FIFA World Cup 2018: 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையில் அடியெடுத்து வைக்கும் எகிப்து!

FIFA World Cup Foot Ball 2018: எகிப்து கால்பந்து அணியைப் பற்றிய முழு அலசல்

ஆசைத் தம்பி

FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இன்று ஜூன் 14ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதிச் சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.

உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் மாஸ்கோ லூஸ்னிக்கி, ஸ்பார்டக், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம், சமரா கோஸ்மோஸ், ரோஸ்டவ், நிஷ்னி நோவ்கோரோட், சரன்ஸ்க், யெகாடெரின்பர்க், கலினின்கிராட், வோல்கோகிராட், கசான் ஆகிய 12 மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் லூஸ்னிக்கி, யெகாடெரின்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம் ஆகிய மைதானங்கள் புனரமைக்கப்பட்டவையாகும். மற்ற 9 மைதானங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளன.

உலகக் கோப்பைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘லிவ் இட் அப்’ எனத் துவங்கும் உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ தீம் பாடலை கடந்த வாரம் நிக்கி ஜாம், வில ஸ்மித் மற்றும் இரா எஸ்ட்ரெபி ஆகியோர் பாடி வெளியிட்டனர். இந்த 3 பாடகர்களின் கலக்கல் இசையுடன் வெளியான அந்த பாடலில் 2002ன் கால்பந்து சூப்பர் ஸ்டாரான ரொனால்டினோவும் இடம் பெற்றிருந்தார். யூ டியூபில் மாஸ் ஹிட் அடித்த இப்பாடல் தான், இன்று முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ரிங்டோனாக உள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் தொடங்கியிருக்கும் இந்த தொடரில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். அதன்படி, இன்று எகிப்து அணியைப் பற்றி பார்க்கலாம்.

1921ம் ஆண்டு எகிப்து கால்பந்து சம்மேளனம் உருவாக்கப்பட்டது. ஆப்பிரிக்க கண்டத்தில் வெற்றிகரமான கால்பந்து அணியாக எகிப்து வலம் வருகிறது. ‘Africa Cup of Nations’ தொடரை ஏழு முறை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த தொடர் முதன் முதலாக 1957ம் ஆண்டு தொடங்கப்பட்ட போதும், 1959ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த தொடரின் போதும், 1986, 1998, 2006, 2008 மற்றும் 2010 தொடர் என ஏழு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஃபிபாவின் கால்பந்து தரவரிசையில் 9ம் இடம் பிடித்ததே, எகிப்து அணியின் மிகச் சிறந்த தரநிலையாகும். ஃபிபா தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த ஆப்பிரிக்க கண்டத்தின் மூன்று அணிகளுள் எகிப்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்க கண்டத்தில் ராஜாங்கம் நடத்தினாலும், உலகக் கோப்பையை பொறுத்தவரை 1934 மற்றும் 1990ல் நடந்த இரு உலகக் கோப்பை தொடருக்கு மட்டும் இதுவரை எகிப்து தகுதிப் பெற்றது. அவ்விரு தொடரிலும், எகிப்து கோப்பையை வெல்லவில்லை. அதன்பிறகு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் எகிப்து அணி உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுள்ளது.

உலகக் கோப்பை 2018ல் பங்குபெறும் எகிப்து அணி வீரர்கள் விவரம்,

கோல் கீப்பர்:

எஸ்ஸாம் எல் ஹடாரி (கேப்டன்), ஷெரிஃப் எக்ராமி, மொஹம்மத் எல் ஷெனாவி

டிஃபென்டர்:

அலி கேபர், அஹ்மத் எல்மொஹமதி, ஒமர் கேபர், அஹ்மத் ஹெகாசி, அஹ்மத் ஃபாதி, அய்மன் அஷ்ரஃப், மொஹமத் அப்தெல் ஷஃபி.

மிட் ஃபீல்டர்:

சாம் மோர்ஸி, டரக் ஹமேத், ரமடான் ஷோபி, மொஹம்மத் எல்நெனி, ஷிகாபலா, அப்தல்லா சயத், ட்ரெஸ்கிட், அமர் வர்டா.

ஃபார்வேர்ட்ஸ்:

மர்வான் மோசென், மொஹமத் சாலா, கராபா.

தலைமை பயிற்சியாளர் – ஹெக்டர் குபெர்

துணை பயிற்சியாளர் – ஒசாமா நபியே

முதல் துணை பயிற்சியாளர் – ஜோஸ் ஃபேண்டாகுசி

கோல் கீப்பிங் பயிற்சியாளர் – அஹ்மத் நெகி

அணி இயக்குனர் – எஹாப் லெஹேதா

அனலிஸ்ட் மற்றும் துணை பயிற்சியாளர் – மஹ்மௌத் ஃபயஸ்

உடற்தகுதி பயிற்சியாளர் – ஆண்டோனியோ சரியோக்லோ

குரூப் Aல் இடம் பெற்றுள்ள எகிப்து அணி, தனது குரூப்பில் ரஷ்யா, சவுதி அரேபியா, உருகுவே அணிகளுடன் மோதுகின்றது.

எகிப்து விளையாடும் போட்டிகள் நடைபெறும் நாள்:

ஜூன் 15 – எகிப்து vs உருகுவே

ஜூன் 19 – ரஷ்யா vs எகிப்து

ஜூன் 25 – சவுதி அரேபியா vs எகிப்து

எகிப்து அணியின் தற்போதைய ஃபார்ம் எப்படி?

கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் எகிப்து அணி எட்டு போட்டிகளில் ஆடியுள்ளது. இதில் மூன்றில் மட்டும் வெற்றிப் பெற்றுள்ளது. இரண்டு போட்டியை டிரா செய்துள்ளது. இந்தாண்டு, 2018ல் இதுவரை ஐந்து ஆட்டங்களில் ஆடியுள்ள எகிப்து, ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை. உலகக் கோப்பைக்கு தயாராகும் விதத்தில் பயிற்சிப் போட்டிகளில் ஆடிய எகிப்து தோல்வியையே தழுவியுள்ளது.

எனினும், குரூப்-Aல் எகிப்து இடம்பெற்றுள்ளதால், அதில் இருக்கும் மற்ற அணிகளான ரஷ்யா, சவுதி அரேபியா அணிகளை எகிப்து எளிதில் சமாளிக்கும் என்றே கருதப்படுகிறது. ஏனெனில், ரஷ்யா மற்றும் சவுதி ஆகிய இரண்டு அணியுமே தற்போது மோசமான ஃபார்மில் தான் உள்ளன. உருகுவே அணி, எகிப்துக்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எகிப்து அணியின் நட்சத்திர வீரர் மொஹமத் சாலா. அவரின் அதிரடி கோல்களை நம்பியே எகிப்து களமிறங்குகிறது எனலாம். ரொனால்டோ, நெய்மர், மெஸ்ஸிக்கு பிறகு அற்புதமான ஃபார்மில் இருக்கும் வீரர் சாலா தான். அவர் சிறப்பாக ஆடும் பட்சத்தில், எகிப்து அணி அதிகபட்சம் காலிறுதி வரை செல்ல அதிக வாய்ப்புள்ளது என்பதே வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.

இறுதியாக, எகிப்து கேப்டன் எஸ்ஸாம் எல் ஹடாரி பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும். நாளை (ஜூன் 15) உருகுவே அணிக்கு எதிராக எகிப்து அணி முதல் போட்டியில் ஆடும்போது, கேப்டன் எஸ்ஸாம் எல் ஹடாரி ஆடும் பட்சத்தில், உலகக் கோப்பையில் ஆடிய மிக வயதான கால்பந்து வீரர் எனும் பெருமையை இவர் பெறுவார். ஏனெனில், இவரது வயது 45. இதற்குமுன், உலகக்கோப்பை வரலாற்றில் 43 வயதில் ஆடிய ஃபாரிட் மொண்ட்ராகன் சாதனையை கேப்டன் எஸ்ஸாம் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close