்ஜேடியை அரசாங்கத்தில் அங்கம் வகிக்க காங்கிரஸ் அழைக்கவில்லை. எவ்வாறாயினும், RJD அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கியது, சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் ஆதரவை வழங்கின. மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2010ம் ஆண்டு அரசுக்கு அளித்த ஆதரவை லாலு திரும்பப் பெற்றார்.

அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிக்கிம் ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கி வந்த போதிலும் அவர்களுக்கு அமைச்சரவை பதவிகள் ஏதும் வழங்கப்படவில்லை.

மமதா இந்த காலகட்டங்களில் யு.பி.ஏ. 2 கூட்டணிக்கு கட்டளைகளை வழங்கினார். , 2012ஆம் ஆண்டில், தனது கட்சி சகாவான தினேஷ் திரிவேதியை, பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்தியதற்காக, ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு செய்யும்படி கேட்டுக்கொண்டார், மேலும் கட்சியின் எம்பி முகுல் ராயை அவருக்குப் பின் நியமனம் செய்தார். காங்கிரஸ் தலைமைக்கு இணங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.

publive-image

அதே ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக முன்மொழியப்பட்ட ஐ.நாவின் தீர்மானம் குறித்த தங்களின் கருத்துகளை செவிமெடுக்கவில்லை என்று கூறி, இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக விளங்கிய திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. ஐந்து திமுக அமைச்சர்களும் வெளியேறினார்கள். செப்டம்பர் மாதம், திரிணாமுல் காங்கிரஸ் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அமல்படுத்துவதற்கான முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆறு அமைச்சர்களுடன் வெளியேறியது. ஜார்கண்டின் ஜேவிஎம்-பி, இரண்டு எம்.பி.க்களுடன், இதே பிரச்சினையில் தனது ஆதரவை வாபஸ் பெற்றது. AIMIM கட்சியும் அந்த ஆண்டு UPA வில் இருந்து வெளியேறியது.

பலவீனம் அடைந்த கூட்டணி

2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கூட்டணியை இன்னும் UPA என்று குறிப்பிடப்பட்டாலும், உண்மையில் 2014 தேர்தலுக்கு பிறகு UPA இல்லை. எதிர்க்கட்சிகளை ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகள் என்றே காங்கிரஸ் சமீபத்திய நாட்களில் அழைத்து வருகிறது. UPA இல்லை என்று பானர்ஜி சொல்வது ஒரு விதத்தில் சரிதான். அதன் தலைவர்கள் நீண்ட நாட்களாக சந்திக்கவில்லை. தி.மு.க, என்.சி.பி மற்றும் ஜே.எம்.எம் தவிர, இதர கட்சியினருடன் காங்கிரஸின் உறவு இப்போது விரிசல் அடைந்துள்ளன.

காங்கிரஸ் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது, 2019 இல் மற்றொரு தோல்வியால் திணறியது. கடந்த 7 ஆண்டுகளில் பல மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறினார்கள். இது மாநிலங்களில் ஒரு தோல்வியிலிருந்து மற்றொரு தோல்விக்கு தள்ளப்பட்டுள்ளது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள உள் கருத்து வேறுபாடுகள் மற்றும் தலைமைப் பிரச்சினைக்கு தீர்வு காண இயலாமை ஆகியவை சறுக்கலை வலுப்படுத்தியுள்ளன. எதிர்க்கட்சியில் உள்ள பலரும் காங்கிரஸ் ஒரு நிலையில் இல்லை எனவே தேவைப்படும் தலைமையை வழங்க முடியாது என்று கூறுகின்றனர்.

மமதாவின் சவால்

காங்கிரஸ் மற்றும் யு.பி.ஏவி இருக்கும் இதர கட்சிகளுக்கு, திரிணாமுல் காங்கிரஸின் தீவிரமான விரிவாக்கம், மமதாவின் வளர்ந்து வரும் அந்தஸ்த்து மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளை அவர் அணுகும் விதம் ஆகியவை சவாலாக அமைந்துள்ளது.

UPA இல்லை என்று கூறி, பானர்ஜி ஒரு புதிய குழுவிற்கு இது நேரம் என்று பரிந்துரைத்திருக்கலாம், அதில் காங்கிரஸால் தலைவராக இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் ஷரத் மற்றும் மமதா ஒரே பக்கத்தில் இருப்பதைப் போன்று உள்ளது.

எதிர்க்கட்சிக்கு தேவையான தலைமையை வழங்காததால் ஷரத் காங்கிரஸிடம் பொறுமையிழந்து வருவதாக என்சிபி வட்டாரங்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றன. பிராந்திய கட்சிகள் பா.ஜ.க.வுக்கு கடும் போட்டியை கொடுக்க முடியும் என்றும், அதில் அங்கம் வகிக்க விரும்புகிறதா என்பதை காங்கிரஸே தீர்மானிக்கலாம் என்றும் ஷரத் கருதுகிறார் என்று என்.சி.பி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கு ஷரத் பிராந்திய சக்திகளின் மறுசீரமைப்பைத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. மமதாவுடனான சந்திப்பிற்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் வலுவான மாற்று வழியை வழங்க வேண்டும் என்று பவார் கூறினார். பாஜகவை எதிர்க்கும் அனைவரும் எங்களுடன் சேர வரவேற்கிறோம். யாரையும் ஒதுக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸிற்கு அழைப்புவிடப்படுமா என்ற கேள்விக்கு ஷரத் பதில் அளித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Upa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment