மழைக் காலத்தில் வீட்டில் இருக்கும்போது ஏதாவது சூடாக சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்காக அரிசி,பொட்டுக்கடலை மாவில், சுடச்சுட போண்டா இப்படி செய்து சாப்பிடுங்கள். மழை நேரத்திற்கு இதுதான் பெஸ்ட்டாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
ஒரு கிளாஸ் அரிசி மாவு.
அரை கிளாஸ் பொட்டுக்கடலை மாவு.
சிறிது அளவு இட்லி சோடா மாவு.
நெய் 3 ஸ்பூன்
சிறிது அளவு பெருங்காயம்
தேவையான அளவு உப்பு
சிறிது அளவு வரமிளகாய் தூள்
சிறிது அளவு மஞ்சள் தூள்
சிறிது அளவு இஞ்சி, பூண்டு, சோம்பு மூன்றையும் சேர்த்து தட்டிவைத்துக்கொள்ளுங்கள்.
கொத்தமல்லி நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
1 பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
1 கொத்து கறிவேப்பிலை
2 பெரிய வெங்காயம் மிதமாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 2 ஸ்பூன் நெய் விட்டுக்கொள்ளுங்கள். அதில் சிறிது அளவு இட்லிக்கு போடும் சோடா மாவு சேர்த்து கலந்துவிடுங்கள். அடுத்து, வெங்காயம் போட்டு பிசையுங்கள். பிறகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு பிசையுங்கள். அரிசி மாவு 1 கிளாஸ், பொட்டுக் கடலை மாவு அரை கிளாஸ் சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து தேவையான அளவு உப்பு, சிறிது அளவு வரமிளகாய் தூள், சிறிது அளவு மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறிது அளவு பெருங்காயம் போட்டு மாவு பிசையுங்கள். கடைசியாக தட்டி வைத்த இஞ்சி, பூண்டு, சோம்பு மூன்றையும் சிறிது அளவு சேர்த்து பிசையுங்கள். மாவு போண்டாவுக்கான பதத்தில் பிசையுங்கள்.
பின்னர், ஸ்டவ்வை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய வையுங்கள். அடுத்து, பிசைந்து வைத்துள்ள மாவை அளவாக உருட்டி எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான போண்டா ரெடி. அவ்வளவுதாங்க, மழை நேரத்துக்கு சாப்பிட சுடச்சுட போண்டா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“