Advertisment

FIFA World cup 2018: விமர்சனங்களை வெல்லுமா ஜப்பான் கால்பந்து அணி?

ஆசிய கண்டத்தின் வெற்றிகரமான கால்பந்து அணியாக வலம் வரும் ஜப்பான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FIFA World cup 2018: விமர்சனங்களை வெல்லுமா ஜப்பான் கால்பந்து அணி?

FIFA World cup 2018: Japan Football team

ஆசைத் தம்பி

Advertisment

FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 14ம் தேதி ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க போட்டியில் ரஷ்ய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அணியை வென்றது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களம் இறங்கியுள்ளன.

முதன் முதலாக இந்தியாவில் பல மொழிகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்தியாவில் சோனி நிறுவனம் போட்டிகளை ஒளிபரப்பு செய்கிறது. Football Extraaa, the pre, mid & post-match ஷோ என அனைத்தும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகிறது. இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி மற்றும் முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பைசுங் பூட்டியா ஆகிய இருவரும் இருமொழிகளில் உள்ள பேனல்களில் இடம் பெற்று போட்டிகள் குறித்து விவாதித்து வருகின்றனர்.

இவர்களைத் தவிர, சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர்கள் லூயிஸ் கார்சியா, முன்னாள் மான்செஸ்டர் யுனைட்டட் ஃபார்வேர்ட் வீரர் லூயிஸ் சாஹா, முன்னாள் இங்கிலாந்து கோல் கீப்பர் டேவிட் ஜேம்ஸ் ஆகியோரும் இந்த ஷோக்களில் பங்கேற்று வருகின்றனர். ‘Greatest show on earth’ எனும் பெயரில் நடக்கும் ஷோவில், ஆஷ்லே வெஸ்ட்வுட், குர்ப்ரீத் சிங், ராபின் சிங் மற்றும் நோவி கபாடியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகள் குறித்து விரிவாக அலசி ஆராய்கிறார்கள்.

இப்படி உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் தொடங்கி இருக்கும் இந்த தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். அதன்படி, இன்று ஆசிய அணியான ஜப்பான் அணியைப் பற்றி பார்க்கலாம்.

ஆசிய கண்டத்தின் வெற்றிகரமான கால்பந்து அணியாக வலம் வருவது ஜப்பான் அணி தான். தொடர்ச்சியாக கடந்த ஆறு முறை ஃபிபா உலகக் கோப்பைக்கு ஜப்பான் தகுதிப் பெற்றுள்ளது. அதில் குறிப்பாக, 2002 மற்றும் 2010ல் நடந்த உலகக் கோப்பைத் தொடரில், அடுத்த சுற்றுக்கு ஜப்பான் முன்னேறி இருந்தது.

AFC ஆசிய கோப்பையை நான்கு முறை வென்றுள்ளது. 1992, 2000, 2004 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் நடந்த AFC ஆசிய கோப்பை தொடர்களை ஜப்பான் கைப்பற்றியது. அதுமட்டுமின்றி, கடந்த 2001ம் ஆண்டு நடந்த ஃபிபா கான்ஃபிடரேஷன்ஸ் கோப்பை தொடரில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியது. ஜப்பான் கால்பந்து வரலாற்றிலேயே இது மிகச் சிறந்த செயல்பாடாக பார்க்கப்படுகிறது. தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கால்பந்து போட்டிகளில் ஜப்பானின் போட்டியாளராக கருதப்படுகிறது.

அமெரிக்காவின் பிரபல கால்பந்து தொடரான கோபா அமெரிக்காவில் பங்கேற்க ஜப்பான் அணிக்கு 1999 மற்றும் 2011 என இருமுறை அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், 2011 அழைப்பை ஜப்பான் ஏற்றுக் கொண்டு கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அதே ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணத்தால் கோபா அமெரிக்கா தொடரில் ஜப்பான் பங்கேற்கவில்லை.

கடந்த 2010 உலகக் கோப்பையில் 9வது இடம் பிடித்த ஜப்பான், 2014 உலகக் கோப்பையில் 29வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இருப்பினும், நடப்பு 2018 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற ஜப்பான் அணி, தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முனைப்போடு உள்ளனர்.

உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள ஜப்பான் அணி வீரர்கள் விவரம்,

கோல் கீப்பர்கள்:

எய்ஜி கவாஷிமா, மசாகி ஹிகாஷிகுச்சி, கொசுக்கே நகமுரா

டிஃபென்டர்:

நாவ்மிச்சி எடா, ஜென் ஷோஜி, யுடோ நாகடோமோ, வட்டாரு எண்டோ, ஹிரோகி சகாய், டொமோகி மகினோ, கோட்டுகு சகாய், மாயா யோஷிதா.

மிட்ஃபீல்டர்:

கெய்சுகே ஹோண்டா, ககு ஷிபாசகி, ஜென்கி ஹரகுச்சி, ஷின்ஜி ககவா, டகாஷி உசாமி, டகாஷி இனுய், ஹொடாரு யாமகுச்சி, மகோடோ ஹசேபே (கேப்டன்), ரியோடா ஹோஷிமா.

ஃபார்வேர்ட்ஸ்:

ஷின்ஜி ஒகாசாகி, யோஷினோரி முடோ, யுஜா ஒசாகா

தலைமை பயிற்சியாளர் - அகிரா நிஷினோ

2018ல் ஜப்பான் செயல்பாடுகள் எப்படி?

இந்தாண்டு இதுவரை ஐந்து போட்டிகளில் ஜப்பான் ஆடியுள்ளது. அதில், மாலி அணிக்கு எதிராக 1-1 என டிரா செய்த ஜப்பான், உக்ரைன் அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. தொடர்ந்து கானா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளிடம் 2-0 என தோல்வியை சந்தித்த ஜப்பான், கடைசியாக விளையாடிய பராகுவே அணியை மட்டும் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.

உலகக் கோப்பையில் 'H' பிரிவில் இடம்பெற்றுள்ள ஜப்பான், அணி ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என்றே வல்லுனர்களால் கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், சக அணிகளான போலந்து, கொலம்பியா அணிகளை ஜப்பான் வீழ்த்துவது மிகக் கடினம் என்றே கூற முடியும். அதுமட்டுமின்றி, ஜப்பான் அணியின் சமீபத்திய போட்டிகளின் முடிவுகளும் அந்த அணிக்கு சாதகமாக இல்லை. அவர்களது தற்போதைய ஃபார்ம் என்பது, உலகக் கோப்பையில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் அளவிற்கு இருக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

ஷின்ஜி ககவா அந்த அணியின் நட்சத்திர வீரர் ஆவார். நடுகள வீரரான அவர் 89 சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் பெற்றவர். இது தவிர மாயா யோஷிதா, ஒகாஸ்கி போன்ற முன்னணி வீரர்களும் ஜப்பான் அணியில் உள்ளனர். இவர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், ஏதாவது ஆச்சர்ய திருப்பங்கள் ஏற்படுகிறதா என்று பார்க்கலாம்.

Fifa World Cup Fifa 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment