பொதுவாகவே கீரை வகைகள் உடல் நலத்திற்கு சிறந்தது. நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கீரைகள் பல வகைகள் உள்ளன. அதில் சூப், பொறியல் எனப் பல வகையாக செய்து சாப்பிடலாம். இதில் பாலக்கீரையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இரும்புச்சத்து நிறைந்துள்ளது. ரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு உகந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்தவகையில் பாலக்கீரையில் சாம்பார் செய்வது குறித்துப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாலக் கீரை – 1 கட்டு
வேகவைத்த துவரம் பருப்பு – 1 கப்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
சாம்பார் பொடி – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
புளி – சிறிதளவு
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், எண்ணெய்
செய்முறை
முதலில் கீரை கட்டைப் பிரித்து தண்ணீரில் கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் சிறிது ஊற்றி கீரையை போட்டு அதனுடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
அடுத்தாக கீரை, தக்காளி வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி அதை மத்தால் மசித்து கொள்ளவும். பிறகு மீண்டும் அடுப்பில் வைத்து மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்க்கவும். புளி கரைசல், வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து கலக்கவும். உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். 5 நிமிடம் வேக விட்டு அடுப்பை நிறுத்தவும்.
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து கீரை குழம்பில் கொட்டி கொத்தமல்லி இலையை தூவி விடவும். அவ்வளவு தான் சுவையான பாலக்கீரை சாம்பார் ரெடி. சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/