Advertisment

தடுப்பூசிக்கான காப்புரிமம் நீக்கம்: அமெரிக்காவின் இந்த முடிவு ஏன் மிகவும் முக்கியமானது?

நிர்வாகத்தின் நோக்கம் கூடுமான வரையில் விரைவாக பல மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை வழங்குவதாகும் - அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Why US statement on waiving vaccine patents is important in fight against Covid-19

 Deeptesh Sen

Advertisment

Why US statement on waiving vaccine patents is important in fight against Covid-19 : புதன் கிழமை அன்று பைடன் நிர்வாகம், கொரோனா தடுப்பூசிகள் மீதான அறிவுசார் சொத்துரிமைகளை நீக்கம் செய்வதற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். காப்புரிமை நீக்கம் செய்வதால் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அந்த தடுப்பூசிகள் குறைந்த அளவில் சந்தைக்கு வருவதை உறுதி செய்யும். மேலும் உற்பத்தி திறன் அதிகரிக்கும். எனவே இந்த அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

காப்புரிமையை அகற்றுவதற்கான அதன் நோக்கத்தை சமிக்ஞை வெளியிடும் அதே வேளையில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்ரின் டாய் ஒரு அறிக்கையில், “நிர்வாகம் அறிவுசார் சொத்து உரிமைகளை பாதுகாப்பதை வலுவாக நம்புகிறது, ஆனால் இந்த தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சேவையில், கோவிட் -19 தடுப்பூசிகளுக்கான பாதுகாப்புகளை தள்ளுபடி செய்வதை ஆதரிக்கிறது… நிர்வாகத்தின் நோக்கம் கூடுமான வரையில் விரைவாக பல மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை வழங்குவதாகும்” என்று கூறியிருந்தார்.

உலகளாவிய கொரோனா தொற்று பேரிடரை கருத்தில் கொண்டு, கொரோனா பெருந்தொற்று போன்ற அசாதாரணமான சூழலை கையாள அசாதாரண நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. குறைந்த மற்றும் மத்திய தர வருவாய் ஈட்டும் நாடுகளில், இந்தியா, உலக வர்த்தக அமைப்பிடம், கோவிட் தடுப்பூசிகளுக்கு எதிரான காப்புரிமைகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துவதில் முதல் இடம் பிடித்துள்ளது. மனித உரிமை அமைப்புகளும் உலகளாவிய செயற்பாட்டாளர்களும் இந்த கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வந்தனர். ஆனால் சக்திவாய்ந்த மருந்து நிறுவனங்களின் பரப்புரைகளை எதிர்கொள்வதில் அறிவுசார் சொத்துரிமைகளை அகற்றுவதற்கான முறையீடுகள் இதுவரை தோல்வியுற்றன.

காப்புரிமைகளை நீக்க ஏன் கோரிக்கை எழுகிறது? பைடன் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின் தாக்கம் என்ன? என்பதை விளக்குகிறது இந்த சிறப்பு கட்டுரை.

கொரோனா தடுப்பூசிகள் மீதான காப்புரிமையை நீக்குவது தொடர்பான கோரிக்கை ஏன் முக்கியமானது?

