உளுந்தில் நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது வளர் இளம் பெண்களுக்கு ஏற்ற உணவாகும். இதை களி செய்து உண்பதால் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.
இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது.
அரிசி மற்றும் உளுந்து கொண்டு செய்யப்படும் உளுத்தம் சோறு தமிழகத்தின் பராம்பரிய உணவு. இன்றும் பல கிராமங்களில் உளுத்தம் சோறு மக்களின் விருப்பமான உணவாக உள்ளது.
பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உளுந்து சோறு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி – ¾ கப்,
முழு கருப்பு உளுந்து- ½ கப்,
பூண்டு – 8 பற்கள்,
சுக்கு – பொடி செய்தது 1 தேக்கரண்டி,
தேங்காய் – ½ கப் துருவியது,
பனை வெல்லம் -2 தேக்கரண்டி,
உப்பு- சுவைக்கேற்ப
எப்படி செய்வது?
முதலில் அரிசி மற்றும் உளுந்தை நன்கு கழுவுங்கள், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் சூடானதும் அதில் ஏற்கெனவே கழுவி வைத்திருக்கும் அரிசி மற்றும் உளுந்தை அதில் சேர்க்கவும். அதனுடன் தேங்காய் துருவல், பூண்டு, பனை வெல்லம், சுக்கு பொடி, உப்பு சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.
இப்போது பாத்திரத்தை மூடியால் மூடி, அரிசி மற்றும் உளுந்து நன்கு வேகும் வரை சமைக்கவும். இதற்கு குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் ஆகும்.
இப்போது சுடச் சுட உளுந்து சோறு பரிமாற ரெடியாக இருக்கும்.
உளுந்து சோறுக்கு மட்டன் குழம்பு, முட்டை குழம்புடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காய் துவையலும் உளுந்து சோறுக்கு சரியான காம்பினேஷாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“