Does eating garlic lower cholesterol levels | பூண்டு சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறதா | உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளுக்கு கொலஸ்ட்ரால் அவசியம். உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலைத் தயாரிப்பது கல்லீரல். நாம் உண்ணும் உணவில் இருந்தும் கொலஸ்ட்ரால் கிடைக்கிறது. கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் (HDL), கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) என இரு வகைகள் உள்ளன.
நம் உடலில் எப்போதும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருக்க வேண்டும். புகை பிடித்தலைத் தவிர்த்தல், உடல் எடையைக் குறைத்தல், ஒமேகா 3-யை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் நல்ல கொழுப்பை உயர்த்தலாம்.
கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்
பூண்டு
பழங்காலத்திலிருந்தே சமையலில் இடம்பெற்று வரும் பூண்டுக்கு மருத்துவக்குணம் அதிகம். பூண்டு ஒரு கிருமிநாசினி. தினமும் இரண்டு பூண்டுப் பல் சாப்பிட்டுவந்தால், உடலில் வளர்சிதை மாற்றம் சீராக நடக்கும். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு கரைந்து, உடல் எடை குறையும். ரத்தம் சுத்திகரிக்கப்படும்
பூண்டில், அலிசின் என்னும், இதயத்தைப் பாதுகாக்கும் காம்பவுண்டு அதிகம். இதில் நோயை எதிர்க்கும் சக்தி அதிகம் இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவை வேகமாகக் குறைக்க உதவும். தினமும் காலையில் ஒரு பூண்டைச் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
5-8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும்.
வெண்டைக்காய்
வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க உதவும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். தொடர்ந்து சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் அளவும் கட்டுக்குள் இருக்கும்.
பசலைக் கீரை
பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம். இந்தச் சத்துக்கள் இதய ரத்த நாளங்களில் தங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் தன்மை கொண்டவை. பசலைக் கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இதுதவிர கத்தரிக்காய், மீன், ஆப்பிள், நட்ஸ், வெங்காயம், ஓட்ஸ், சிட்ரஸ் பழங்கள், தேன் போன்ற உணவுகள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“