தற்போது, தடுப்பூசிகளை தயாரிக்க மருந்து நிறுவனங்கள் மட்டுமே சொந்தமாக காப்புரிமைகளை வைத்துள்ளது. இந்த காப்புரிமம் நீக்கப்பட்ட பிறகு தடுப்பூசியின் மூலம் மற்றும் தயாரிப்பு குறித்த தரவுகள் பகிரப்படும். அதனால் தடை ஏதும் இருக்காது. அடிப்படையில் ஒரு ஃபார்முலா பகிரப்பட்டால், தடுப்பூசிகளை தயாரிக்க தேவையான அனைத்து தொழில்நுட்ப கட்டமைப்புகளை கொண்ட எந்த ஒரு நிறுவனமும் சொந்தமாக தடுப்பூசிகளை தயாரிக்க முடியும். இது மிகவும் விலைகுறைவான பொதுவான தடுப்பூசி பதிப்புகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக இரண்டு விசயங்கள் இதனால் மாறும். ஒன்று தடுப்பூசி அனைவராலும் வாங்கிக் கொள்ளும் வகையில் மலிவாக கிடைக்கும் மற்றொன்று தடுப்பூசி பற்றாக்குறை குறையும்.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்ற நிலையில் கொரோனா தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று ஒருமித்த குரல் எழுந்து வருகிறது. சமீபத்தில் கொரோனா தடுப்பூசிகள் சமமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. அமெரிக்காவில், மே மாத இறுதிக்குள் 400 மில்லியன் மற்றும் ஜூலை மாத இறுதிக்குள் 600 மில்லியன் ஃபைசர் மற்றும் மொடெர்னா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையிலும் அங்கு பல மில்லியன் அஸ்ட்ரஜென்கா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளாது. இந்த மாத இறுதியில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்காவிற்கு 20 மில்லியன் டோஸ்களை வழங்க உள்ளது. அமெரிக்காவில் 80 மில்லியனுக்கும் அதிகமாக தடுப்பூசிகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் விநியோகத்தில் இருக்கும் சமமற்ற தன்மை வளர்ந்துவரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இடையே ஒரு இடைவெளியை உருவாக்கியுள்ளது. வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே பில்லியன் கணக்கில் தடுப்பூசிகள் ஆர்டர் செய்து பெறப்பட்ட நிலையில் அவர்கள் மக்கள் தொகையில் போதுமான அளவு நபர்கள் மருந்துகளை பெற்றுவிட்டனர். அவர்கள் இயல்பு நிலைக்கு செல்ல தயார் நிலையில் உள்ளனர். ஆனால் ஏழை நாடுகளில் மக்கள் தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் சுகாதார அமைப்புகளுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மக்கள் உயிரிழக்கின்றனர்.

இது உலக நலனுக்கு எதிரானது. தடுப்பூசி நிபுணர்கள், மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ராண்டியர்ஸ் மற்றும் அம்னாஸ்டி இண்டெர்நேசனல் உள்ளிட்ட பல மனித உரிமை குழுக்களும் வளர்ந்து வரும் நாடுகளில் நீண்ட நாட்களுக்கு அவ்வைரஸ் சுழற்சி இருப்பதால் தடுப்பூசிக்கு எதிரான பலமான வைரஸ் எதிர்ப்பு மற்றும் அதிக பிறழ்வுகள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறியுள்ளனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆக்ஸ்பாம் சர்வதேச அறிக்கையில் தி பீப்பிள்ஸ் தடுப்பூசி கூட்டணியால் 28 நாடுகளைச் சேர்ந்த 77 தொற்றுநோயியல் ஆய்வாளர்கள் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் இரண்டு பங்கு பிறழ்வுகள் தற்போதைய COVID தடுப்பூசிகளை ஒரு வருடத்தில் அல்லது அதற்கும் குறைவான காலத்தில் பயனற்றதாக மாற்றக்கூடும் என்று எச்சரித்தது என்று கூறியிருந்தது.

