Advertisment

“ஃபின்லாந்து” மாதிரியை உக்ரைன் கையாளலாம்! - புதிய ஆலோசனையின் பின்னணி என்ன?

ரஷ்யாவுடன் நல்ல நட்பில் இருக்கும் அதே வேளையில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தன்னுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கிவருகிறது. ஆனால் எந்த நாட்டுடனும் ராணுவ கூட்டணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை தவிர்த்துவிட்டது அந்நாடு.

author-image
WebDesk
New Update
What is ‘Finlandization’, discussed as a possible option for Ukraine

உக்ரைன் மீது ரஷ்யா தன்னுடைய படையெடுப்பை துவங்கி ஒரு மாதமே ஆக இருக்கின்ற நிலையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் தோல்வியில் முடிவடைந்தன. இந்த போருக்கு முடிவு எப்போது வரும் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளாது. உக்ரைன் நேட்டோ படையுடன் இணைவது குறித்து அச்சமடைந்து போரை மேற்கொண்டது ரஷ்யா. இந்நிலையில் வோல்டிமிர் ஜெலென்ஸ்கி கடந்த வாரம், நேட்டோ படையுடன் தற்போது உக்ரைன் இணைவதற்கான சாத்தியக் கூறு இல்லை என்று தெரிவித்தார்.

Advertisment

2014ம் ஆண்டு ரஷ்யா க்ரீமியா தீபகற்பத்தை கைப்பற்றிய போது இருந்த அதே போன்ற ஒரு பதட்டம், தற்போது இரு பக்கமும் அதிகரித்து வருகின்ற நிலையில், ஃபின்லாந்து மாதிரியை கையாண்டால் என்ன? என்று ஒரு கேள்வியை முன்வைத்து தற்போது நமக்கு இருக்கும் தீர்வுகளில் இதுவும் ஒன்று என்று தெரிவுப்படுத்தியுள்ளார் ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன்.

ஆனால் தற்போதைய சூழலில் இது சாத்தியமா என்பது கேள்வி தான். ஏன் என்றால் ஏற்கனவே ரஷ்யா, உக்ரைனின் பாதி பகுதியை சேதப்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புடினை “கொலைக்கார சர்வாதிகாரி”, என்றும் உக்ரைன் மீது போரைத் தொடுத்துள்ள ”குண்டர்” என்றும் குறிப்பிட்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஃபின்லாந்து மாதிரி என்றால் என்ன?

‘Finlandization’ என்று கூறப்படும் இந்த மாதிரி என்பது, பனிப்போர் காலங்களில் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே, ஃபின்லாந்து தொடர்பாக எடுக்கப்பட்ட கொள்கை ரீதியான ஒப்பந்தமாகும். முழுக்க முழுக்க “நடுநிலைத்தன்மையை” ஆதரிக்கும் ஒப்பந்தம் இதுவாகும். இந்த நடுநிலைத்தன்மை நட்பு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி (Finnish “Ystävyys-, yhteistyö- ja avunantosopimus) ஆகியவற்றி அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாரம்சம். இந்த ஒப்பந்தத்தை முன்னால் சோவியத் ஒன்றியத்துடன் ஏற்படுத்திக் கொண்டது ஃபின்லாந்து.

“இறுதியில் பின்லாந்து அல்லது சோவியத் யூனியன் ஃபின்னிஷ் பிரதேசம் வழியாக, ஜெர்மனி அல்லது அதன் கூட்டணி நாடுகள் (அமெரிக்காவை குறிப்பிட்டு) ஏதேனும் தாக்குதலை நடத்தினால் ஃபின்லாந்து ஒரு சுதந்திர நாடாக அதனை எதிர்த்து போராடும்” என்று கூறுகிறது அந்த ஒப்பந்தத்தின் முதல் பகுதி.

இது போன்ற சந்தர்ப்பங்களில் ஃபின்லாந்து தன்னுடைய கடல், வான்வழி மற்றும் தரைவழி ராணுவத்தினரை கொண்டு தன்னுடைய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க போர் புரியும். தேவையின் அடிப்படையில் ரஷ்ய உதவியுடன் போர் புரியும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "(இந்த) சந்தர்ப்பங்களில், சோவியத் யூனியன் பின்லாந்துக்கு தேவைப்படும் உதவியை, ஒப்பந்த நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒப்பந்தத்திற்கு உட்பட்டு வழங்கும்." என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சூழலும் பின்னணியும்

1948ம் ஆண்டு துவங்கி 1992ம் ஆண்டு வரையிலான ஹெல்சின்கி - மாஸ்கோ இடையேயான உறவு இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவானது. ஜுஹோ குஸ்டி பாசிகிவி (1946-56) மற்றும் உர்ஹோ கெக்கோனென் (1956-82) ஆகியோர் அதிபர்களாக இருந்தபோது இது ஃபின்லாந்தின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய ஒன்றாக திகழ்ந்தது. பாசிகிவி-கெக்கோனென் ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இது உலக நாடுகளில் பரவலாக அறியப்பட்ட, வெளியுறவுக் கொள்கை சார், படிப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.

புனித பீட்டர்ஸ்பர்கை ஒட்டிய ஃபின்லாந்து விரிகுடாவின் அருகே தான் ஃபின்லாந்தின் தலைநகரம் ஹெல்சின்கி அமைந்துள்ளது. ஒப்பந்தம் பால்டிக் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சோவியத் ஒன்றியத்தை தாக்குதலில் இருந்து பாதுகாத்தது. பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான மோதலில் இருந்து விலகி, ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவத்தின் பாதையை ஃபின்லாந்து தொடர வழிவகை செய்தது.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே உள்ள பகிரப்பட்ட பொதுவான நலன்கள் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்க, அமெரிக்க முன்னாள் அதிபர் ஹாரி எஸ் ட்ரூமென் ஆட்சியில் பணியாற்றிய வெளியுறவுச் செயலாளர் ஜார்ஜ் சி மார்ஷல் பெயரில் மார்ஷல் ப்ளான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் ஐரோப்பாவை மீட்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த அமைப்பில் ஃபின்லாந்து இணையவில்லை. அதே போன்று சோவியத் மற்றும் மேற்கத்திய நாடுகள் உடன்படாத விவகாரங்களில் நடுநிலைத் தன்மையை கையாண்டது ஃபின்லாந்து. மேலும் அது நேட்டோ மற்றும் ஐரோப்பிய இராணுவ சக்திகளிடமிருந்து ஒதுங்கியே இருந்தது, மேலும் சோவியத் முகாமின் அல்லது வார்சா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மாற மாஸ்கோவின் அழுத்தத்தைத் தடுக்கவும் இதே நிலைப்பாட்டை பயன்படுத்தியது.

உக்ரைன் மற்றும் பின்லாந்துமயமாக்கல்

மார்ச் 2014 இல் தி வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியிடப்பட்ட 'உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, முடிவில் இருந்து தொடங்க வேண்டும் (To settle the Ukraine crisis, start at the end)' என்ற கட்டுரையில், 1973 முதல் 1977 வரை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஹென்றி கிஸ்ஸிங்கர், உக்ரைன் பிழைத்திருக்க வேண்டும் என்றால் அது இருபக்கத்திலும் எதிர்ப்பைக் காட்டாமல், அவ்விரு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர தேவையான நான்கு நடவடிக்கைகளை அவர் பட்டியலுமிட்டார். அவற்றில் மூன்று இன்றைய சூழலுக்கும் சரியாகவே பொருந்தும் ஒன்றாக இருக்கிறது. மேலும் மூன்றாவது ஃபின்லாந்து மாதிரி விருப்பத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறது.

  1. ஐரோப்பா உட்பட அதன் பொருளாதார மற்றும் அரசியல் சங்கங்களை சுதந்திரமாக தேர்வு செய்யும் உரிமை உக்ரைனுக்கு இருக்க வேண்டும்.
  2. உக்ரைன் நேட்டோவில் சேரக்கூடாது.
  3. உக்ரைன் அதன் மக்களின் வெளிப்படுத்தப்பட்ட விருப்பத்துடன் இணக்கமான எந்த அரசாங்கத்தையும் உருவாக்கும் சுதந்திரத்துடன் இருக்க வேண்டும். புத்திசாலித்தனமான உக்ரேனிய தலைவர்கள் தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே நல்லிணக்கக் கொள்கையைத் தேர்ந்தெடுப்பார்கள். சர்வதேச அளவில், அவர்கள் ஃபின்லாந்துடன் ஒப்பிடக்கூடிய நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அந்நாட்டின் சுதந்திரத்தைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. பெரும்பாலான துறைகளில் மேற்கு நாடுகளுடன் ஒத்துழைக்கிறது, ஆனால் ரஷ்யா மீதான விரோதத்தை கவனமாக தவிர்த்து வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார் அவர்.

2014ம் ஆண்டு பனிப்போர் காலத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்த மிக முக்கியமான குரல்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட, 1977 முதல் 1981 வரை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய ப்ர்ஜெஜின்ஸ்கி, DW நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ”நமக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு வேண்டும் என்றால் அது சமரசத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். உக்ரைன் ஒரு ஆக்கபூர்வமான சமரசத்தின் பின்னணியில் அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் ஃபின்லாந்தை பின்பற்றும் ஒரு நாடாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

அந்த நேரத்தில் பைனான்சியல் டைம்ஸில் 'ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கு ஃபின்லாந்துக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் ப்ர்ஜெஜின்ஸ்கி குறிப்பிட்டார். உண்மையிலேயே சுதந்திரமான மற்றும் பிராந்திய ரீதியாக பிரிக்கப்படாத உக்ரைன், இதுகாலம் வரையில் ஃபின்லாந்து எப்படி தன்னுடைய கொள்கை முடிவுகளை பின்பற்றியதோ அதே வடிவில் பின்பற்ற வைக்க தேவையான நடவடிக்கைகளை தன்னுடைய செல்வாக்கின் மூலம் அமெரிக்கா ஏற்படுத்தும் என்பதை தெளிவாக புடினுக்கு அமெரிக்க நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஐரோப்பாவுடன் தன்னுடைய உறவை வலுப்படுத்திக் கொண்டது ஃபின்லாந்து. ரஷ்யாவுடன் நல்ல நட்பில் இருக்கும் அதே வேளையில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தன்னுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கிவருகிறது. ஆனால் எந்த நாட்டுடனும் ராணுவ கூட்டணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை தவிர்த்துவிட்டது அந்நாடு. இன்று நிலவும் உக்ரைன், ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் என்ற சிக்கலில் ஃபின்னிஷ் மாதிரி சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் தன்னுடைய கட்டுரையில் அவர் கூறியிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment