முட்டையில் பலவித ரெசிபி செய்யலாம். முட்டை அவித்து சாப்பிடுவது, ஆம்லெட், குழம்பு வைத்து சாப்பிடுவது எனப் பல விதமாக செய்து சாப்பிடலாம். முட்டையில் சத்து நிறைந்துள்ளது. அந்த வகையில் புதுமையாக இந்த வகையில் முட்டை மசாலா தோசை செய்து சாப்பிடுங்க. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு – 1 கப்
முட்டை – 4
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கடுகு – அரை ஸ்பூன்
மிளகு தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தனியா தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
கரம் மசாலா- அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லித்தழை – கையளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு மசிந்த பிறகு , மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகிய மசாலாக்களை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும் .
இப்போது முட்டையை ஊற்றி உப்பு, மிளகுத் தூள் சேர்த்து முட்டை நன்றாக உதிர்ந்து வரும் வரை கிளறி விட வேண்டும். அவ்வளவு தான் மசால் ரெடி. இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து தோசை மாவை ஊற்றி அதன் மேல் முட்டை மசாலாவை பரப்பி விட வேண்டும். சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் நன்கு வேக விடவும். மேலே கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவை நிறைந்த முட்டை மசாலா தோசை ரெடி. ஒன்று சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“