உலகம் முழுவதும் நாம் மக்களுக்கு தடுப்பூசி வழங்கவில்லை என்றால் நாம் நிறைய பிறழ்வு வைரஸ்களை எதிர்கொள்ள நேரிடும். தற்போது உள்ள தடுப்பூசிகளை திறனை அழித்து அவற்றைச் சமாளிக்க பூஸ்டர் ஷாட்கள் தேவைகளை உருவாக்கும். உலகில் உள்ள அனைத்து நபர்களும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசியை பெற வேண்டும் என்று யேல் பல்கலைக்கழக தொற்றுநோயியல் பிரிவு துணை பேராசிரியர் க்ரேக் கோன்ஸல்வேஸ் கூறினார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ், யேல், இம்பீரியல் கல்லூரி, லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் கேப் டவுன் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழத்தில் இருந்து இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற தொற்றுநோயியல் வல்லுநர்கள், வைரலாஜிஸ்ட்டுகள் மற்றும் தொற்று நோய் நிபுணர்கள் பலரும் தொழில்நுட்பம் மற்றும் காப்புரிமைகளை பகிர்வது உலகளாவிய தடுப்பூசி பாதுகாப்பிற்கு வழி வகுக்கும் என்று கூறினார்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவிட் தடுப்பூசிகளின் காப்புரிமையை நீக்க வேண்டும் என்று யார் கோரிக்கை வைக்கின்றனர்?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா தடுப்பூசிகளுக்கான காப்புரிமைகளை கொரோனா காலத்தில் நீக்க வேண்டும் என்றும் ஆஸ்ட்ரெஜெனகா மற்றும் ஃபைசர் நிறுவனத்தின் ஃபார்முலாக்களை பகிர வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அந்த முன்மொழிவில், இப்படி நடந்தால் தடுப்பூசிகள் மலிவாகவும், அதே நேரத்தில் ஏழை நாடுகள் எளிதில் தடுப்பூசிகளை அணுகவும் வழி வகுக்கும் என்று கூறியிருந்தது. இந்த முன்மொழிவை 100க்கும் மேற்பட்ட குறைந்த மற்றும் மத்திய வருமானம் பெரும் நாடுகள் ஆதரித்தன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அதிக வருமானம் பெரும் நாடுகள் இதனை கடுமையாக எதிர்த்தது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் மார்ச் மாதத்தில் தடுப்பூசி காப்புரிமை உரிமைகளை தொற்றுநோய் முடியும் வரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார், உலக வர்த்தக அமைப்பின் சிறப்பு அவசரகால ஏற்பாடுகளில் வழங்கப்பட்டுள்ளபடி, தங்கள் சொந்த தடுப்பூசி திறன் கொண்ட நாடுகள் அறிவுசார் சொத்துரிமைகளை தள்ளுபடி செய்யத் தொடங்க வேண்டும் என்று டெட்ரோஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பரிமாற்ற மையங்களை நிறுவுவதற்கு வசதி செய்ய விரும்புவதாக ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உள்ள அறிவுசார் சொத்து கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடுவது அவசியம் என்று கூறியது. அத்தகைய உரிமைகள் தொழில்நுட்ப மையத்திற்கும் எதிர்கால தொழில்நுட்பத்தைப் பெறுபவர்களுக்கும் கோவக்ஸ் வசதி மூலம் உட்பட எல்.எம்.ஐ.சி.களில் கோவிட் -19 தடுப்பூசியை உற்பத்தி செய்ய, ஏற்றுமதி செய்ய மற்றும் விநியோகிக்க பிரத்யேகமற்ற உரிமங்கள் மூலம் கிடைக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு கூறியது. இருப்பினும் இதுவரை மிகவும் குறைவான அளவிலேயே உரிமையாளர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் குழுக்களும் காப்புரிமையைத் தள்ளுபடி செய்வதற்கும், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தடுப்பூசிகளை எளிதில் கிடைக்கச் செய்வதற்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். உதாரணமாக, ஆஸ்திரேலியாவில், 700 க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் பொது சுகாதார சங்கம் ஆகியோரால் ஆதரிக்கப்பட்ட ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டு அறிவுசார் சொத்துரிமையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

நாடு முழுவதும் உள்ள சுகாதார வல்லுநர்கள், காப்புரிமை தள்ளுபடியை எதிர்க்கும் ஒரு சிறிய குழுவில் ஒன்றான ஆஸ்திரேலிய அரசாங்கத்தை வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்குமாறு வலியுறுத்துகின்றனர் என்று ஆஸ்திரேலிய பொதுசுகாதார சங்கத்தில் இருக்கும் துணை பேராசிரியர் தெபோரா க்லீசன் தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருந்தார்.

கோவிட் தடுப்பூசிகளின் காப்புரிமை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்காவில், செனட்டர்கள், பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, கிட்டத்தட்ட 100 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், 60 முன்னாள் தலைவர்கள், 100 நோபல் பரிசு வென்றவர்கள் மற்றும் 2 மில்லியன் மக்கள் கையெழுத்திட்ட மனுவைக் கொண்டு வந்த இலாப நோக்கற்ற குழுக்கள் அனைவருமே கோரிக்கையை எழுப்பியுள்ளனர். ஆப்பிரிக்காவில் அம்னாஸ்ட்டி இந்தியா மற்றும் க்றிஸ்டியன் எய்டு உள்ள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளில் பொதுவான தடுப்பூசிகள் தயாரிப்பதைத் தடுக்க மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கை மக்களின் சுகாதார உரிமைக்கு எதிரான அவமதிப்பு என்று கூறியுள்ளது.

அரசியல்வாதிகள், சிவில் சமூக உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் தவிர, காப்புரிமைகள் தள்ளுபடி செய்யப்பட்டால் மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய தேவையான உள்கட்டமைப்பு கொண்ட மருந்து நிறுவனங்களும் கோரிக்கையை அதிகரித்து வருகின்றன. பங்களாதேஷ் மருந்து தயாரிப்பாளர் இன்செப்டாவின் தலைமை நிர்வாகி அப்துல் முக்தாதிர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் நோவாவாக்ஸின் நிர்வாகிகளுக்கு தனது நிறுவனத்தின் உதவியை மின்னஞ்சல் செய்திருந்தார், ஆனால் அவர்களிடமிருந்து ஒருபோதும் பதில் வரவில்லை என்று தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஆசியா முழுவதும் விநியோகிக்க ஆண்டுக்கு 600-800 மில்லியன் அளவுகளை உற்பத்தி செய்யும் திறன் இன்செப்டாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு சிறிய கனேடிய மருந்து உற்பத்தியாளரான பயோலிஸ் பார்மா, அதன் கோவிட் தடுப்பூசியை தயாரிக்க அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சனை அணுகியது. ஆண்டுக்கு 20 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பயோலிஸ், கனடாவின் அணுகல் மருந்துகள் ஆட்சியின் கீழ் ஒரு கட்டாய உரிமத்தின் மூலம் தடுப்பூசியை சொந்தமாக தயாரிக்க விரும்பியது, இந்த சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு காப்புரிமை உரிமைகளை தள்ளுபடி செய்ய அவசர ஏற்பாடு உள்ளது . இருப்பினும், ஜான்சன் & ஜான்சன் ஆர்வமாக இல்லை என்று பதில் கூறியுள்ளது. மேலும் தங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட 11 நிறுவனங்களால் மட்டுமே மருந்தினை தயாரிக்க வேண்டும் என்று அது விரும்புவதாகவும் கூறியுள்ளது.

publive-image

காப்புரிமை நீக்கத்திற்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் யார்? ஏன்?

அறிவுசார் சொத்துரிமைகளைத் தள்ளுபடி செய்வது என்பது மனித உரிமைகள் மற்றும் சக்திவாய்ந்த மருந்து நிறுவனங்களின் வணிக நலன்களுக்கு இடையிலான மோதல்களில் ஒன்றாகும். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் அரசாங்கங்கள் காப்புரிமை தள்ளுபடியை கடுமையாக எதிர்க்கின்றன. காப்புரிமையை நீக்குவதால் அவர்களுக்கு ராய்லட்டி கிடைக்காது என்று அர்த்தமில்லை என்று டெட்ரோஸ் கூறிய நிலையிலும் அவர்கள் எதிர்க்கின்றனர்.

புதுமை மற்றும் தடுப்பூசி தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை பிரத்தியேக அறிவுசார் சொத்துரிமைகளைப் பராமரிப்பதைப் பொறுத்தது என்று மருந்துத் துறை வாதிடுகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குச் செல்லும் பணமும் முயற்சியும் காரணமாக அறிவுசார் சொத்துரிமை முக்கியமானது என்று அவர்கள் மேலும் வாதிட்டு வருகின்றனர் - எதிர்காலத்தில் தொற்றுநோய்களின் போது தடுப்பூசி வளர்ச்சியில் பெருமளவில் முதலீடு செய்வதற்கு காப்புரிமையை நீக்குவது பெரும் தடையாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

காப்புரிமையை நீக்குவது தடுப்பூசி உற்பத்திக்கான பாதுகாப்பு மற்றும் தரமான மருந்துகளை கட்டுப்படுத்துவதில் சமரசமாக இருக்கும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்த நடவடிக்கை மருந்து நிறுவனங்களைத் துண்டித்து, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அனுமதிக்கும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். வருடாந்திர விற்பனையில் பில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் தடுப்பூசிகளில் ஏகபோக உரிமை கொண்டாடும் நிறுவனங்கள் பைடன் நிர்வாகம் காப்புரிமையை நீக்க கூடாது என்று வாதாடுகின்றனர்.

அமெரிக்காவின் மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியாளர்கள் அதிபர் ஜோ பைடனுக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், தடுப்பூசிகள் மீதான காப்புரிமையை நீக்குவது தொற்றுநோய்க்கான உலகளாவிய பதிலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும், புதிய மாறுபாடுகளைச் சமாளிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் உட்பட, குழப்பத்தை உருவாக்கும். இது தடுப்பூசி பாதுகாப்பில் பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும், மேலும் தகவல் பகிர்வுக்கு ஒரு தடையை உருவாக்கும். மிக முக்கியமாக, பாதுகாப்புகளை நீக்குவது உற்பத்தியை துரிதப்படுத்தாது என்று கூறியுள்ளனர்.

மார்ச் மாதத்தில், நான்கு குடியரசுக் கட்சி செனட்டர்கள் - மைக் லீ, டாம் காட்டன், ஜோனி எர்ன்ஸ்ட் மற்றும் டோட் யங் - ஜனாதிபதி பைடனுக்கு கடிதம் எழுதினர், கோவிட் தடுப்பூசிகளின் காப்புரிமையை தள்ளுபடி செய்வதற்கான திட்டத்தை ஏற்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். "அறிவுசார் சொத்துக்களுக்கான அனைத்து உரிமைகளையும் தள்ளுபடி செய்வது வைரஸில் உள்ள மாறுபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய தடுப்பூசிகள் அல்லது பூஸ்டர்களின் வளர்ச்சியை நிறுத்திவிடும் … தள்ளுபடி தற்காலிகமாக ஒரு சில நகலெடுப்புகள் அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கியதை உற்பத்தி செய்ய முயற்சித்தாலும், முக்கிய தரக் கட்டுப்பாட்டு சிக்கல்கள் எழக்கூடும் என்று அவர்கள் கடிதத்தில் எழுதினர்.

இந்த ஆண்டு தனது தடுப்பூசி 18.5 பில்லியன் டாலர்களை நிறுவனத்திற்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிப்ரவரி மாதம் மாடர்னா கூறினார். கன்சர்வேடிவ் மதிப்பீடுகள் விற்பனையிலிருந்து 15 பில்லியன் டாலர்களை பெறும் என்று ஃபைசர் கூறியுள்ளது. தங்கள் இலாப வரம்புகள் மற்றும் ஏகபோகத்தை இழக்கும் வாய்ப்பை எதிர்கொண்டுள்ள மருந்து நிறுவனங்கள், உலக வர்த்தக அமைப்பில் காப்புரிமை தள்ளுபடி செய்வதற்கான இந்தியாவின் உந்துதலைத் தடுக்க அமெரிக்க நிர்வாகத்தை வற்புறுத்துகின்றன. அமெரிக்க வர்த்தக சபை, வணிக வட்டவடிவம் மற்றும் சர்வதேச அறிவுசார் சொத்து கூட்டணி - இவை அனைத்தும் மருந்து நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெறுகின்றன - இந்த நடவடிக்கையை எதிர்ப்பதற்காக பரப்புரைகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

பைடன் அறிக்கை இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

தடுப்பூசி காப்புரிமை விவாதத்தில் நிர்வாக அதிகாரிகள் முக்கியமான பங்குதாரர்களை சந்தித்ததை அடுத்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்ரின் டை புதன்கிழமை அறிவித்தார். பைடன், தனது பிரச்சார உறுதிமொழிக்கு ஏற்ப, காப்புரிமை தள்ளுபடிக்கு ஆதரவளித்துள்ளார்.இருப்பினும், இந்த அறிவிப்பு காப்புரிமை விதிகள் இப்போதே தள்ளுபடி செய்யப்படும் என்று அர்த்தமல்ல. உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் இந்த முடிவை எடுக்க வேண்டும்.

இன்று உலகம் எதிர்கொள்ளும் தடுப்பூசி பற்றாக்குறையின் பிரச்சினையின் ஒரு பகுதியாக அறிவுசார் சொத்துரிமை உள்ளது என்பதை வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ரான் க்ளெய்ன் ஒப்புக் கொண்டுள்ளார். காப்புரிமைகள் இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்டால், அது நிச்சயமாக உலகெங்கிலும் தடுப்பூசி அளவையும் வேகத்தையும் அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு உலக வர்த்தக அமைப்பில் இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறையைத் தடுப்பதிலும், நாடு இப்போது காணும் அன்றாட இறப்புகளின் எண்ணிக்கையைத் தடுப்பதிலும் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்திருக்க முடியும்.

பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் மருத்துவர் கே.வி விஜயராகவன் புதன்கிழமை தொற்றுநோயின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று கூறினார். பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் மற்றும் மலிவு விலையில் தடுப்பூசிகளை எளிதில் அணுகக்கூடியது ஆகியவை தான் எதிர்வரும் அலையை சமாளிக்க உதவும் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Covid 19 Vaccine Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment