மும்பையில் தன்னைப் பார்த்து முறைத்ததாக கூறி, இளைஞர் ஒருவர் 24 வயது பெண் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மஹராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள தஹிசார் பகுதியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் மீது, அதே பகுதியை சேர்ந்த ஹேமந்த் தேவ்குலே (வயது 25) என்பவர் கடந்த வியாழக்கிழமை இரவு 10.45 மணியளவில் பொது கழிப்பிடம் அருகே இருந்த ஆசிட்டை அப்பெண்ணின் மீது ஊற்றினார். இதில், அப்பெண்ணின் முகம் மற்றும் பின்புற பகுதிகளில் பலத்த ஆசிட் காயம் ஏற்பட்டது. அப்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று, அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த காவல் துறையினர் ஹேமந்த் தேவ்குலேவை கைது செய்தனர்.
அப்பெண் தன்னை வெறுப்புடனும் கோபத்துடனும் தினமும் முறைத்ததால், அவர் மீது ஆசிட் வீசியதாக, கைது செய்யப்பட்ட ஹேமந்த் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார்.
காதல் மற்றும் திருமணத்திற்கு உடன்பட மறுக்கும் பெண்கள் மீது, இளைஞர்கள் ஆசிட் வீசும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகளவில் நடைபெற்று வருகின்றன. கடந்த 2011-ஆம் ஆண்டு இம்மாதிரியான புகார்கள் 83-ஆக இருந்த நிலையில், 2015-ஆம் ஆண்டு 349-ஆக அதிகரித்தது. வழக்குகளாக பதிவு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், பெரும்பாலான வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காக பதியப்படாமல் உள்ளன.
கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழகத்தில் விநோதினி, வித்யா ஆகிய இரு பெண்கள் மீது ஒரே காலகட்டத்தில் ஆசிட் வீசப்பட்டு அவர்கள் இறந்த சம்பவங்கள் குறிப்பிடத்தக்கது.