Advertisment

வூஹான் கள நிலவரத்தை வெளியிட்ட செய்தியாளருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல்; யார் இந்த ஜாங்?

கொரோனா காலத்தில் சீனா தான் உலக அளவில் பத்திரிக்கையாளர்களை அதிகமாக சிறையில் அடைக்கும் அரசு என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டது.

author-image
WebDesk
New Update
வூஹான் கள நிலவரத்தை வெளியிட்ட செய்தியாளருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல்; யார் இந்த ஜாங்?

Who is Chinese citizen journalist Zhang Zhan jailed for Covid-19 reporting :  சீனாவின் சிட்டிசன் பத்திரிக்கையாளர் ஜாங் ஜானுக்கு, சர்ச்சையை உருவாக்கியது மற்றும் பிரச்சனைகளை ஏற்படுத்தியது தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கியுள்ளது சீன அரசு.  கொரோனா வைரஸ் வுஹான் மாகாணத்தில் பரவியது குறித்து கள நிலவரங்களை வெளியிட்டு அரசின் எதிர்ப்பை சம்பாதித்த பத்திரிக்கையாளர்களில் ஜாங்கும் ஒருவர்.

Advertisment

ஜாங் ஜான் யார்?

ஷாங்காயை கொண்டு இயங்கிய முன்னாள் வழக்கறிஞர் இவர். கொரோனா வைரஸ் உச்சத்தில் இருக்கும் போது களத்திற்கு சென்று செய்திகளை சேகரித்து பத்திரிக்கையாளர்களில் இவரும் ஒருவர். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் அறிக்கைப்படி, அந்த காலத்தில் சீன அரசு வூஹானில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அதே நேரத்தில் தான் நாடு முழுவதும் இருந்த கடுமையான தணிக்கைகளில் கொஞ்சம் தளர்வுகளும் ஏற்பட்டது.

ஜாங் கைது செய்யப்படுவதற்கு முன்பு அவரின் பேட்டி ஒன்றில், கொரோனா பெருந்தொற்றின் போது அங்கு மக்களின் வாழும் நிலை எப்படி இருந்தது என்று ஒரு பெண் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை பார்த்த பின்பு தான் வூஹான் சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.

வூஹானில் இருக்கும் போது ஜாங் பல்வேறு இடங்களில் இருந்து செய்தி சேகரித்தார். குறிப்பாக மக்கள் அதிகமாக இருந்த மருத்துவமனைகள், பத்திரிக்கையாளர்களின் கைது மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தொடர்பாகவும் அவர் செய்தி வெளியிட்டார் என்று பி.பி.சி. செய்தி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஜாங் சீன அரசின் குறிக்கோள் என்ன? எதன் அடிப்படையில் செயல்படுகிறது என்ற கேள்விகளை எழுப்பினார். லைவாக வீடியோக்களை வெளியிட்டார். அதிகாரிகளிடம் இருந்து வந்த அச்சுறுத்தல்களை தாண்டியும் அவர் செய்திகளை வெளியிட்டார். சமூக வலைதளங்களில் அவருடைய பணிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 2019ம் ஆண்டு ஹாங்காங் சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

அவர் வெளியிட்ட கடசி வீடியோவில், அரசு மாகாணத்தை நிர்வகிக்க அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களையே மேற்கொள்கிறது. உண்மையிலேயே இது தான் இந்நாட்டின் சோகம் என்று அவர் குறிப்பிட்டார்.  பின்பு மே 14ம் தேதி காணாமல் போனார் ஜாங். ஒரு நாள் கழித்து, அவர் ஷாங்காய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க : சவூதியில் 6 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற பெண்ணியவாதி: யார் இவர்?

அவரது வழக்கு விசாரணை

நவம்பர் மாதம் அவர் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது, தவறான தகவல்களை டெக்ஸ்ட் செய்திகள், வீடியோக்களை வீச்சாட், ட்விட்டர் மற்றும் யுட்யூப் வாயிலாக வெளியிட்டார் என்று அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வீச்சாட் சீனாவில் மிகவும் பிரபலமான சாட்டிங் செயலியாகும். யுடியூப் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகளை வி.பி.என். மூலம் பார்வையிட்டுள்ளனர். ஏன் என்றால் இந்த இரண்டு செயலிகளும் தடை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பத்திரிக்கை நிறுவனங்களுக்கு பேட்டியளித்து தவறான தகவல்களை பரப்பினார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்பட்டது. அதிகாரிகள் அவருக்கு 4 முதல் 5 ஆண்டுகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். விசாரணை முழுவதும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே நடத்தப்பட்டது.

தன்னுடைய கைதுக்கு எதிராக சிறையில் சில மாதங்களாக உண்ணாவிரதம் இருந்ததால் தற்போது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவருடைய வழக்கறிஞர்களில் ஒருவர், ஜாங்கிற்கு குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய கைகள் கட்டப்பட்டிருப்பதால் ட்யூபை வெளியே எடுக்க இயலவில்லை என்றும் கூறினார்.

தொற்றுநோய் காலத்தில் ஊடக சுதந்திரம்

நான்கு ஆண்டுகள் தண்டனை தரப்பட்டதிற்கு எதிராக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சீன அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  பி.பி.சியின் படி, வுஹானில் இருந்து செய்திகள் வழங்கிய மற்ற சிட்டிசன் பத்திரிக்கையாளர்கள் லி ஜெஹூவா, சென் க்யூஷி மற்றுன் ஃபங்க் பின் ஆகியோரும் காணாமல் போனார்கள். ஆனால் லி மறுபடியும் வெளியே வந்தார். கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொண்டார். சென் அவருடைய குடும்பத்தினருடன் அரசின் கண்காணிப்பிற்கு கீழ் வசித்து வருவதாக நம்பப்படுகிறது. ஃபங்க் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.

செவ்வாய் கிழமை அன்று, ஜாங்கின் தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் சீனாவின் நீதிமன்ற அமைப்பை கண்டித்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா சீனாவின் மக்கள் குடியரசு ஜாங் ஜானிற்கு தண்டனை அளித்தற்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறது. அவரை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு கொள்கை பிரிவின் செய்தி தொடர்பாளர் பீட்டர் ஸ்டானோ குறிப்பிடுகையில், ஜாங்கினை துன்புறுத்தியுள்ளனர். தடுப்பு காவலின் போது அவரை மோசமாக நடத்தியுள்ளனர். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகி வருகிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

சீனாவில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது இல்லை. கொரோனா குறித்து அரசின் பொறுப்பு என்ன என்று கேள்வி எழுப்பும் நபர்களை சிறையில் அடைப்பதற்காக பெயர் பெற்றது. செய்தியாளர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள கமிட்டி வெளியிட்ட மதிப்பாய்வில் கொரோனா காலத்தில் சீனா தான் உலக அளவில் பத்திரிக்கையாளர்களை அதிகமாக சிறையில் அடைக்கும் அரசு என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment