வெயில் காலம் என்பதால், நாம் வீட்டில் ஆட்டும் இட்லி மாவை ஃபிரிட்ஜில் வைத்திருந்தாலும் கூட 1 அல்லது 2 நாள்களில், மாவு புளித்து வருகிறது. அதனை தடுத்திட, மாவு அரைக்கும் போதே சில விஷயங்களை செய்தால் போதும் என கூறப்படுகிறது. அதனை விரிவாக இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
மாவு அரைக்க இட்லி அரிசியை தண்ணீரில் போட்டு ஊற வைக்கும்போது, 3 லிருந்து 4 மணி நேரம் வரை மட்டுமே ஊற வைக்க வேண்டுமாம். அதற்கு மாறாக சிலர், இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு, காலையில் மாவை அரைக்கிறார்கள். இப்படி செய்யும் போது, மாவு விரைவாக புளித்துவிட அதிக வாய்ப்புள்ளது.
அதேபோல், ஊளுந்தை இட்லிக்கு ஊற வைக்கும்போது 1 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். நீண்ட நேரம் ஊற வைத்தால், உளுந்தை ஆட்டி எடுக்கும் போது உபரியாக பொங்கி வராது. சீக்கிரம் புளித்துவிடவும் அதிக வாய்ப்பிருக்கிறது.
நீண்ட நேரம் ஆட்டக்கூடாது
பின்னர், கிரைண்டரில் உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாகத்தான் போட்டு தான் அரைக்க வேண்டும்.
அதன்படி, உளுந்தையும் வெந்தயத்தையும் கிரைண்டரில் போடும் போது, நீண்ட நேரம் ஆட்டக்கூடாது. 20 லிருந்து 25 நிமிடத்திற்குள் உளுந்து புசுபுசுவென பொங்கி அறைந்து கிடைத்துவிடும். இதேபோலத்தான் அரிசியையும் நீண்ட நேரம் கிரைண்டரில் ஓட விடக்கூடாது.
ஐஸ் வாட்டர் உபயோகிக்க வேண்டும்
மேலும், அரிசி உளுந்து இரண்டு பொருட்களையும் அரைக்கும்போது ஐஸ் வாட்டரை ஊற்றி அரைப்பது சிறந்த சாய்ஸ் ஆகும். ஏனெனில், கிரைண்டர் மோட்டார் சூடாகும் போது, மாவும் சூடாகும். இது, மாவு சீக்கிரம் புளித்த போக வழிவகுக்ககும்.
மாவில் கைப்படக் கூடாது
முக்கியமாக, உளுந்து அரிசி மாவு இரண்டையும் தனி டப்பாவில் மாற்றும் போது, கை படாமல் பார்த்துகொள்ள வேண்டும். இரண்டு மாவையும் கையை போட்டு கரைக்க வேண்டாம். அதற்கு மாறாக, கரண்டியை உபயோகித்து நன்கு கலக்கி, உப்பு போடாமல் மூடி வைத்துவிட்டால் குறைவாகவே மாவு புளித்து வரும். ஏனெனில், கையைப் போட்டு கரைக்கும் போது, கை சூடு பட்டு மாவு சீக்கிரம் புளித்து வந்துவிடும்.
ஓரளவுக்கு புளித்த மாவை தேவைக்கு ஏற்ப மட்டும் வெளியில் வைத்து உப்பு போட்டு கரைத்து சமைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். மீதியுள்ள மாவை உப்பு போடாமல் மூடி அப்படியே பிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.
இந்த செயல்முறையை பின்பற்றினால் 7 நாட்கள் ஆனாலும் மாவு புளித்துப் போகாமல் அப்படியே நன்றாக இருக்கும். தினமும் இட்லி தோசையை விருப்பமாக சாப்பிடுபவர்களுக்கு இந்த குறிப்பு உபயோகமானதாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil